நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி... பிலிப்பைன்ஸ் அரசு திட்டம்! | Philippines government plans to provide free education in all state university

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (04/08/2017)

கடைசி தொடர்பு:19:09 (04/08/2017)

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி... பிலிப்பைன்ஸ் அரசு திட்டம்!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இலவசக் கல்வி அளிக்கும் மசோதாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியோடெர்ட் ஒப்புதல் அளித்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசுக்குச் சொந்தமான 112 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்தால் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் சிலரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இலவசக் கல்வித் திட்டத்தால் தொலைநோக்குப் பார்வையில் நாட்டுக்கு நன்மையே விளையும் என்று கூறி அதிபர் ரோட்ரிகோ மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் பிலிப்பைன்ஸ் அரசுக்கு கூடுதலாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்படுகிறது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் படையெடுக்கும் நிலை ஏற்படும் என்றும் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் ரோட்ரிகோ அரசு, கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது. முறையான விசாரணை இல்லாமல் போதைப் பொருள் கடத்தியதாக பலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸ் அரசு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

- தினேஷ் ராமையா