பூமியைப் பார்வையிட்டார்களா வேற்றுகிரகவாசிகள்...? விடை தெரியா மர்மங்கள்! | Did Aliens Visit Earth in the Past

வெளியிடப்பட்ட நேரம்: 21:16 (29/06/2017)

கடைசி தொடர்பு:21:16 (29/06/2017)

பூமியைப் பார்வையிட்டார்களா வேற்றுகிரகவாசிகள்...? விடை தெரியா மர்மங்கள்!

"இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அல்லது வேறு ஏதேனும் கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா?" - தற்போது இந்த உலகை ஆட்டிப்படைக்கும் மில்லியன் டாலர் கேள்வி இதுதான். ஒருவேளை வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்குமானால், அவை எப்படி இருக்கும்? மனிதர்களைவிட பலமடங்கு பலம் பொருந்தியவையாக இருக்குமா? அல்லது மனிதனுக்குக் கட்டுப்பட்டவையாக இருக்குமா? அவற்றின் செயல்கள் எப்படி இருக்கும்? அவை எப்படி உயிர் வாழ்கின்றன? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடித்தான், பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான யூரி மில்னர், கடந்த 2015-ஆம் ஆண்டு 'Break through initiatives' என்ற ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே இன்னும் பத்து ஆண்டுகளில் வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் தெரிந்து கொள்வதுதான். இந்த அமைப்புக்குக் 'கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்' ஆதரவு அளித்ததுடன் பெரும்தொகையையும் கொடுத்து உதவியிருக்கிறார். இந்நிலையில் வேற்றுக்கிரகவாசிகளின் பரிணாம வடிவங்கள், பூமியில் வந்து இறங்கியதற்க்கான ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தனது இணையதளத்தில் சமீபத்தில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீகோ கேன்யன் உட்டா குகை ஓவியம்

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்கிறார்கள் என நம்பும் மக்களும், ஆராய்ச்சியாளர்களும் உண்டு. கடந்த 1971-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல், வேற்றுக்கிரகவாசிகளை நேரடியாகப் பார்த்ததாகத் தெரிவித்திருந்தார். அப்போது அவரது கருத்து, அமெரிக்க மக்களை மட்டுமல்லாமல் பெண்டகன் பாதுகாப்பு அமைச்சகம், நாசா எனப் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போதும் பல பகுதிகளில் 'Unidentified Flying Object (UFO) எனப்படும் பறக்கும் தட்டு' பறந்ததை மக்கள் பார்த்ததாகச் சொல்லி வருகிறார்கள். இதேபோல், "வேற்றுக்கிரகவாசிகள் உண்மையில் இருப்பார்களேயானால், அவர்கள் பூமிக்கு வரவேண்டிய அவசியம் என்ன?". இதற்கு வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பதில் விசித்திரமானதாக உள்ளது. "மற்ற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளதா? அல்லது உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? என நாம் எந்த நோக்கத்திற்காக மற்றக் கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வேவு பார்க்கிறோமோ? அதே நோக்கத்தில்தான் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா? என்று வேவுபார்க்கவே வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்க வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.

இத்தாலி குகை ஓவியம்

"வேற்றுக்கிரகவாசிகளும் இல்லை; பறக்கும்தட்டுகளும் இல்லை; அவை எல்லாமே கட்டுக்கதைகள்" என சத்தியம் செய்து மறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். இங்கு பிரச்னை என்னவென்றால், "வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா அல்லது இல்லையா  என்பதைவிடவும், அதுபோன்ற மனிதர்கள் ஒருவேளை இருப்பார்களேயானால், பூமிக்கு அவர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற கவலைதான் அதிகம். ஏனெனில், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவுக்கூர்மை உள்ளவர்களாகவும், அதிநவீன தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்" என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. 

கிம்பர்லி குகை ஓவியம்

"எகிப்து பிரமிடுகளுக்குள் மம்மிகள் இல்லை; அங்கு எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளின் வடிவங்களும் பூமியைச்சேர்ந்த எழுத்து வடிவங்கள் இல்லை; மேலும் பிரமிடுகளைப் பொறுத்தவரை, அதீத திறன்களைக்கொண்டும், நவீன தொழில்நுட்பங்களுடனும் கட்டப்பட்டுள்ளன. எனவே, இது மனிதர்களால் கட்டப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதேபோல், "பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஈஸ்டர் தீவில் உள்ள 'மோய் சிலைகளை' உருவாக்கும் சக்திகளும் மனிதனுக்கு இல்லை. ஏனென்றால், அந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் 20 முதல் 30 அடி உயரம்வரை இருப்பதுடன் 40 டன்வரை எடை கொண்டவையாக உள்ளன. சிலி நாட்டிலிருந்து சுமார் 2,200 மைல் தொலைவிலுள்ள இந்தத் தீவுக்குப் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் மனிதர்கள் எப்படிச் சென்றிருக்க முடியும்? அப்படிச் சென்றிருந்தாலும் 40 டன் எடைகொண்ட கற்களை அவர்களால் எப்படி எடுத்துச் சென்றிருக்க முடியும்? எனவே, இவை எல்லாமே வேற்றுக்கிரகவாசிகளால் உருவாக்கப்பட்டவைதான்" என்று பலரும் அடித்துக் கூறுகிறார்கள். 

யார் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்; நான் நம்பமாட்டேன் என்கிறீர்களா? அப்படியானால், கீழே உள்ளவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்!

இஸ்தான்புல் அருங்காட்சியக சிற்பம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இத்தாலி குகை ஓவியங்கள், அமெரிக்காவில் உள்ள 'சீகோ கேன்யன் உட்டா' குகை ஓவியங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி குகையில் காணப்படும் ஓவியங்களில் மனிதர்கள் ஆகாயத்தில் பறப்பது போலவும், அவர்களின் தலையில் தகவல்தொடர்பு ஆண்டெனாக்களுடன் கவசங்கள் இருப்பதுபோன்றும் படங்கள் வரையப்பட்டுள்ளன. இவை எப்படி சாத்தியம்?

நாஸ்கா ஓவியங்கள்

மத்திய அமெரிக்காவில் உள்ள 'குவாட்டமாலா' பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது ஒரு வேற்றுக்கிரகவாசியின் மாதிரி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இது பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இன்றைய விண்வெளி வீரரின் உருவ அமைப்பில் இருக்கும் இந்தச்சிற்பம், ஒரு மனிதன் தலைக்கவசத்துடன் இருப்பதுபோன்று  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் வெளியுலகைப் பார்ப்பதற்கான கண்ணாடி, சுவாசிப்பதற்கான குழாய், மார்பில் 'கண்ட்ரோல் சிஸ்டம்' மற்றும் தலையில் ஆண்டெனா காணப்படுகிறது. இந்தச் சிற்பம் இன்றைய நவீன விண்வெளி வீரரை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இதேபோல் கோட்டர்மாலா சிற்பம்இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு சிற்பம், அனைவரின் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. பலநூறு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாக அறியப்படும் அந்தச் சிற்பமானது, ஒரு மனிதன் சிறிய ரக விமானத்தை ஓட்டிச்செல்வது போன்று உள்ளது. எரிபொருளால் உருவாகும் நெருப்பை வெளியேற்றும் கருவிகூட மிகத்துல்லியமாக அதில் இடம்பெற்றுள்ளது.

"நம் அனைவருக்கும் பெயரளவில் பரிச்சயமான 'மாயன் நாகரிகத்தை' மட்டும் சரியான முறையில் ஆராய்ச்சி செய்தாலே, இந்த உலகத்தைப்பற்றிய பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மாயன்களின் விண்வெளி கடவுள் 'பக்கால்'. சுமார் எட்டு அடிக்கும் அதிகமான உயரம்கொண்ட மிகப்பெரிய பலசாலியான இந்தக் கடவுள்தான், மாயன் இனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் என அப்பகுதி மக்கள் இப்போதும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அப்பேற்பட்ட 'பக்கால்', பாதாள உலகத்துக்கோ அல்லது ஆகாய உலகத்துக்கோ சென்றுவரும் சக்தி கொண்டவராக இருந்திருக்கிறார். இதற்காகப் பறக்கும் ஒரு ஊர்தியையும் அவர் வைத்திருந்ததாகவும், அந்த ஊர்தியானது பக்கால் கடவுள் இன்றைய ராக்கெட் போன்ற வடிவமைப்புடன் இருந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. என்ன, நம்ப முடியவில்லையா? மெக்சிகோவின் 'பொலான்கோ' நகரில் உள்ள மாயன் கோவிலின் ரகசிய அறை ஒன்றில், 'பக்கால்' கடவுள் பறக்கும் ஊர்தியில் பயணம் செய்வது போன்றதொரு சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதே அதற்குச் சாட்சி. அந்தச் சிற்பத்தின் அருகே மாயன் எழுத்துகளால் குறிப்புரையும் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவல்களை எல்லாம் நம்மைப்போலவே முதலில் ஆராய்ச்சியாளர்களும் நம்ப மறுத்ததுடன், ஆச்சர்யமாகத்தான் பார்த்துள்ளனர். எனினும், பின்னர் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே அவற்றை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குகை ஓவியங்கள், சிற்பங்கள், விமானம்போன்ற ஊர்திகள் போன்றவற்றை எப்படி ஒரே மாதிரியாக வரையவும், செதுக்கவும் முடியும்? அவையெல்லாம் கற்பனை ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, வெவ்வேறு பகுதிகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் எப்படி ஒரே மாதிரியான வடிவங்களைக் கற்பனையாக வரையவோ அல்லது செதுக்கவோ முடியும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் எதை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்? யாரைப் பார்த்து மனிதர்கள் இவற்றை உருவாக்கி இருப்பார்கள்.? என்பதே ஆராய்ச்சியாளர்களின் மிகப்பெரிய ஆச்சர்யம். 

'நாஸ்கா லைன்ஸ்'... அனைவருமே தெரிந்திருப்பீர்கள்... 'பெரு' நாட்டில் நாஸ்கா பாலைவனத்தில் 80 கிலோமீட்டர் சதுர பரப்பளவில் விலங்குகளின் மிகப்பெரிய நாஸ்கா விமான ஓடுதளம் உருவங்களும், மிகப்பெரிய கோடுகளும் வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியங்களை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சென்று ஆகாயத்தில் இருந்து பார்த்தால்தான் நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த 'நாஸ்கா லைன்ஸ்' எப்போது யாரால் உருவாக்கப்பட்டது? என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம், அந்த நாட்டு அரசு இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட ரகசிய இடமாக அறிவித்திருக்கிறது. இங்கு ஆராய்ச்சியாளர்கள்கூட செல்லமுடியாது. இங்கு மலைகளை சரிசெய்து சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமான ஓடுதளம் போன்ற ஒரு அமைப்பு இன்றும் இருக்கிறது. மிகத் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஓடுதளம் மலைகளைச் சமன் செய்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வேற்றுக்கிரகவாசிகள் தங்களின் விண்கலங்களைப் பூமியில் தரையிறக்குவதற்கு இந்த நாஸ்கா ஓடுதளத்தைத்தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

'வேற்றுக்கிரவாசிகள் மற்றும் UFO' பற்றிய மாதிரிகள் உருவாக்கபட்டதற்கு நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது... ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது. அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள், அமெரிக்க போர்வீரர்களை வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வருவதாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டுசென்ற உணவுவகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமானதளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர். அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள். பின்னர் அந்த ஆதிவாசிகள், ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களைப் பார்த்து, அதை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத்தொடங்கினார்கள். இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் மறுக்கமுடியாத கருத்தாக உள்ளது.

பக்கால் கடவுள் ஒப்பீடு

அப்படியானால், "பூமிக்கு வருகை தந்த வேற்றுக்கிரகவாசிகள் எங்கிருந்து வந்தார்கள்? என்ன கொண்டு செல்வதற்காக அவர்கள் பூமிக்கு வந்தார்கள்? அவர்கள் எப்படி இருப்பார்கள்?" என்று கண்டறியவே பல வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், இன்றுவரை வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய எந்தவொரு தெளிவான முடிவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

விமானம் ஒப்பீடு

ஸ்டீபன் ஹாக்கிங் இப்போதும், “ஏதோ ஒரு கிரகத்திலுள்ள ஒரு புத்திசாலி உயிரினம் நம் பூமியில் மின்னும் விளக்கொளிகளை நோட்டமிட்டுக்கொண்டிருக்கலாம். பூமிக்கு வரும் வழியும் அந்த உயிரினத்திற்குத் தெரிந்திருக்கலாம். அதுபோன்ற உயிரினங்களைக் கண்டுபிடிக்க நாம் அனைவரும் தீவிரமாகச் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருப்பினும், அவை நமக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் முடியலாம்” என்று ஆராய்ச்சியுடன் சேர்த்து எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்.


டிரெண்டிங் @ விகடன்