வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (27/07/2017)

கடைசி தொடர்பு:09:56 (27/07/2017)

வறுமையை மாற்றும் நிறங்கள்... ஒரு மொபைல் கேமரா செய்திருக்கும் மாயாஜாலம்!

நிறங்கள்

ஒரு பெரிய மலை. மலை என்றாலே வளமான ஓரிடமாகத்தான் நமக்கு காட்சிகள் விரியும். இந்த மலை அப்படி அல்ல. அதன் ஒரு பக்க சரிவு முழுவதும் குடிசைகள். அந்தக் குடிசைப்பகுதியைப் பார்த்தபடி அவர் நிற்கிறார். 

“நிறங்கள் அற்ற ஓர் உலகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்...” என வாய்ஸ் ஓவர் தொடங்குகிறது.

அவர் மெள்ள நடக்கத் தொடங்குகிறார். கருப்பு வெள்ளை நிறக் காட்சிகள் ஓடத் தொடங்குகின்றன. வறுமையின் கீற்று மட்டுமே வீற்றிருக்கும் அந்தக் குரல் தொடர்கிறது.

“கற்பனை செய்யுங்கள்... நிறங்கள் இல்லாத அந்த இடம் மகிழ்ச்சியற்ற இடம்... சோகம் அப்பியிருக்கும் இடம்... வெறுமையான இடம்... அங்கு வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்காது... சவால்கள் மட்டுமே சகாக்கள்... நிறங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை”

The painter of Jalouzi என்ற அந்த ஆவணப்படம் இப்படித்தான் தொடங்குகிறது. முழுக்க முழுக்க ஐபோன் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜீவன் இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. அன்பு இருக்கிறது. ஒரு பிரச்னை இருக்கிறது. அதற்கொரு தீர்வு இருக்கிறது. கொஞ்சம் பழைய கதைதான். ஆனால், தவறவிடக்கூடாத ஒரு கதை.

ஜலூசி. ஹெய்ட்டி என்ற நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதி. கிட்டத்தட்ட 45000 மக்கள் இங்கு வாழ்கிறார்கள். மேலே சொன்னது போல ஜலூசியில் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. ”மக்காச்சோளம் போல நாங்க ஒட்டி வாழ்கிறோம்” என்ற நா.முத்துக்குமார் வரிகளின் சரியான விஷுவல் ஜலூசிதான். வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் வண்டி வரும். அதை விட்டால் வேறு நீராதாரம் அந்த மலைப்பகுதிக்குக் கிடையாது. மழை வந்தால் எது சாலை, எது குப்பை என்பதை கண்டறியவே முடியாது. அந்தக் காலனியில் யாருக்கும் காலணியே கிடையாது. உணவுப்பொருள்களை தரையில் வைத்துதான் விற்பார்கள். இளைஞர்களுக்கு ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதே பொழுதுபோக்கு. வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவில் வேலைக்குப் போய் விடுவார்கள். அல்லது போக முயல்வார்கள். அந்த வருமானம்தான் ஜலூசியின் மிகப்பெரிய ஆதாரம்.

இந்த நிலையில்தான் ஹெய்ட்டி அரசின் கவனம் ஜலூசி மீது விழுந்தது. இந்தப் பகுதியில் இருக்கும் குடிசைகள் மொத்தத்தையும் வண்ணமயமாக்க நினைத்தார்கள். அதற்கென ஒரு புராஜெக்ட் தொடங்கி, நிதியும் ஒதுக்கப்பட்டது. வறுமையை தேசிய குணமாகக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு திட்டம் ஆரம்பித்ததே அதிசயம்தான். ஆனால், தொடரவில்லை. நிதி போதவில்லை என ஒதுங்கிக் கொண்டது அரசு. 

மொத்தப்பகுதியும் வண்ணங்களால் நிறைந்தால் அங்கு பாசிட்டிவ் எனர்ஜி கூடும் என்ற கனவு தகர்ந்தது. வண்ணங்கள் ஜலூசிக்குப் புதிதல்ல. அவர்களுக்கும் நிறங்களுக்குமான தொடர்பு பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. ஓவியக்கலை ஜலூசியின் பாரம்பர்யக் கலை. 

அரசு ஆரம்பித்த வேலையை கையில் எடுத்தார்கள் ட்யூவல் (Duval Pierre) மற்றும் ஜெரார்ட் ஃபார்ச்சுன் (Gerard fortune). இருவருக்கும் நிறங்களின் சக்தி மீது மிகப்பெரிய நம்பிக்கை. ஜலூசியின் வீடுகள், பேருந்துகள், சுவர்கள் என அந்த மலை முழுவதும் நிறங்களால் நிறைந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் கனவு விரிந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக... சிறிது சிறிதாக அந்தச் சாம்பல் நிற மலை வானவில் ஆக மாறியது. 

நிறங்கள்

நிறங்கள் என்ன செய்யும்?

”நிறங்கள் நம்பிக்கையைத் தரும். நிறங்கள் மகிச்ழ்ச்சியை தரும். நிறங்கள் அடையாளத்தைத் தரும்” என்கிறார் ட்யூவல். நிறங்கள்தான் ஜலூசி மக்களுக்கு சூரியனையும், கடலையும், மரங்களையும் நினைவுப்படுத்துகிறது என்கிறார். ஜலூசியின் எதிர்காலத்தை மாற்ற நினைத்தவர்கள் அதற்கு தங்களுடன் சேர்த்துக்கொண்டது குழந்தைகளை. சில நேரம் பிரஷ் கிடைக்கும். பல நேரம் கைகளே பிரஷ் ஆகிவிடும்.

 

”நாளை என் ஜலூசிக்கு இப்போது இருப்பதை விட சிறப்பான வாழ்வு சாத்தியமாகும். அதற்கு இந்த நிறங்களே காரணமாக இருக்கும். இதை நாங்கள் எங்கள் குழந்தைக்களுக்காக செய்தோம். இந்த உலகுக்கு ஹெய்டி அழகான நாடு என சொல்வதற்காக செய்தோம்” என்கிறார் ட்யூவல்.

ஒரு மொபைல் கேமராவால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம். செல்ஃபிக்களை சுட்டுத்தள்ளும் அதே கேமராதான் இப்படியொரு படத்தையும் எடுத்திருக்கிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்