வைரலானது கனடா பிரதமரின் ரமலான் வாழ்த்து!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடெ-வின் ரமலான் வாழ்த்து வீடியோ பதிவு, வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஐந்து மில்லியன் பார்வையாளர்களையும் தாண்டி டாப் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

கனடா பிரதமர்

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களால் ரமலான் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஓர் உன்னத பெருநாள் விழா. இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் 'ரம்ஜான் பண்டிகை' மற்றும் தியாகத் திருநாள் 'பக்ரீத் பண்டிகை' என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தகையப் பெருநாளில் உலக மக்களுக்கு தனது ரமலான் வாழ்த்துகளைப் பதிவு செய்திருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலக மக்கள் அனைவருக்கும் தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், ’நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இன்று இதற்காக ஒன்று கூடியிருக்கிறோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்களை அதிகம் கவர்ந்த தலைவராக இருப்பவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே. இதுமாதிரியான உலகப் பண்டிகைகளுக்கு ட்ரூடே வாழ்த்து சொல்வது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாகத் தமிழர் புத்தாண்டுக்கு, பொங்கல் திருநாளுக்கு தமிழிலேயே வாழ்த்துக் கூறியவர் ட்ரூடே என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!