Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணிதத்துக்கான நோபல் பரிசு… மரியம் மிர்ஸாகனி என்ற ஜீனியஸ் பற்றித் தெரியுமா?

மரியம் மிர்ஸாகனி

 

1994-ம் வருடம். வருடா வருடம் நடக்கும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கும் பலர் கலந்துகொள்ளும் இப்போட்டி, மிகவும் பாரம்பர்யமான கணிதப் போட்டிகளில் ஒன்று. இதில் பதக்கம் வென்றுவிட்டால் ஒருவரின் வாழ்க்கையே மாறிவிடும். அவர் எதிர்காலத்தில் தலைசிறந்த கணிதவியலாளராக எல்லாத் தகுதியும் உடையவர் என்பது பொதுவான கருத்து. அந்த வருடம் நடந்த போட்டியில் பலருக்கும் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. 17 வயதே ஆன ஈரானைச் சேர்ந்த மரியம் மிர்ஸாகனி என்ற அந்தப் பெண் பல ஆண் போட்டியாளர்களை அலற விட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, அந்தப் போட்டிகளில் ஆண்களே அதிகம் சாதிப்பார்கள். அதுவும் ஈரானில் இருந்து ஒரு பெண் வந்து அதை வெல்வது எல்லாம், அந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்களே கூட கனவிலும் நினைத்திடாத ஒன்று. ஆனால், அன்று சரித்திரத்தை மாற்றி அமைக்கத்தான் அங்கே அமர்ந்திருந்தார் மரியம். தங்கப் பதக்கத்தை எவ்வித சிரமும் இன்றி தட்டிச்சென்றார். அடுத்த வருடமும் கலந்துகொண்டார். அதிலும் தங்க மெடல் மரியத்தை தேடி வந்தது. ‘தங்கல்’ படத்தில் கீதா எப்படி அந்த இளம் வயதில் மல்யுத்தத்தில் ஆண் போட்டியாளர்களை புழுதியில் புரட்டி எடுத்து கோப்பையுடன் வெற்றி நடை போட்டு வருவாரோ, அதே காட்சிதான் இங்கேயும். களம் மட்டும் தான் வேறு! 

எண்களே எண்ணங்களாக ஒரு பயணம்...

மரியம் மிர்ஸாகனி

மே 3, 1977-ம் வருடம் ஈரானில் இருக்கும் டெஹ்ரான் என்னும் இடத்தில் பிறந்தார் மரியம் மிர்ஸாகனி. தந்தை அஹ்மத் ஒரு மின் பொறியாளர். சிறுவயதிலேயே மரியத்தின் அசாத்திய திறனைக் கண்டு வியந்த அவர், மரியம் ஒரு மேதை என்பதை புரிந்துகொள்கிறார். டெஹ்ரான் ஃபர்சனகன் பள்ளியில் அவரைச் சேர்த்து விடுகிறார். அது மரியம் போல கிஃப்டட் குழந்தைகள் படிக்கும் பள்ளி. சிறுவயதில், மரியத்தை கேட்டால், “நான் நாவலாசிரியர் ஆக வேண்டும்” என்றுதான் கூறுவார். ஆனால், அது அவர் கணிதத்தின் மீது காதல் கொள்ளும் வரை தான்! 1999 வருடம் தன் இளங்கலை பட்டத்தை கணிதத்தில் பெறுகிறார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அவர் 2004-ம் வருடம் தன் பி.ஹெச்.டி பட்டத்தைப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெறுகிறார். அங்கே இவருக்கு வழிகாட்டியாக இருந்தது கணிதத்தில் நோபல் பரிசு என்றழைக்கப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற அமெரிக்க கணித பேராசிரியர் கர்டிஸ் டி. மெக்குல்லன். அதன் பிறகு ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம், கிளே மாத்தமெட்டிக்ஸ் நிறுவனம் என்று பயணித்தவர் இறுதியாக 31 வயதில் வந்தடைந்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். 40 வயதில் கேன்சர் அவரைக் கொண்டுசெல்லும் வரை அங்கேயே இருந்தார். 

வடிவியல் களம் 

பல கணித மேதைகளும் மிகுந்த குடைச்சலை கொடுக்கும் வடிவியல்தான் மரியம் அவர்களின் பாசத்திற்குரிய சப்ஜெக்ட். அவரின் பெரும்பாலான பணிகள் வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவங்கள், உயர் பரிமாண இடைவெளிகளின் கட்டமைப்புகள் போன்றவற்றைச் சுற்றியே இருந்தது. ரிமேன் மேற்பரப்புகளின் வடிவியல், இடவியல் மற்றும் சிதைப்பு கோட்பாடு போன்றவற்றை தொட்டு ஒளியியல், ஒலியியல், கிளாசிக்கல் மெக்கானிக்ஸ், புள்ளியியல் மெக்கானிக்ஸ், பிரதம எண்கள் மற்றும் குறியாக்கவியல் போன்றவற்றில் பல சாதனைகள் புரிந்தார். 

குவிந்த விருதுகள் 

பல கணிதவியலாளர்கள் கனவில் மட்டுமே காணும் பல விருதுகளை கைகளில் ஏந்திய சாதனையாளர் மரியம். அமெரிக்க கணிதவியல் சங்கம் வழங்கும் ப்ளூமெண்டல் விருதை (Blumenthal Award) 2009ஆம் வருடமும், கணிதத்திற்கான ரூத் லிட்டில் சேட்டர் பரிசை (the Ruth Lyttle Satter Prize) 2013-ம் வருடமும் வென்றார். வெற்றிப் பாதையில் சென்ற அவரின் பயணம், 2014-ம் ஆண்டு யாரும் தொடாத ஓர் அசாத்திய மைல்கல்லைத் தொட்டது. கணிதத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் மெடலை வென்றார். இது உலக அரங்கில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுக்கு நிகரான ஓர் அங்கீகாரம்! அதே வருடம், புகழ்பெற்ற பிரிட்டிஷ் அறிவியல் இதழான ‘நேச்சர்’ உலகின் தலைசிறந்த 10 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக அம்மையாரைத் தேர்ந்தெடுத்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது. 

 

பாலின சமத்துவமின்மையை சாடிய ஒரு வாழ்க்கை 

பெண்ணாகப் பிறந்தாலே அவள் வீட்டு வேலை செய்தும், கணவனுக்குப் பணிவிடைகள் செய்தும் காலத்தை ஓட்ட வேண்டும். அவளுக்கென்று இருக்கும் ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள் அனைத்தும் குப்பைக்குச் சென்றுவிடு. மிகவும் சிரமத்துடன் சாதிக்கக் களம் இறங்கும் பெண்களுக்கோ களத்திலே ஏமாற்றமே மிஞ்சும். ஒரு நிறுவனத்தில் அந்த ஆணுக்கும், இவளுக்கும் ஒரே வேலை, ஒரே டார்கெட், ஆனால் இவளுக்கு மட்டும் சம்பளம் குறைவு. காரணம் கேட்டல், பெண்களுக்கான ஸ்லாப் இவ்வளவுதான். எப்படி இருந்தாலும் சீக்கிரம் திருமணமாகி வேலையை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள், நாங்கள் என்ன பண்ண என்று மேலிடமும் கை விரிக்கும். இது உலகம் முழுவதும் இருக்கும் இன்றைய நிலை. அதுவும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்கள் ஒரு வேலைக்கென்று போவதே சாதனை தான். 

அமெரிக்காவில் குடிபுகுந்த மரியம் அங்கிருக்கும் பல பாலின வேறுபாடுகளைக் கலைந்தார். வேறு நிறம் கொண்ட அவர், வெள்ளையர்கள் கூடாரத்தில் அவர்களை விடவும் ஜொலித்தார். பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் போன்ற கோட்பாடுகளைக் கேள்வி கேட்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பெண்களால் சோபிக்க இயலாது என்ற பொதுவான கருத்தை உடைத்தார். கண்ணுக்குத் தெரிந்த வேறுபாடுகளையும், பிரச்னைகளையும் சுலபமாக வெற்றி கொண்டவரை, தோற்கடித்தது என்னவோ கண்ணுக்குத் தெரியாத அந்த மார்பக புற்று நோய். அவர் இவ்வுலகை விட்டு இந்த வருடம் ஜூலை 14-ம் தேதி மறைந்தார். கனவோடு வாழ்க்கையைத் தொடங்கும் பல பெண்களுக்கு, நீங்கள் கனவு மட்டும் காணாதீர்கள், அதை நிறைவேற்றவும் களமிறங்குங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அவரது வாழ்க்கை! 

மேத்ஸ் என்றாலே ஒரு காத தூரம் ஓடுபவர்கள்தான் இங்கே அதிகம். இதனாலே என்னவோ, கணிதத்தில் சாதிப்பவர்களை நாம் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. மரியம் மிர்ஸாகனி போன்றவர்கள் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். விரைவில் அவரின் வாழ்க்கை ஒரு உலக சினிமாவாகலாம். அப்போது அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உலகம் நிச்சயம் அவரைக் கொண்டாடும். அந்த நாள் மிக அருகில் இருந்தால் மகிழ்ச்சி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement