'உலக நாடுகள் உங்களுக்கு ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள்?'- மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

இந்தியா - சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, 'பிரதமர் உலகம் முழுவதும் பயணம் செய்து நட்பு வளர்த்துள்ளார். பிறகு ஏன் ஒரு நாடு கூட சீனா மற்றும் பாகிஸ்தான் விஷயத்தில் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தவ் தாக்கரே

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக் குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இப்படி இரு நாடுகளும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதேபோல, பாகிஸ்தானுடனும் இந்தியாவுக்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்படி இந்தியாவின் இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே, 'சீனா, நமக்கு எதிரியாக மாறியுள்ளது. பாகிஸ்தானும் நம்முடன் இயைந்து போக மறுக்கிறது. நம் நாட்டிடம் எங்காவது குறை உள்ளதா. பிரதமர், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நட்பு வளர்த்து வருகிறார். ஆனால், ஒரு நாடும், நம் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லையே ஏன். பா.ஜ.க, உள்நாட்டு அரசியலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தால், அது அக்கட்சி நாட்டுக்குச் செய்யும் துரோகமாக அமையும். ஆனால், ஒரு போர் என்பது அப்படியில்லை' என்று கறாராக பா.ஜ.க-வை விமர்சித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!