Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தான் பேசாமால், தன்னைப் பற்றி உலகையே பேச வைத்த ஹெலன் கெல்லர் #HelenKeller

ஹெலன் கெல்லர்


‘வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்று சொல்வார்கள். இதன் பொருள், எந்த இக்கட்டு வந்தபோது, அதிலிருந்து பேசியே வென்றுவிடலாம் என்பதுதான். அந்தளவுக்கு ஒருவரின் வாழ்வில் பேச்சு முக்கியமானது. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த, உரிமைகளை உரக்கக்கூற என ஒவ்வொரு தருணத்திலும் உதவக்கூடியது பேச்சு. ஆனால், ஹெலன் கெல்லருக்கு இந்த வாய்ப்பு இல்லை. ஆனபோதும் உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். தன்னைப் போன்றோருக்கான உரிமைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.

1880 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 27) அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் பிறந்தார் ஹெலன். எல்லாக் குழந்தைகளையும்போல வளர்ந்துகொண்டிருந்த ஹெலன் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். அன்பு மகளுக்கு ஏற்பட்ட நிலை, பெற்றோர் தாளவியலாத துயரத்தில் ஆழ்ந்தனர். அதன்பின், பொருள்களைத் தடவி, முகர்ந்துப் பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன். மெள்ள, மெள்ள சமையலுக்கு அம்மாவுக்கு உதவுதற்குப் பழகுகினார்.

ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். அவர் ஹெலனின் கல்விக்கான வாசலைத் திறக்க உதவினார். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர். வழக்கமாகக் கதைகளில்தான் தேவதைகள் வருவார்கள். ஆனால், பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் தேவதையை அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன்.

ஹெலன் கெல்லர்

சல்லிவன் முதன்முதலாக ஹெலனைத் தொட்டதை, பின்னாளில் அவர் எழுதும்போது, 'அது அன்னையின் அரவணைப்புக்கு இணையானது' எனக் குறிப்பிட்டார். சல்லிவனின் அன்புப் பிணைப்பு ஹெலனுக்குக் கிட்டதட்ட 49 ஆண்டுகளுக்குக் கிடைத்தது. ஹெலன் எப்போது கையில் வைத்திருக்கும் பொம்மையிலிருந்து கற்றுக்கொடுப்பதைத் தொடங்கினார். d - o - l -l  என எழுதி பொம்மை எனப் புரிய வைக்கமுயன்றார். ஒரு விஷயத்தை உணர்வதன் மூலம் கற்றல் விரைவாக நடக்கும் என்பதைப் புரிந்துகொண்ட சல்லிவன் அந்த வழியில் கற்பிப்பதைத் தொடர்ந்தார். ப்ரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் ஹெலன். ஹெலனின் வாழ்வில் மிக முக்கியமானது அவர் ரேட் கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுதான். கடும் போராட்டங்களுக்குப் பிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்குதான் அவர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பார்வை, கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற ஒருவர் இளங்கலை முடித்தது அதுவே முதன்முறை. தனது 24 வயதில் முதுகலைப் பட்டமும் பெற்று வியப்பிலாழ்த்தினார்.

ஹெலனின் உற்ற தோழமை யார் என்றால் புத்தகங்கள்தாம். அவர் இளங்கலை படிக்கும்போதே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் (the story of my life) எனத் தன் சுயசரிதையை எழுதினார். அது பரவலாகக் கவனிப்புக்குள்ளானது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டுவருகின்றது. அதைத் தொடர்ந்து அவர் பத்திரிகைகளில் எழுதினார். தன் வாழ்வின் உந்துசக்தியாக விளங்கிய ஆசிரியர் சல்லிவன் பற்றி என் ஆசிரியர் எனும் பகுதியை எழுதினார்.

பெண்ணுரிமை, பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை உணர்வுபூர்வமான எழுத்துகளாக வடித்தெடுத்தார். தன் ஆசிரியர் உதவியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று ‘ஹெலன் கெல்லர் நிதி’ எனும் பெயரின் நிதி திரட்டினார். அப்போது கிடைத்த தொகையினை பார்வை, கேட்கும், பேசும் திறனற்றவர்களின் மேம்பாட்டுக்காகச் செலவிட்டார். இந்தியாவுக்கும் வந்திருந்தார். நம் நாட்டின் தேசிய கீதம் எழுதிய தாகூரைச் சந்தித்தார். அமெரிக்க சோஷலிசக் கட்சியின் தன் அரசியல் பங்களிப்பை ஆற்றினார்.

தனது குறைகளைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் உலகை வலம் வந்த ஹெலனை பக்கவாதம் வீட்டிலேயே முடக்கியது. 1968 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். தன் வாழ்நாளின் இறுதிவரை தெளிவாக அவரால் பேச முடியவில்லை. ஆனால், அவரின் அசராத பணிகளால் அவரைப் பற்றி உலகமே இன்றும் பேசிவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement