வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:09 (05/07/2017)

ஃபெட்னா - பேரவைத் தமிழ் விழா நிறைவு!

`ஃபெட்னா' என அழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும், மின்னாபோலிஸ் நகர தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய 30 ஆண்டு பேரவைத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, இயக்குநர் மிஷ்கின், செயற்பாட்டாளர் கார்த்திகேயன் தேவசேனாதிபதி, நடிகர் சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் தொடக்கமாக அமெரிக்கவாழ் தமிழ்க் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் தமிழிசையும் மினோசோட்டா மாநில தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. பிறகு தமிழகத்தைச் சேர்ந்த `நிமிர்வு' கலையகத்தின் சக்தியுடன் இணைந்து பறை உள்ளிட்ட தமிழர்களின் இசைக்கருவிகளின் இசையும் கரகாட்டம், சிலம்பம் போன்றவையும் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த `பெருமுரசை' முழங்கினர். இதில் கயானா நாட்டுப் பிரதமரும் தமிழருமான நாகமுத்து கலந்துகொண்டு தமிழ்ப் பெருமுரசை முழங்கினார். 

ஃபெட்னா

பேரவைத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை விழா மலரை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் நிகழ்ச்சியை நடத்தினர் சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர். கயானா நாட்டுத் தலைமை அமைச்சர் உரையாற்றும்போது, கயானா நாட்டுத் தமிழர்களின் பின்புலம், தமிழர்களின் மேம்பட்ட ஒருங்கிணைப்பின் தேவை, பெண்டிர் உரிமை குறித்தான விழிப்புஉணர்வு முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதன் பிறகு நடிகர் சின்னிஜெயந்தின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது. 

நடிகை ரோகிணி,கவிஞர் சுகிர்தராணி

‘தமிழ் மரபுகள், மீட்கப்படுகின்றனவா... அழிக்கப்படுகின்றனவா?' எனும் தலைப்பில் நடிகை ரோகிணியின் நெறியாள்கையில் இடம்பெற்ற கருத்துக் களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலுவின் உரை இடம்பெற்றது. 

``இங்கு இசைக்கப்பட்ட பறையிசையைச் செவி குளிரக் கேட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்துள்ள நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தன் பேச்சில் குறிப்பிட்ட கவிஞர் சுகிர்தராணி தலைமை வகிக்க, `தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?' எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க் கவிஞர்கள் பாடிய கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன. கவிதை நிகழ்வுகள் முடிந்த பிறகு, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் `சாரங்கதாரன்' நாடகம் நடத்தப்பட்டது.  நாடகத்தின் முடிவில் மினோசோட்டா மாநில தமிழ்ச் சங்கத்தினரால் தமிழ் மரபுக்கலைகள் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குநருமான மிஷ்கின் உரை நிகழ்த்தினார். 

பேரவைத் தமிழ்விழா

இந்த ஆண்டுக்கான அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் கிளாரன்ஸ் ஜெய், தகவல்தொழில்நுட்ப வல்லுநர் பழனி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மினோசோட்டா தமிழ்ச் சங்கத்தினரால் நேர்த்தியாகத் தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண் பாடப்பட்டது. அது பெரும் வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப.நல்லசிவம், தமிழிசையில் பல பாடல்கள் பாடினார். 

இரவு உணவுக்குப் பிறகு அரங்கம் ஆர்த்தெழுந்து அதிர்ந்தது. மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் கிராமிய, இனமான உணர்வுப் பாடல்களுக்குப் பலதரப்பட்ட தமிழ்ச் சங்கத்தினர் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கூத்துகளாட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்து வந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, தமக்கு அளிக்கப்பட்ட விருதையேற்றுச் சிறப்புரையாற்றினார். அமெரிக்கவாழ் தமிழர்கள் ஒன்றுகூடிக் களித்த 
30-ம் ஆண்டு பேரவைத் தமிழ் விழா, அவர்களின் இடையே இனிய நினைவுகளை விதைத்து முடிவுபெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்