Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடை நிறைய மாத்திரைகள்.. அரசே கைவிரிக்கும் அவலம்!

மாத்திரைகள்

ண்மையில், நடிகர் சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான மருத்துவர் திவ்யா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய திறந்த மடல் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தடை செய்யப்பட்ட உட்பொருட்களைக் கொண்ட மாத்திரைகள் மற்றும் மருந்துகளை, வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவப் பிரதிநிதிகள் எப்படித் தங்களிடம் விற்க முயன்றார்கள் என்றும், அதனைப் பரிந்துரைக்க மறுத்ததற்கு அவரை மிரட்டியதைப் பற்றியும், இந்திய மக்கள் எவ்வளவு எளிதில் மருந்துகளைக் கடைகளில் இருந்து பெற்றுவிட முடிகிறது என்பது பற்றியும், இதுகுறித்து அரசு தனது சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.   

இத்தனைக்கும் இங்கே மருந்துக்கடைகளும், மருந்துகளை விற்பதற்கு பார்மசிஸ்டுகளும் ஒவ்வோர் இந்திய மருந்தகங்களிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி நியமிக்கப்பட்டிருந்தும் திவ்யா சொல்வது போன்ற பாதுகாப்பற்றச் சூழல் நிலவிவருகிறது. தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்கான மாத்திரைகள் எந்தவித மருத்துவச் சீட்டும் இல்லாமலேயே மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குற்றமற்றச் சர்வசாதாரண நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இத்தகையே சூழலே ஆபத்தாகப் பார்க்கப்பட்டு இங்கே பிரதமரின் பார்வைவரை இந்தச் சம்பவம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் நாடான ஹைதியின் நிலை கவலைக்கிடம் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஹைத்தி மாத்திரை விற்பவர்கள்

மக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் எப்படி இருக்கிறது என்று சுமார் 24 நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர் நேஷனல் ஜியோகிராபிக் புகைப்படக்காரர்களான கேபிரியல் மற்றும் வுட்ஸ். அப்படி ஹைதிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு, சென்னையின் தியாகராய நகர் போன்ற மக்கள் நடமாட்டம் மிக்க மார்கெட் சாலைகளில் கையில் கூடைகளுடன் நிறைய பேர் தென்படுகிறார்கள். ஒவ்வொரு கூடைகளிலும் வண்ணமிட்டாய் போன்ற வஸ்துகள் டவர்கள்போல அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. உற்றுப் பார்த்தால் அவை மிட்டாய்கள் இல்லை, மாத்திரைகள் என்பது புலப்படும். அந்த டவர்களின்மீது மாத்திரைகளைக் கத்தரித்துக் கொடுப்பதற்கான கத்திரிக்கோல் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்களை இந்தப் புகைப்படக்காரர்கள் எடுத்த படம்தான் தற்போது வைரலாகியுள்ளது.

மருந்து விற்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் புகைப்படக்காரர் கேபிரியல், “மாத்திரைகளை மிட்டாய்க் கூடைகள்போலச் சுமந்துசெல்லும் அவர்கள், பூ - காய்கறி - பழங்களை விற்பவர்களைப்போல மாத்திரைகளைக் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முறைப்படி மருத்துவம் பற்றி அறிந்தவர்களும் இல்லை. அதன் நிறம் பார்த்து மேட்சிங்காக அடுக்கிவைத்தால்தான் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நிறப் பொருத்தம் பார்த்து மருந்துகளை அடுக்கிவைத்திருக்றார்கள். இதே தொழிலில் சுமார் 20 வருடங்களாக ஈடுபட்டு வருபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் அதில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவல். மக்களும் ஜுரம், தலைவலி, வயிற்றுவலி என எது இருந்தாலும் இவர்களிடம் வந்து மருந்துகளை வாங்கிச் செல்கிறார்கள். காரணம் பார்மசிஸ்ட் என்றால் என்ன என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மருந்து விற்பவர்களும் மற்றுமொரு வியாபாரிகளே. அதனால், முகத்தில் இருக்கும் சின்ன பருவுக்கு அந்த வியாபாரிகள் பவர்ஃபுல்லான ஒரு மாத்திரையைக் கொடுத்தால்கூட மறுப்புச் சொல்லாமல் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சிலநேரங்களில் காலாவதியான மாத்திரைகள்கூட விற்கப்படுகின்றன” என்கிறார்.    

ஹைதியில் சுகாதாரத் துறை இதற்கு எதிராக வலுவான சட்டம் ஒன்றும் இயற்றாததால், அவர்களாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே இதில் இருக்கும் அவலம். ''நிலத்தில் தென்படும் கண்ணிவெடிகள்போல இவர்களது விற்பனைகள் முளைத்துள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது அவலமானதொரு நிலைதான்” என்கிறார் அந்த நாட்டின் சுகாதாரத் துறைச் செயலர். 

இந்தியாவில் சட்டங்கள் வலுவான நிலையில் இருப்பதால், இன்னும் அப்படியான சூழல் உருவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுச் சந்தைப் பொருள்களுக்கு உள்நாட்டில் ஏகோபித்த ஆதரவு பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் எதிர்காலத்தில் இந்திய மார்க்கெட்கள் இப்படியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

படங்கள் நன்றி: நேஷனல் ஜியாகிராபிக் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement