பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு! | Shahid Khaqan Abbasi, the 18th President of Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 01:01 (02/08/2017)

கடைசி தொடர்பு:01:01 (02/08/2017)

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு!

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகிய நிலையில் புதிய பிரதமராக ஷாகித் அப்பாஸி 18-வது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அப்பாஸி

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தானில் வலுவாக கோரிக்கை எழுந்தபிறகு தனது பிரதமர் பதவியை இழந்தார் நவாஸ் ஷெரீஃப். இந்நிலையில், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஷாகித் ககான் அப்பாஸி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் சட்ட வல்லுநர்கள் பாகிஸ்தானின் புதிய பிரதமரை இன்று தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து அப்பாஸியையே அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன்படி, பாகிஸ்தான் தேசிய அமைச்சரவை ஷாகித் ககான் அப்பாஸியை புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஷாகித் அப்பாஸி, 1958-ம் வருடம் டிசம்பர் மாதம் 27-ம் தேதி கராச்சி நகரில் பிறந்தவர். கராச்சியிலேயே தனது பள்ளிக்கல்வியை நிறைவு செய்தவர், ராவல்பிண்டியில் உள்ள லாரன்ஸ் கல்லூரியில் படித்தார். பின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தவர், அமெரிக்காவில் பணியாற்றினார். அதன்பின்னர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தவர் தனது தந்தையின் மரணத்துக்குப் பின்னர் பாகிஸ்தானின் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது பிரதமராகவும் பதவியேற்றுள்ளார்.

பாகிஸ்தான் அரசியலில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், சுதந்திரம் அடைந்தது முதல் இப்போதுவரை எந்தப் பிரதமரும் தங்களது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதுதான்.