Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க கெளபாய்களின் இன்றைய நிலை இதுதான்..!

து நடந்து சில நாட்கள் தான் ஆனது. இது இந்தியா அல்ல. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம். பரந்து விரிந்திருக்கும் நிலப்பரப்பு. அங்கு கனோவர் என்பவரின் தோட்டத்தில் முதலை ஒன்று புகுந்துவிட்டது. அதன் பின் நடந்தது... இன்று உலகச் செய்திகளில் வைரலாகிவருகிறது. 

" ஹலோ... டூட் என்னோட தோட்டத்துல முதலை புகுந்திடுச்சு... மாடுகள காப்பாத்தணும், சீக்கிரம் வாங்க..." என்று சொல்லி போனை வைக்கிறார்.

" பாய்ஸ்... ரொம்ப நாளைக்கு அப்புறம் நமக்கு வேலை வந்திருக்கு. சீக்கிரம் கிளம்புங்க..." என்று பெல்ஹாம் சொல்ல, அங்கிருக்கும் அந்த 50 வயதுக்காரர்கள் எல்லோரும் கிளம்புகிறார்கள். 

மழைத் தூறத் தொடங்கியிருந்தது. கைகளில் நரம்புகள் வெளியே தெரிய, கயிறுகளைச் சுழற்ற ஆரம்பித்தனர் அந்த அரைக்கிழவர்கள். நாலாபுறமும் கயிறுகளால் கட்டப்பட்டது அந்த முதலை. அதன் மீது இரண்டு பேர் உட்கார்ந்து, அதன் வாயைக் கட்ட ஆரம்பித்தனர். அப்போது அது, ஒருவரின் கையைக் கடித்து விட்டது. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனமாக இருக்கிறார். சில நிமிடங்களில், அதன் வாயைக் கட்டி, வண்டியில் ஏற்றி, கொண்டு செல்கிறார்கள். இந்த வீடியோ வைரலானதற்கு இந்த ஆச்சர்ய சம்பவம் மட்டுமே காரணமல்ல... அதை நிகழ்த்திய அந்த அரைக்கிழவர்களும் தான். அவர்கள் எல்லோரும்... "கெளபாய்ஸ்"...

கெளபாய்

"கெளபாய்" என்ற வார்த்தை நமக்குத் தரும் கற்பனையும், வசீகரமும் நிச்சயம் அவர்களின் வாழ்வு கிடையாது. அது முழுக்க முழுக்க சினிமாக்களால் கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கிறது. அந்த வாழ்வின் யதார்த்தம், வரலாறு முழுக்கவே மறைக்கப்பட்டிருக்கிறது. "கெளபாய்"க்கள் அடிப்படையில் கால்நடை மேய்ப்பர்கள். இவர்களின் வரலாறு ஸ்பெயினில் இருந்து தொடங்குகிறது . பரந்து விரிந்திருக்கும் அந்த நிலப்பரப்புகளில் கால்நடைகளை, நடந்தபடியே சென்று மேய்ப்பது என்பது அசாதாரணமான விஷயம். அதற்காக இந்த மேய்ப்பர்கள், குதிரைகளை உபயோகிக்கத் தொடங்கினார்கள்.  குதிரைகளில் காடு, மேடுகளைத் தாண்ட வேண்டும். முட்புதர்களில் புக வேண்டும். இது போன்ற சமயங்களில் தங்கள் கை, கால்கள் காயம்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, "Chaps" என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பேன்ட்டை அணிவார்கள். பெரும்பாலும், தடினமான துணியால் ஆன முழுக்கை சட்டையை அணிவார்கள். 

அந்த செம்மண் பரப்பில் நெடு நேரம், நெடுந்தூரம் பயணிக்கும் போது கடுமையான வெயிலும், மண் புழுதியும் அவர்கள் முகத்தை வாட்டி வதைக்கும். அதிலிருந்து தப்ப, அந்தப் பெரிய தொப்பியை அணிவார்கள். முட்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் இறங்கி நடக்கும் போது, கால்கள் காயம்பட்டு விடக் கூடாது என்பதற்காக பூட்ஸ் ஷூவை அணிவார்கள். அந்தக் காலங்களில், கால்நடைகளை மேய்க்கும் போது, அவற்றுக்கு பல ஆபத்துகள் ஏற்படும். குறிப்பாக, வன விலங்குகள் ஏதாவது அதைச் சாப்பிட முயலலாம், கொள்ளைக் கூட்டம் கால்நடைகளைக் கொள்ளையடிக்க வரலாம்... இந்த ஆபத்துகளிலிருந்து தங்களையும், கால்நடைகளையும் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தனர். அவர்களின் உடைகளுக்கும், அவர்கள் வைத்திருந்த பொருட்களுக்கும் பின்னிருக்கும் பின்கதை இதுதான். 

கௌபாய் உடைகள்

" வைல்ட் வெஸ்ட் " ( Wild West ) என்ற வகையிலான ஹாலிவுட் படங்கள், இவர்களைப் பெரும் கொள்ளைக்காரர்களாக காட்டத் தொடங்கியது. அந்த வித்தியாச உடைகளும், சினிமாக்காரர்கள் கற்பனையாக உருவாக்கிய அவர்கள் வாழ்க்கை முறையும் மிகவும் வசீகரமாக இருக்கவே, அது உலகம் முழுக்கப் பரவியது. நம்மூரில் நடிகர் ஜெய்சங்கர், கெளபாய் படங்களைப் பிரபலப்படுத்தினார். இப்படியாக, கடந்த இரண்டு தலைமுறைகளாக கெளபாய்கள் பற்றி எத்தனையோ விஷயங்கள் பொய்யும், மெய்யுமாக உலகில் முன்வைக்கப்பட்டாலும்... யதார்த்தத்தில் இன்று கெளபாய்களின் நிலை என்னவாக இருக்கிறது?...

கௌபாய்

மெக்ஸிகோ, கனடா , அமெரிக்கா போன்ற நாடுகளின் சில மாகாணங்களில் கெளபாய்கள் இன்று இருக்கிறார்கள். பல்வேறு பிரச்னைகளின் காரணமாக அவர்களின் வாழ்வு நிறைய சிக்கல்களில் சிக்கியிருக்கிறது. அடிப்படையில் கெளபாய்களின் வாழ்க்கை அத்தனை செளகர்யமானதல்ல. கால்நடைகளைப் பார்த்துக் கொள்வது தான் இவர்களின் முக்கியப் பணி. மிருகங்களுக்கும், இவர்களுக்கும் எப்போதுமே அதிக நெருக்கமுண்டு. கெளபாய்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் பிறப்பிலிருந்து , இறப்பு வரை அத்தனையையும் கவனித்துக் கொள்கிறார்கள். 24 மணிநேரமும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்கிறார்கள். கெளபாய்களில் சிலர் சொந்த நிலங்களையும், கால்நடைகளையும் கொண்டிருப்பர். பலர், பெருந்தோட்டங்களில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் பணிபுரிவார்கள்.

பொருளாதார அளவில் அத்தனை உறுதித்தன்மை அவர்கள் வாழ்வில் இருக்காது. அவர்களும் அதை நோக்கிய ஓட்டத்தில் அவ்வளவாகப் பங்கெடுக்க மாட்டார்கள். அந்தந்த நொடிகளுக்காக வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் அதிலிருந்து பெருமளவு விலகிவிட்டனர். அமெரிக்கப் பகுதிகளில் இருக்கும் கெளபாய்கள் இன்று இரண்டு முக்கியப் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். 

கௌபாய்ஸ்

இன்று கெளபாய்களின் வேலைகளை பல தொழில்நுட்பங்கள் கைப்பற்றிவிட்டன. பல பெரிய தோட்டங்களில் கால்நடைகளை மேய்க்க ட்ரோன்களை பறக்கவிடுகிறார்கள். சில வசதி படைத்த பண்ணைகளில் ஹெலிகாப்டரில் சென்று கால்நடை மேய்ச்சலைக் கண்காணிக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் சிறு, சிறு ரோபோக்களை உபயோகிக்கிறார்கள். இப்படியாக, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கெளபாய்களுக்கான வேலை வாய்ப்புகளை மொத்தமாக முடக்கிப் போட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ட்ரம்ப் பதவியேற்றதும், கால்நடை வளர்ப்புகளில் அவர் மேற்கொண்ட சட்ட மாற்றங்களும் சில பிரச்னைகளைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் ஆயில் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில், ஆரம்ப காலங்களில் அதிகப்படியான ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்கு அவர்கள் குறி வைத்தது கெளபாய்களைத் தான். அதிக சம்பளம் தருகிறோம், வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம் என்றெல்லாம் சொல்லி பல கெளபாய்களை வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், அடுத்த பத்தாண்டுகளிலேயே,நிறுவனங்கள் அவர்களை வெளியேற்றிவிட்டார்கள். அப்படி, நிறுவனங்களிலிருந்து வெளியேறிய கெளபாய்கள் இன்று, முடி வெட்டுவது, தோட்ட வேலைகளைச் செய்வது என வாழ கிடைக்கும் வழிகளையெல்லாம் நோக்கி ஓடுகிறார்கள். இன்னும் சிலர் சர்க்கஸ்களில் விலங்குகளைப் பராமரிக்கும் வேலைகளில் இருக்கிறார்கள். இவர்களின் இந்த வாழ்க்கையை இவர்களோடு பயணித்து புகைப்படத் தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார் பிரிட்டிஷ் போட்டோகிராபர் பீட்டர் பைர்ன். இது உலகம் முழுக்க மக்கள் மத்தியில் இருந்த கெளபாய் வாழ்வின் பிம்பத்தை மொத்தமாக உடைத்தெறிந்திருக்கிறது. 

கௌபாய்

கால மாற்றங்கள் ஏற்படுத்திச் செல்லும் மாற்றங்களில் யாரும், எதுவும் தப்பிட முடியாது. அதற்கு கெளபாய்களும் விதிவிலக்கல்ல. யதார்தத்தை மீறி இருந்தாலும், கெளபாய்களை ஒரு பிரமாண்ட  ஹீரோக்களாகவே கற்பனை செய்து பார்த்துவிட்ட நமக்கு, அவர்களின் இன்றைய யதார்த்த நிலை கொஞ்சம் வருத்தத்தைக் கொடுக்கத் தான் செய்கிறது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement