Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோபல் பரிசு வென்றவரை நடைப்பிணமாக சிறையிலிருந்து விடுவித்த சீனா!

தொழில்நுட்பரீதியில் இந்தியாவைவிட சீனா பல மடங்கு முன்னேறியிருந்தாலும், மனித உரிமைகளை மதிப்பதில் அந்த நாடு பூஜ்ஜியம்தான். `நாட்டுக்கு எதிரானவர்' என ஒருவர்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டால், அவரைச் சிறையில் போட்டு வதைக்க சீனா தயங்காது. 1989-ம் ஆண்டில் தியான்மென் சதுக்கச் சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. சீன அரசின் கொடுங்கோலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவர்கள், ஜனநாயகம் வேண்டி தியான்மென் சதுக்கத்தில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மாணவர்கள் மீது பீரங்கிகளை ஏவியது செங்கொடி ராணுவம். எதிர்த்து நின்றவர்கள் மீது பீரங்கிகள் ஏறிச் சென்றன. இளைஞர்களின் உடல்கள் சிதைந்தன. கை, கால்கள் துண்டாகித் துடித்தவர்கள் பலர். தியான்மென் சதுக்கம் ரத்தச் சகதியானது. சொந்த மக்களையே ஈவு இரக்கமற்று கொன்று குவித்த சீன அரசுக்கே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எனத் தெரியாது.

நோபல் பரிசு  வென்றவரை சிறையில் அடைத்த சீனா

தியான்மென் சதுக்கப் போராட்டத்தைத்  தூண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பேராசிரியர் லீ ஜியோபோவும் ஒருவர். இவரின் பேச்சில் சுதந்திரத்தின் அனல் தெறிக்கும். சீன மாணவர்களின் ஜனநாயக ஆசைக்கு விதையாக விழுந்தவரை, தற்போது நடைப்பிணமாக்கி சிறையிலிருந்து வெளியே தள்ளியிருக்கிறது சீன அரசு. தியான்மென் சதுக்கப் போராட்டம் உயிர் பலியில் முடிந்த பிறகு, ஜியோபோவுக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதே, `ஜனநாயக சீனா' என்ற இதழையும் அவர் நடத்திவந்தார். சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தி தொடர்ச்சியாகக் கட்டுரைகளும் எழுதினார்.

கடந்த 2008-ம் ஆண்டு சீனாவில் ஜனநாயம் வேண்டி `Charter 08 ' என்கிற அறிக்கை வெளியிட்டார். சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிஞர்கள் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருந்தனர். அத்துடன்  ஜியோபோவின் வெளியுலக வாழ்க்கை முடிந்தது. சீன அரசு அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது. உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டுவதாகவும் அரசின் மாண்புக்குக் களங்கம் கற்பிப்பதாகவும் கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜியோபோ சிறை செல்ல,  `ஜனநாயக சீனா' இதழும் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது. 

சிறந்த மனித உரிமைப் போராளியான ஜியோபோவுக்குக் கடந்த 2010-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மனித உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடியவர் என்ற வகையில் நோபல் பரிசு கிடைத்தது. வாங்கவிடுமா சீனா? நோபல் பரிசு பெற, அவரை ஓஸ்லோ செல்ல அனுமதிக்கவில்லை. சிறையிலிருந்து விடுவித்தால்தானே நார்வே செல்ல முடியும். `ஜியோபோவை எந்த வகையிலும் விடுவிக்க முடியாது... ' எனக் கறாராகச் சொல்லிவிட்டது சீன அரசு. நோபல் பரிசு கமிட்டியோ... ஜியோபோ வரவில்லையென்றாலும் மேடையில் அவருக்கென ஒரு நாற்காலி போட்டு `லியோ ஜியோபோ' என்ற பெயர்பலகையை வைத்தது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு அறிவிக்கப்பட்டவரோ அல்லது அவரின் குடும்பத்தினரோ விழாவில் பங்கேற்காமல்போனது அதுவே முதன்முறை. ஏனென்றால், ஜியோபோவின் மனைவியையும் பீஜிங்கில் வீட்டுக்காவலில் வைத்திருந்தது சீன அரசு. 

மேடையில் சேர் அளித்து சீனாவுக்கு நார்வே பதிலடி

சிறையிலேயே வாழ்க்கையைக் கழித்த ஜியோபோவுக்கு, தற்போது கல்லீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிருக்குப் போராடும் நிலையில்தான் வெளியுலகக் காற்றை அவரால் மீண்டும் சுவாசிக்க முடிந்திருக்கிறது. மெடிக்கல் பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், எந்தப் பலனும் இல்லை. சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவரின் உடல்நிலை இல்லை. நடைப்பிணமான நிலையில், ஷென்யாங் நகரிலுள்ள மருத்துவமனையில் 61 வயது ஜியோபோ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

`அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி என எந்தச் சிகிச்சையும் இனிமேல் அளிக்க முடியாது' என மருத்துவர்கள் சொன்னதாக ஜியோபோவின் மனைவி லீயூ ஜியா தெரிவிக்கும் வீடியோ ஒன்றை ரேடியோ ஃப்ரீ ஏஷியா வெளியிட்டுள்ளது. லீயூவின் தோழி ஒருவரின் உதவியுடன் இந்த வீடியோவை லியூ ஜியா அப்லோட் செய்துள்ளார். தற்போது ஜியோபோவுக்கு நோய் முற்றிய நிலையில் இருப்பதால், எந்தச் சிகிச்சையும் இனி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜியோபோவின் தந்தை லியூ லிங்கும் கல்லீரல் புற்றுநோயால்தான் இறந்தார். ``ஜியோபோவைப் புற்றுநோய் தாக்கியிருப்பது, முன்னரே சிறை நிர்வாகத்துக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் விஷயத்தை வெளியே கசியவிடாமல், உயிர் பிழைக்க முடியாத தருணத்தில் விடுவித்துள்ளது''  என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீன மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த சோஃபி ரிச்சர்ட்சன் கூறுகையில், ``ஜியோபோ எந்தத் தவறும் செய்யாதவர். அவரைக் குற்றவாளியாக்கி அநியாயமாக சிறையில் அடைத்து, கல்லறைக்குப் போகும் தருவாயில் விடுவித்திருக்கிறது சீன அரசு. இப்போதாவது, அவரின் விருப்பப்படி சிகிச்சை மேற்கொள்ள வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்'' எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். அமெரிக்க அரசும் இதையே வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் ஜியோபோ சிகிச்சை மேற்கொள்ள விரும்பினால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன அரசோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தியான்மென் சதுக்கத்தின் ரத்தக்கறை படிந்த கதையைத் தன் இளைய தலைமுறை அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மட்டும் குறியாக இருக்கிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close