வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (27/06/2017)

கடைசி தொடர்பு:07:52 (27/06/2017)

சையது சலாவுதீனை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா!

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சலாவுதீன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பு, ஹிஸ்புல் முஜாகிதீன். இது, இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திவந்தது. கடந்த ஆண்டு, இந்த அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டது முதலே, காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்த நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது அமெரிக்கா. இதையடுத்து, அமெரிக்க குடிமக்கள் சையது சலாவுதீனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட சையது சலாவுதீனின் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள மோடி, அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க இருந்தபோது, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிரான அணு ஆயுதப் போரை நடத்தப்போவதாக,  2016-ம் ஆண்டு அறிவித்தவர்தான் சலாவுதீன். காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், அங்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு  சையத் சலாவுதீன் பின்புலமாகவும் இருந்துவந்தார். இதனால், சர்வதேசப் பயங்கரவாதியாக சலாவுதீன் அறிவிக்கப்பட வேண்டும் என இந்தியா போராடிவந்த நிலையில், தற்போது அமெரிக்கா இவரை சர்வேதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.