வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (25/06/2017)

கடைசி தொடர்பு:08:56 (26/06/2017)

'எங்களால் முடிந்தவரை தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறோம்!'- பாகிஸ்தான் ராணுவத் தளபதி

பாகிஸ்தானில் சில நாள்களுக்கு முன்னர் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதையொட்டி பாகிஸ்தான் ராணுவத் தளபதி காமார் ஜாவெத் பாஜ்வா, 'பாகிஸ்தான் அரசு தங்களால் முடிந்தவரை தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட்டுத்தான் வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான் குர்ரம் மாநிலத்தின் பாரச்சினார் பகுதியில் சில நாள்களுக்கு முன்னர் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் இதுவரை 67 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ரம்ஜான் மாதத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது பாகிஸ்தானை உலுக்கியுள்ளது. இதையொட்டி ராணுவத் தளபதி பாஜ்வா, ராவல்பிண்டியில் நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து அவர், 'மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக பல தியாகங்களையும் செய்து வருகிறது. ஆனால், அது பற்றி சரியான புரிதல் வெளியில் இல்லை. மேலும், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். எந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்கும் பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது.' என்று தெரிவித்துள்ளார்.