Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் வெப்பநிலை... அழியத்தொடங்கும் பவளப்பாறைகள்... மனிதனுக்கு எச்சரிக்கை! #TheGreatBarrierReef

பவளப்பாறைகள்

“பளீர் மஞ்சள் கலர்ல பாத்திங்களா? நீலக் கலர்? இல்லாட்டி பிங்க் கலர்?” இது தி கிரேட் பாரியர் ரீஃப்பிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பார்த்து டூரிஸ்ட் கையிட்கள் அன்றாடம் கேட்கும் கேள்வி. அவர்கள் பாத்தீங்களா எனக் கேட்பது விதவிதமான பவளப்பாறைகளைத்தான். “ஆனால், உண்மையில் பவளப்பாறைகள் இப்படி வெவ்வேறு நிறங்களில் இருக்காது. இப்படி இருப்பதற்குக் காரணம் அவை அழியும் தருவாயில் இருக்கின்றன” என்று அதிர்ச்சியளிக்கிறார் கடல் உயிரியலாளர் லார்னா ஹோவ்லெட் (Lorna Howlett). இதுதான் இன்று அங்கு இருக்கும் பல்வேறு உயிரினங்களின் நிலையும்!

சொல்லும்போதே கம்பீரமாக ஒலிக்கும் “தி கிரேட் பாரியர் ரீஃப்” என்ற இந்த இடம், UNESCOவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 2400 கி.மீ. நீளத்தில், விதவிதமாக 400 வகைகளில் 2900 தனிப் பவளப்பாறைகள், 1500 வகை மீன்கள், 4000 வகை மெல்லுடலிகள் (Mollusca), 900 சிறுதீவுகள் என அனைத்தையும் உள்ளடக்கி ஒய்யாரமாக மிதந்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின்  வடகிழக்கு கடற்கரையில், குயின்ஸ்லாந்தின் அருகில் இருக்கும் கோரல் கடலின் மேல் வீற்றிருக்கும் இது, அளவில் யுனைடெட் கிங்டத்தை (UK) விடவும் பெரியது.

இன்றைய நிலை

இப்படிப்பட்ட பெருமைமிகு தி கிரேட் பாரியர் ரீஃப் இன்று மிகவும் மோசமான நிலையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 18 மாதங்களில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் வெளிறிப்போய் (Coral Bleaching) இறந்துப்போயிருக்கின்றன. கலர் கலராக நிறம் மாறும் பவளப்பாறைகளில் சில மீண்டும் புத்துயிர் பெற்றிருந்தாலும், பல பாசிப் படிந்து அழிந்துப் போயிருக்கின்றன. குயின்ஸ்லாந்தில் இருக்கும் பல்வேறு இயற்கைத் தாவரங்களை அழிப்பதும், காடுகளை அழிப்பதும், தி கிரேட் பாரியர் ரீஃப்பில் இருக்கும் பல நீர்ப்பிடிப்புத் தளங்களை வற்றிப்போகச் செய்திருக்கிறது. இந்த அழிவு ஒருபுறம் இருக்க, பச்சை வனங்கள் குறைந்ததால், வாகனப் புகை மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது குயின்ஸ்லாந்து!

பவளப்பாறைகள்

என்ன காரணம்?

உலகில் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிகமாகி விட்ட நிலையில், பல கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் அந்த வெப்பத்தை உறிஞ்சத் தொடங்கி விட்டன. இதனால் நீரின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இத்தகைய சூட்டில், பவளப்பாறைகள் வாழ்வதென்பதே சற்றுக் கடினம்தான். அதுவும் மனிதர்கள் போலதான் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது அதிக வெப்பத்தால் நோய் கண்டு சாவின் விளிம்பு வரை எல்லாம் சென்றுத் திரும்பி வரும். ஆனால் இப்போது அப்படி மீண்டும் புத்துயிர் பெறுவது என்பது சற்றுக் குறைந்து விட்டது” என்கிறார்கள் கடல் உயிரியலாளர்கள்.

UNESCO முடிவு

இப்படி ஒரு நிலையில், UNESCOவின் பாரம்பர்ய தளமான இது ஆபத்தான நிலையிலிருக்கும் தளங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நூலிழையில் அதைத் தவிர்த்து ஆஸ்திரேலியா தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. தி கிரேட் பாரியர் ரீஃப்பை ஆய்வு செய்த UNESCOவின் உலக பாரம்பர்யக் குழு, ரீஃப்பை காப்பாற்ற ஆஸ்திரேலியா அரசு எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்க வகையில்தான் உள்ளன. ஆனாலும் பவளப்பாறைகள் குறைந்துக் கொண்டே வருவது கவலை அளிக்கிறது. இன்னமும் கூடுதல் கவனம் தேவை என்று எச்சரித்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு வரை இந்தத் தளத்தைக் கவனமாக ஆராய்ந்து, என்னென்ன முயற்சிகள் இதைக் காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவுத்துள்ளது. 2020இல் தனது அடுத்த ஆய்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

பவளப்பாறைகள்

மீண்டு எழுமா?

Reef Encounter என்ற ஆடம்பர மினி கப்பலின் கேப்டன் பென் ஹேல்ஸ் (Ben Hales) பேசுகையில், “Coral Bleaching என்ற ஒன்று நிறையவே நடந்திருந்தாலும் பவளப்பாறைகள் மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கிவிட்டன. நாங்கள் சென்று பார்த்தவரை பல்வேறு கடற்வாழ் உயிரினங்களைக் காண முடிந்தது. மீன்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், மற்றும் பிற உயிரினங்கள் பல இன்னமும் ஆரோக்கியமாக இருக்கிறது!” என்று நம்பிக்கை தெரிவித்தார். நிச்சயம் தி கிரேட் பாரியார் ரீஃப் மீண்டு எழும், ஆனால் அதற்கான சூழலையையும், ஆரோக்கியமான சீதோஷண நிலையையும், அதன் அரசாங்கம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close