இஸ்ரேலிடம் மோடியும் இந்தியாவும் இதையும் கற்றுக்கொள்ள வேண்டும்..!


மோடி

மூன்று நாள் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. அங்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதால் அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயங்கரவாதம், இனவெறி ஆகியற்றை தடுப்பது மற்றும் பொருளாதாரம், ராணுவத்தை மேம்படுத்துவது போன்றவை பற்றி இரு நாட்டு பிரதமர்களும் விவாதிப்பதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் இஸ்ரேலிடம் நாம் கற்றுக்கொள்ள வேறு ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது அது நீர் மேலாண்மையும், விவசாயமும்.

இஸ்ரேலின் விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பு, முதலில் அந்த நாட்டைப் பற்றியும் அதன் நிலப்பரப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆசியாவின் மேற்குப் பகுதியில் மத்தியத் தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் பாலஸ்தீனத்திற்கு அருகே அமைந்துள்ளது இஸ்ரேல். நாட்டின் மொத்தப் பரப்பளவு சராசரியாக 20770 ச.கிமீட்டர். அந்த நாட்டின் பரப்பளவும் எல்லையும் அவ்வப்போது மாறுபாடுவது வேறு விஷயம்.

தனது நாட்டிற்கு தேவைப்படும் உணவுப்பொருள்களில் 95 சதவிகித பொருள்களை மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பம் மூலமாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த இஸ்ரேலின் நிலப்பரப்பளவில் பெரும்பகுதி பாலைவனப்பகுதிகள் என்பது ஆச்சர்யமான விஷயம். தமிழ்நாட்டினை விடவும் குறைந்த பரப்பளவு இருக்கும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பீட்டுப் பார்த்தால் அதிகமாக இருக்கும்.

இஸ்ரேல் தண்ணீர் குழாய்இத்தனைக்கும் இஸ்ரேலிடம் கரைபுரண்டு ஓடும் ஆறுகள் இல்லை. சராசரியாக ஆறு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலையில் எப்படி இந்த விவசாய உற்பத்தி சாத்தியமானது?

1948ல் இஸ்ரேல் விடுதலை பெற்றது. அப்போது நாடு முழுதும் உப்பு மண் நிலங்கள் நிறைந்திருந்தன. பெரும்பாலான நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன செய்வது என்று யோசித்தார்கள். மரங்களை நட்டார்கள். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார்கள்.

அதற்கு பலன் கிடைத்தது. விடுதலை பெற்றபோது வெறும் 4 லட்சம் ஏக்கர்களாக இருந்த பாசனப்பரப்பு இன்றைக்கு 10 லட்சம் ஏக்கர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இது மிக அசாதாரண வளர்ச்சி. இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலின் விவசாயப் பொருள்கள் உற்பத்தி அளவு மக்கள் தொகை வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் அதிகரித்திருக்கிறது.

கலிலியோ கடல் என்னும் ஒரு நன்னீர் ஏரி அவர்களிடம் இருந்தது. அதை விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்த்தால் அது கடல் மட்டத்திலிருந்து 214 மீட்டர் தாழ்வாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அவர்களுக்கு அந்த யோசனை உதித்தது. ஏரி நீரை பம்பிங் மூலமாக நாட்டின் மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வதுதான் திட்டம். சற்று செலவும் அதிக காலமும் ஆகும் திட்டம்தான் இருந்தாலும் செயல்படுத்தினார்கள். National Water Carrier of Israel எனப்படும் அந்தத் திட்டம் நாட்டில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களையும் ஒன்றிணைக்குமாறு வடிவமைக்கப்பட்டது. அந்தத் திட்டம் முடிவு பெறும்போது அவர்களிடம் 130 கி.மீ நீளமுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நீர்ப்பாதை இருந்தது.

நீர் ஆதாரங்களை ஒருங்கிணைத்தது மூலமாக விவசாயம் செய்யவும், குடிநீர்த்தேவைக்கும் குறைந்த அளவே நீர் கிடைத்தாலும் அந்த நீர்ப்பாதை வழியாக நாடு முழுமைக்கும் சீராகப் பெற முடிந்தது.

இஸ்ரேல் அரசு விவசாயிகள் நலனில் முழுக்கவனம் செலுத்தியது. ஆராய்ச்சியாளர்களை விவசாயத்துக்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது.

National water carrier of israel

விவசாயிகளைச் சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் எனப் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தியது. அதன் விளைவாக விவசாயம் செய்யும் பரப்பு அதிகரித்து விளைச்சலும் அதிகரித்தது. அதனால் தனது தேவையை தானே நிறைவு செய்து, ஏற்றுமதியும் செய்கிறது இஸ்ரேல். வெறும் பாலைவன மணலில் விவசாயம் செய்ய முடியாது என்ற வீண் அறிவுரைகளைக் கடந்து அதைத் தொழில்நுட்பத்தின் மூலமாக மாற்றிக்காட்டியிருக்கும் இஸ்ரேல் இன்றைக்கு நீர் மேலாண்மையில் உலகின் முன்னோடி. உலகின் மற்ற நாடுகள் இஸ்ரேலிடம் அவர்களின் விவசாயம், நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தைக் கற்றுகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

பிரதமர் மோடி அவர்கள் விமானம் மூலமாக நாடு நாடாகச் சுற்றுவதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் சிறந்த திட்டங்களை ஆராய்ந்து இங்கே கொண்டு வருகிறார் என்பதே அது. நல்ல விஷயம்தான்.

ஜப்பானிற்கு சென்று புல்லட் ரயில்களையும் அமெரிக்காவிற்கு சென்று அணு உலைகளையும வாங்கி வர பிரதமர் மோடியால் முடியுமென்றால் இஸ்ரேலின் விவசாய தொழில்நுட்பங்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்தானே? அது உங்களால் முடியாதென்றால் குறைந்தபட்சம் விவசாயிகளை எப்படி மதிப்பது என்பதையாவது இஸ்ரேலிடம் கற்று வாருங்கள் பிரதமர் அவர்களே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!