காசா மீது ஏவுகணை தாக்குதல்... இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசா நோக்கி ஏவுகணை ஒன்றை செலுத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி இஸ்ரேல் அரசு, மெட்டல் டிடெக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் பொருத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் செயலைக் கண்டித்து ஜெருசலத்தின்  பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதையொட்டி, மூன்று  பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. இதனால், கலவரம் மேலும் அதிகரித்தது. 

இதைத் தொடர்ந்து பாலஸ்தீன பிரதமர் முகம்மது அப்பாஸ், ’இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் இந்தச் சோதனையைக் கைவிடும் வரையில் இஸ்ரேல் உடன் எந்தத் தொடர்பும் இல்லை’ எனக் கூறினார்.

இதையடுத்துதான் பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் எல்லைக்குள் ஒரு ஏவுகணையைச் செலுத்தியுள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடத்துக்கு ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளது. இந்த இரு தாக்குதல்களிலும் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லாத போதும் இஸ்ரேல்- பாலஸ்தீனத்துக்கு இடையில் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!