வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (25/06/2017)

கடைசி தொடர்பு:09:14 (26/06/2017)

இங்கிலாந்து நாடாளுமன்ற இணையதளம் முடக்கம்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இணையதளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என லண்டன் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் எம்பி-க்கள் தங்கள் இ-மெயில், மற்றும் யூசர் பக்கங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இக்குழப்பத்தால் சர்வர் பிரச்னை குறித்து ஆராயப்பட்டது. அப்போது மர்ம நபர்களால் நாடாளுமன்றத்தின் இணையதளப் பக்கங்கள் முடக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தை தவிர்த்து வேறெங்கும் நாடாளுமன்ற இணையப் பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், எம்பி-க்களுக்கு அனுப்பக்கூடிய முக்கியத் தகவல்கள், செய்திகள், மெயில்கள் என எதையும் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து சுகாதாரத்துறையின் இணையதளப் பக்கங்கள் இதேபோல் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடாளுமன்ற இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.