வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (26/07/2017)

கடைசி தொடர்பு:10:27 (26/07/2017)

ஃபுகுஷிமா தடயங்களும்.. கூடங்குளம் குறித்த சில கேள்விகளும்...!

ஃபுக்குஷிமா

நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி தங்கள் நாட்டில் நிகழும் ஒன்று என்பதால் அதனுடன் கிட்டத்தட்ட ஒரு நேச உறவையே வளர்த்தெடுத்துவிட்ட ஜப்பானுக்கு... 2011-ம் ஆண்டு, விதி மிகுந்த வலியுடன் அமைந்தது, 9 ரிக்டர் ஸ்கேல் அளவில் கடலிலும் நிலத்திலும் ஏற்பட்ட நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது கரையோர மாவட்டமான ஃபுகுஷிமா. டோக்கியோ மின்சார உற்பத்தி நிறுவனம் தனது அணு உலை மையத்தை அதே ஃபுகுஷிமாவில்தான் நிறுவி இருந்தது. எதிர்பாராமல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உலையின் சூட்டைத் தணிக்கும் கம்ப்ரெஸர்கள் இயங்காமல் போக கொதிக்கும் அணுக்கழிவுகள் வெளியே கசியத் தொடங்கின.

இந்தச் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் டோக்கியோ மின்சார உற்பத்தி நிறுவனம் என்ன செய்துகொண்டிருக்கிறது தெரியுமா? கொதிக்கும் உலைக்கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல் உலைகளுக்கு டன் கணக்கில் நீரைச் செலுத்தி அதனை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிச் செலுத்தப்படும் நீரில் சேரும் கதிர்வீச்சுகள், சூழலைப் பாதிக்காமல் இருக்க 500-க்கும் மேற்பட்ட ராட்சத டேங்குகளில் நிரப்பப்படுகின்றன. நாளுக்குநாள் இந்த டேங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கம்ப்ரெஸர்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினம் ஒரு பாதுகாப்பு உடையை அணிய வேண்டியச் சூழல். அந்த உடைகள் எப்படியும் கழிவுகளால் பாதிப்படையும் என்பதால், அதையும் அப்புறப்படுத்த முடியாமல் பாதுகாப்பான கிடங்குகளில் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே டோக்கியோ மின்சார உற்பத்தி நிறுவனம், கடலுக்கு அடியில் செலுத்திய ‘லிட்டில் சன் ஷைன்’ என்னும் ரோபா, ஆழ்கடலில் கோரியம் என்னும் அணு உலைக்கழிவுகள் இருப்பதற்கான தடயங்களை அனுப்பியுள்ளது. சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்தபின், கழிவுகளின் தடயங்கள் அதுவும் உருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, இன்னும் கட்டுப்படுத்த முடியாத ஃபுகுஷிமா விபத்தின் தாக்கத்தைத் தணிப்பதில் பெரும் திருப்பமாக இருக்கும்.

கோரியம் கழிவு மற்றும் கூடங்குளம் அணு உலை

ஃபுகுஷிமாவின் கோரியமும்... கூடங்குளமும்!

அணுத் துகள்களுக்கு இடையே ஏற்படும் பிணைப்பினால் உருவாகும் குழம்புத்தன்மை மிக்க பொருளே கோரியம். இதே கோரியம்தான் தமிழகத்தின் கூடங்குளத்திலும் உற்பத்தியாகிறது.

ஃபுகுஷிமாவுக்கு முன்பான செர்னோபிள் அணு விபத்திலும் இதே கோரியம் படிமங்களின் தடயங்களே அதிகம் கிடைத்தன. கோரியத்திலிருந்து வெளியேறும் கதிர்களின் வெப்பத்தன்மை அதிகம் என்பதால், அது இதுவரை படம்பிடிக்கப்படவில்லை. கதிர்வீச்சுகளின் வெப்பத்தன்மை குறைய சுமார் ஆயிரம் வருட காலங்கள் ஆகும்.  

2012-ல் கூடங்குளம் அணு உலைகளைப் பார்வையிட்ட நிபுணர்கள் குழு, ''உலைகள் இயங்குவதற்குப் பாதுகாப்பான நிலையிலேயே இருக்கிறது'' என்று மட்டும் அறிவித்தது. ஆனால், அவை தொடர்பான விரிவான அறிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், கோரியத்திலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வகையான பாதுகாப்பு அம்சங்கள் நம்மிடம் உள்ளது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதுகுறித்து கூடங்குளம் ஊழியர்கள் விளக்கியதில், “ஃபுகுஷிமாவில் தற்போது என்ன நிலை என்பது தெரியவில்லை. ஆனால், கூடங்குளத்தில் கதிர்வீச்சு டர்பைன் இன்ஜின் வரை மட்டுமே இருக்கும். டர்பைன் உள்ளே வேலை செய்யச் செல்பவர்களுக்குக் 'கவர் ஆன்' எனப்படும் மஞ்சள் நிறக் கதிர்வீச்சு தடுப்பு உடுப்பு தரப்படுகிறது. இதைப் போட்டுக்கொள்வதற்கு முன்பும் டர்பைனிலிருந்து வெளியே வந்த பின்பும் அவர்கள் உடலில் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கிறதா என்று இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்கப்படும். கழிவுகளால் பாதிக்கப்பட்ட உடுப்புகள் வாஷிங் மெஷினில் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்குக் கொண்டுவரப்படும்” என்றார்.

கோரியம் தொடர்பான சந்தேகங்களுக்குப் பதில் அளித்த ஊழியர் ஒருவர், ''இங்கே கோரியம், நீராவி உற்பத்திக்கு உதவ மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒருவேளை, விபத்து நேர்ந்தால் திடக்கழிவுகளைச் சேமித்துவைக்கும் நவீன பீப்பாய்களும் உள்ளன. தவிர, நிலநடுக்கம் போன்ற விபத்துகளால் அணு உலை செயல்பாடு பாதிக்காமல் இருக்க உலைகளை ஆற்றுப்படுத்தும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது” என்றார். 

உண்மையில்,ஃபுகுஷிமாவில் இருந்ததும் இதே வசதிகள்தான். ஆனால், நிலநடுக்கச் சமயத்தில் அது கைகொடுக்காமல் போனதால்தான் விபத்தும் ஏற்பட்டது. 2012ன் இறுதி வரை டோக்கியோ மின்சார உற்பத்தி நிறுவனம் விபத்து தொடர்பான தனது தவறுகளை ஒப்புக்கொள்ளவே இல்லை.

கூடங்குளம் அணு உலை இயங்கப் பாதுகாப்பானது என்று அறிக்கை அளித்த நிபுணர் குழுவைத் தொடர்புகொண்டு, 'ஃபுகுஷிமா விபத்துப் பகுதியில், கடலுக்கு அடியில் தற்போது கோரியம் தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழகத்தின் கூடங்குளத்திலும் இதே கோரியம்தான் பயன்பாட்டில் உள்ளது. இந்தக் கோரியம் பொதுவில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கேட்டதற்கு, “ஃபுகுஷிமாவில் கிடைத்த தடயங்கள் தொடர்பாக நாங்கள் இன்னும் எதுவும் கேள்விப்படவில்லை. செய்தியைப் படித்துவிட்டு வருகிறோம்'' என்றே பதில் கிடைத்தது.

அதீத அறிவியல் நிச்சயம் வளர்ச்சியில்லை என்று உணரும் காலம்வரை... செர்னோபிள், ஃபுகுஷிமா, அடுத்து எதோ ஓர் அணு உலை நகரம் என உலகம் அணுக்கழிவுகளின் காடாக நிரம்பிக்கொண்டே இருக்கட்டும். அதுவரை மக்கள் நாங்கள் காத்திருக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்