பிரான்ஸில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: எட்டு பேர் படுகாயம்!

பிரான்ஸ் நாட்டில் மசூதி அருகே நள்ளிரவில் நடந்தத் தாக்குதலில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் தாக்குதல்

பிரான்ஸ் நாட்டிலுள்ள அவிக்னான் என்ற பகுதியில் அர்ரமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணி அளவில் மசூதியில் தொழுகை முடித்து மக்கள் வெளிவந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இளைஞர்கள் இருவர் மசூதியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். இதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இத்தாக்குதல் சம்பவம் தீவிரவாதிகளால் நடத்தப்படவில்லை. ஏதோ இளைஞர்களுக்கு நடுவே உள்ள பகையால் நடந்த சம்பவமாகவே தெரிகிறது. விசாரணை முடிந்த பின்னர்தான் சரியான விவரங்கள் தெரியவரும்’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, சில நாள்களுக்கு முன்னர் இதேபோல பிரான்ஸில் ஒரு மசூதியின் அருகே மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், கார் ஏற்றி ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இம்மாதிரியான சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால் பிரான்ஸின் முக்கிய நகரங்கள் எங்கும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!