ட்ரம்ப்புக்காக வார் ரூம் தினசரி தயாரிக்கும் இரண்டு ஃபைல்களில் என்ன இருக்கும்? | Trump's War room report

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (09/08/2017)

கடைசி தொடர்பு:20:12 (09/08/2017)

ட்ரம்ப்புக்காக வார் ரூம் தினசரி தயாரிக்கும் இரண்டு ஃபைல்களில் என்ன இருக்கும்?

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அலுவலகம் வந்ததும் ஒருநாளைக்கு இந்த இரண்டு ஃபைல்கள் வரும். அதிலிருக்கும் விஷயங்களைச் சாதாரணமாக ஒருவர் படித்தால் அதிர்ந்துவிடுவாராம். காரணம், அதிலிருக்கும் சுவாரஸ்யமான செய்திகள்தான். அப்படி அந்த ஃபைல்களில் என்ன இருக்கும்? இதோ...

'வார் ரூம்' என்ன செய்யும்?

'வார் ரூம்' என்பது 4 - 10 நபர்களைக் கொண்ட அணி. இந்த அணி, ஜனநாயகக் கட்சியோ, குடியரசு கட்சியோ பதவிக்கு வந்தால்... அவர்களைப் பற்றித் தேசிய செய்திகளில், தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், டிஜிட்டல் மற்றும் பிரின்ட் மீடியாக்களில் வரும் செய்திகளைக் கண்காணித்து அறிக்கையாக அளிக்கும்.

தினசரி ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த வேலை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்டுகள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் அடங்கும்.

இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும். அதிலிருந்து, அதிபரால் ஒருநாளின் அரசு மீதான நிறைகுறைகளைக் கண்டறிய முடியும். இதுநாள்வரை நிறைகுறைகளுடன் இருந்த இந்த அறிக்கை, தற்போது ட்ரம்ப் அதிபராக உள்ளபோது வித்தியாசமாக நடக்கிறது.

முன்னாள் தலைமை அதிகாரி ரெயின்ஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் இருவரும் இந்தத் தகவல்களைக் கொண்டு 20 - 25 பக்க அறிக்கையைத் தயார் செய்வார்கள். அதனை, காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும். இப்படித்தான் தன்னைக் கெத்தாக நினைத்து சிலாகித்து வருகிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப்

தன்னைக் கலாய்த்துவரும் மீம்கள், செய்திகள், வீடியோக்கள், விமர்சனங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பதை ட்ரம்ப் விரும்புவதில்லை. இந்த அறிக்கைகளைப் பார்த்துவிட்டு, ''முதல் ஆறு மாதங்களுக்கு எனது அரசாங்கத்துக்கு A+ ரேட்டிங் அளித்துள்ள லோ போப்ஸ்க்கு நன்றி'' எனறு ட்விட்டியுள்ளார். ட்ரம்பின் ஆறு மாத கால ஆட்சியை விமர்சித்தவர்கள் அதிகம். ஆனால், ட்ரம்ப் தன்னைப் புகழ்பவர்களுக்கு மட்டும் பதிலளிக்கிறார். தன்னைக் கெத்தாகவே நினைத்துக்கொள்கிறார்.

இதெல்லாம் வேண்டுமென்றே வெள்ளை மாளிகை அதிகாரிகளால் மறைக்கப்படவில்லை. ட்ரம்ப் வேண்டுமென்றே தன்னுடைய பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே விரும்பிக் கேட்கிறாராம். இது, அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல... இங்கு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவர், இதே செயல்களைச் சட்டமன்ற அதிகாரிகளிடம் செய்திருக்கிறார். பெரும்பாலும் தன்னைப் பற்றிய நல்ல செய்திகளையே ஜெயலலிதா அதிகம் விரும்புவாராம். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் அந்தச் செய்தியைக் கேட்டுப் படிப்பாராம். கருணாநிதியும் இதேபோன்று பாசிட்டிவ், நெகட்டிவ் செய்திகள் இரண்டையுமே தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவாராம்.

ட்ரம்பின் இந்தப் பாசிட்டிவ் செய்திகள் வெறும் ஹாலுசினேஷன் என்பதை, ட்ரம்ப் புரிந்துகொண்டால் மட்டுமே சர்ச்சைகளில் இருந்து வெளியே வருவார். இல்லையென்றால், நான்கு ஆண்டுகளில் அவர் செய்த தவறுகள் எல்லாம் முன்வந்து நின்று அடுத்தமுறை அதிபர் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும். இதையெல்லாம் கவனிப்பாரா விளம்பர விரும்பி என்பது பில்லியன் டாலர் கேள்வி?


டிரெண்டிங் @ விகடன்