மரத்தை வெட்டாதீர்கள் என்பதை இதைவிட வலிமையாய் எப்படிச் சொல்ல முடியும்? #CreativeADs | Creative awareness posters that conveys the message powerfully

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (04/08/2017)

கடைசி தொடர்பு:13:56 (04/08/2017)

மரத்தை வெட்டாதீர்கள் என்பதை இதைவிட வலிமையாய் எப்படிச் சொல்ல முடியும்? #CreativeADs

வலிமையான ஒரு விஷயத்தை மென்மையாகச் சொல்லிவிட்டு கடந்துபோகிற  சில விளம்பரங்கள் எப்போதும் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கும். எவ்வளவு விளம்பரங்கள் வந்தாலும் ஒரு சில விளம்பரங்கள் எப்போதும் நமக்குள் நினைவிருக்கும்படி ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். சமூக விழிப்புஉணர்வு விளம்பரங்கள் எல்லாமே அப்படியான ரகங்கள்தான். மது, சிகரெட், புகையிலை, விபத்து, பெண் சிசு கொலை, மனிதாபிமானம், வியாபாரம், என எத்தனையோ பிரிவுகளில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டாலும் விழிப்புஉணர்வு விளம்பரங்கள் மட்டும் எப்போதும் தனியாகத் தெரியும்.

விளம்பரங்கள் வலிமை

இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டி விட்டு வெட்டாமல் இருக்கிற ஒரு மரத்தின் நிழலில் மரம் வெட்டுபவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மரங்களின் தேவையை இதைத் தவிர வேறு வழியில் எளிமையாகச்  சொல்லிவிடவே முடியாது. ஒரு மரத்திலிருந்து 8500 காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் காகிதங்களால் ஆக்சிஜனையோ, நிழலையோ உணவையோ தந்து விட முடியாது. எனவே காகிதங்களைத் தேவையறிந்து பயன்படுத்துங்கள் என்கிற இன்னொரு விளம்பரம். இந்த இரண்டு விளம்பரங்களும் சொல்வது ஒன்றே ஒன்றைத் தான் “மரம் இல்லையேல் மனிதம் இல்லை”   

விளம்பரங்கள்

போர் ஆயுதங்கள் பற்றிய விழிப்புஉணர்வு விளம்பரம் ஒன்று. போர் வீரன் பீரங்கி வண்டியில் அமர்ந்திருக்கும் படியான நீண்ட புகைப்படத்தை வட்ட வடிவத் தூணில் ஒட்டியிருப்பார்கள். அதன் இரு முனைகளும் இணைகிற இடத்தில்  பீரங்கியின் முனைப் பகுதி போர் வீரனைக் குறி வைப்பதாய் இருக்கும். அதற்குக் கீழே “எதை நாம் விதைக்கிறோமோ அதைத்தான் அறுப்போம்”  என்பது மாதிரியான ஒரு  வாசகம் எழுதப்பட்டிருக்கும். பொது  உலக நியதியைத் தூணில் சுற்றி வளைத்து உணர்கிற மாதிரி சொல்லியிருப்பார்கள்.

விளம்பரங்கள்
 

கண் தானம் குறித்த விளம்பரம் அது.  ஒரு வார்த்தையில்  ஒரு விஷயத்தைக் கொண்டு போய்  சேர்ப்பதென்பது சவாலான விஷயம். அதையும் இந்த விளம்பரம் சர்வசாதாரணமாகச் செய்து காட்டியது. VISION (பார்வை) என்று  எழுதப்பட்ட வார்த்தையில் இருக்கிற இரண்டு I யையும் எடுத்து விட்டு V_S_ON என  எழுதியிருப்பார்கள். அதற்கு கீழே DONATE YOUR EYE என எழுதி இருப்பார்கள். கண் தானம் எவ்வளவு முக்கியம் என நினைத்திருந்தால் இப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள்.

விளம்பரங்கள்

பயணங்களில் வாகன ஓட்டிகளின்  தூக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதை சொல்லும் விளம்பரம்.  ஒரு நொடி பார்த்ததும்  யோசிக்க வைக்கிற வாழ்நாள் விளம்பரம் அது. சோர்வாய் இருக்கிற ஒரு  கண்ணை  இமைகள் மூடப் போவது போல இருக்கும்.  அந்தக் கண்ணின் மேல் இமையில் காரையும், கீழ் இமையில் மகனோடு நடக்கிற ஒரு தந்தையையும்  வைத்து  வரைந்து  உருவாக்கி இருப்பார்கள். ஒரு நொடி  தூக்கம்வந்து  இமை மூடினாள்  என்ன நடக்கும் என்பதை நீங்களே யூகித்துக்  கொள்ளுங்கள்.

விளம்பரங்கள்

 

மது, சிகரெட், புகையிலை, என விழிப்புஉணர்வைச் சொல்லிய ஸ்மார்ட் விளம்பரங்கள் மனிதனுக்கு எளிதில் புரியும்படி விபத்து பற்றி உருவாக்கிய ஒரு விளம்பரம்.  கார்களுக்குக் கிடைப்பது போல மனிதர்களுக்கு ஒரிஜினல் பாகங்கள் கிடைப்பதில்லை. எனவே, மது அருந்தி விட்டு கார் ஓட்டாதீர்கள் என்கிற சமூக விழிப்புஉணர்வு விளம்பரம். பார்த்ததும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்கிற மாதிரியான விளம்பரம்.

விளம்பரங்கள்

 

கார் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை சொல்கிற விளம்பரம் அது. ஒருவர் அணிந்திருந்த சிவப்பு நிற டீ  சர்ட்டில்  “1993 என எழுதப்பட்ட எண்ணைத்  தொடர்ந்து ஒரு நான்கு எண்கள் வருகிறது. அந்த நான்கு எண்களை  மறைத்தபடி குறுக்கே ஒரு பெல்ட் இருக்கிறது. அது காரின் சீட் பெல்ட். 1993 என்பது பிறப்பு வருடமாகவும், மறைக்கப்பட்ட வருடம் இறப்பு எனவும் குறிக்கிறது.  உங்களின் இறப்பை  சீட்  பெல்ட் தள்ளிப் போடும் என்கிற விழிப்புஉணர்வு விளம்பரம் அது.சீட் பெல்ட்டின் அவசியத்தை வலிக்கும் படியாக அடித்துச் சொல்லிய விளம்பரங்களில் இதுவும் ஒன்று.  

விளம்பரங்கள்

 

விளம்பரங்களின் தந்தை என அழைக்கப்படும் டேவிட் ஓகில்வி விளம்பரங்கள் குறித்து சொல்வது ஒன்றே ஒன்றுதான். எப்போது தவறான காரியங்களுக்கு விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்படுகிறதோ அப்போது விளம்பரங்கள் என்பது தவறான ஒன்றுதான். ஒரு சில வினாடிகளே வந்து போகிற விளம்பரங்கள் பல வருடங்கள் கடந்தும் மனதில் இருக்கிறதென்றால் அவை முன்வைத்த விஷயங்கள் நம்மோடு பிணைந்திருக்கிறதென்பது தானே உண்மை. விழிப்புஉணர்வு விளம்பரங்கள் என்பது சின்ன விஷயம்தான். ஆனால் விழிப்புஉணர்வு சின்ன விஷயம் இல்லையே…. 


டிரெண்டிங் @ விகடன்