8 வயது சுட்டி பிஸினஸ்மேனின் சாதனைக் கதை! | Story of Ryan the recycler

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (09/08/2017)

கடைசி தொடர்பு:11:19 (09/08/2017)

8 வயது சுட்டி பிஸினஸ்மேனின் சாதனைக் கதை!

சுட்டி ரயான்

''ஒவ்வொருவரும் இந்த உலகத்தை மாற்றதான் யோசிக்கிறார்களே தவிர, யாரும் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை'' - அறிஞர் லியோ டால்ஸ்டாயின் மாபெரும் தத்துவம். மாற்றம் என்பது நமது சிந்தனைகளையும் சூழலையும் மறு ஆய்வு செய்து நேர்படுத்துவதே. இந்தத் தாக்கம் எட்டு வயது சிறுவன் ஒருவனிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் மூன்றாம் வகுப்பில் சேர இருக்கிறான், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சுட்டிச் சிறுவன் ரயான். துறுதுறுப்பும், சிரிப்புமாக இருக்கும் சுட்டி ரயான் செய்திருப்பது யாரும் இதற்குமுன்பு யோசிக்காத செயல். மக்கள் வேண்டாம் என்று எரியும் பொருள்களை அருகில் இருக்கும் மறுசுழற்சிக் கூடத்துக்கு எடுத்துச்சென்று கொடுத்து இதுவரை 27,000 டாலர் வரை வருமானம் ஈட்டியிருக்கிறான் என்றால் நம்பமுடிகிறதா? 

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கௌண்டி நகரத்தைச் சேர்ந்த டேமியன் மற்றும் ஆண்டிரியா தம்பதியினரின் மகன் சுட்டி ரயான். இவனைப் பற்றி அறிந்ததும் அவனது முகநூல் பக்கம் வழியாகத் தொடர்புகொண்டோம். “இன்று ஒருநாள் மட்டும் தன்னுடைய பணியில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு நீச்சலடிக்கச் சென்றுள்ளான் ரயான். அதனால், நானே என் பிள்ளையைப் பற்றிப் பேசுகிறேன்” என்று சாட் செய்யத் தொடங்கினார், ரயானின் அப்பா.

டாமியன் ஆண்ட்ரியா மற்றும் ரயான்

“நானும், ரயானின் அம்மாவும் மறுசுழற்சி செய்வதில் ஆர்வமுடையவர்கள். ர்யான் குழந்தையாக இருக்கும்போதே நாங்கள் செய்வதை கூர்ந்து கவனிப்பான். தனது மூன்றாவது வயதிலிருந்து தானே மறுசுழற்சிக்கான வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டான். ரயான் சிறுகுழந்தையாக இருந்தபோது... அவனை இங்கே ஆரஞ்சு கௌண்டியில் உள்ள எங்கள் வீட்டின் அருகே இருக்கும் மறுசுழற்சி மையத்துக்கு அழைத்துச் செல்வேன். ஒரு சிறிய பை நிறைய மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை என்னுடன் தூக்கிக்கொண்டு வருவான். நாளடைவில், அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எங்கள் அக்கம்பக்கது வீடுகளில் இருப்பவர்களிடமெல்லாம் மறுசுழற்சி செய்யச் சொல்லி வலியுறுத்தினான். அவர்கள் மறுசுழற்சிக்காக ஒதுக்கும் பொருள்களை வார இறுதிகளில் சென்று சேகரித்துக்கொண்டு வருவான். அலுமினியம், கண்ணாடி, பிளாஸ்டிக் என மறுசுழற்சி செய்வதற்கு பிரித்து எடுத்துச் செல்வான். 

ரயான்

கலிபோர்னியாவில் பாட்டிலில் அடைபட்ட குளிர்பானங்களை வாங்கும்போது அதற்கு வரி உண்டு. அந்தப் பாட்டில்களைச் மறுசுழற்சி செய்யும்போது, அந்த வரி எங்களுக்குப் பணமாகத் திருப்பித் தரப்படும். ரயான் இப்படி மறுசுழற்சி செய்து தனக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறான். தனக்குக் கிடைக்கும் பணத்தை எங்களிடம் வந்து கொடுப்பான். ஆனால், அதனை அவனது மேற்படிப்பாக இப்போதிலிருந்தே சேர்த்துவைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தனக்கு மறுசுழற்சி செய்யும் பொருள்களை எடுத்துச்செல்ல ஒரு ட்ரக் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது எங்களது சுட்டி பிசினஸ்மேனின் கனவு” என்றார் மிகவும் சந்தோஷமாய்.

”நீங்கள் இதுவரை மறுசுழற்சி செய்யவில்லை என்றால், இப்போதிலிருந்தே செய்யத் தொடங்குங்கள். ஏனென்றால், இந்த உலகத்தைக் காப்பாற்ற அதுமட்டுமே சிறந்த வழி.ஏற்கெனவே மறுசுழற்சி செய்து வருகின்றீர்களா?நல்லது...உங்களது செயலை தொடருங்கள்” என்கிறான் சுட்டி ரயான். 

சிந்தனை... சுதந்திரம்... என அத்தனையையும் செழுமைப்படுத்திய நேர்த்தியானதொரு வளர்ப்பு! வாழ்த்துகள்... ரயானுக்கும் அவனது பெற்றோருக்கும்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close