டிவி சீரியல்களைத் தயாரிக்கும் ஃபேஸ்புக்!

சமூக வலைதளத்தில், பெரிய வலைப் பின்னல்களுடன் செயல்பட்டுவரும் ஃபேஸ்புக் நிறுவனம், விரைவில் சொந்தமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது . இதற்காக, ஒவ்வொரு எபிசோடையும் மூன்று மில்லியன் டாலர் மதிப்பீட்டில் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தயாரிக்கும் தொலைக்காட்சி எபிசோடுகள், 17 வயது முதல் 30 வயதுள்ள இளைஞர்களைக் கவரும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது, இணையதளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு இணையப் பயன்பாட்டாளர்கள் நெட்ஃபிக்ஸ் தளத்தையும் அமேசான்.காம் தளத்தையும் அதிக அளவில் பயன்படுத்திவருகிறார்கள். இதிலிருந்து தனது தளத்தை நோக்கி இளைஞர்களை இழுக்கவும், ஃபேஸ்புக் நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. இதற்காக, ஹாலிவுட் ஸ்டூடியோவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ஆப்பிள் நிறுவனமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதன் தயாரிப்பில் உருவாகிவரும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு, 'பிளானட் ஆஃப் த ஆப்ஸ்' என்று பெயரிட்டுள்ளது. வீடியோ நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்காகவே, சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள ஜேமி எர்லிக்ட் மற்றும் ஜாக் வான் அம்பர்க்கையும் வேலைக்கு அமர்த்தி யிருக்கிறது. 

ஆக, மொபைல் சீரியல் காட்சிகள் கண்களுக்கு விருந்துகள் படைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!