வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (10/08/2017)

கடைசி தொடர்பு:12:45 (10/08/2017)

ஜப்பானில் கல்யாணம்ன்னா என்ன பரிசு தருவாங்க தெரியுமா?

திருமணப் பரிசு

நமது ஊரில் திருமணம் நடந்தால், நமது அன்பளிப்பு என்னவாக இருக்கும்? நமது வீட்டு விசேஷங்களுக்கு கொடுக்கப்பட்ட விநாயகர் சிலை, டின்னர் செட் அல்லது பூச்செண்டுகள் தானே. அதிகபட்சமாய் மொய் கவர். மண்டபத்தின் முன்பு உள்ள கடையில் கடைசித் தருணத்தில் வாங்குவோம். அதிலும் நூற்றி ஒன்று ரூபாய்  வைப்பதா இல்லை இருநூற்று ஒன்று ரூபாய் வைப்பதா என்று குழப்பங்களும் வரும். ஆனால் ஜப்பான் நாட்டில் மிகவும் பாரம்பர்யமான விலையுயர்ந்த பரிசு கொடுக்கும் வழக்கம் உள்ளது. அது Euplectella என்றும் Venus Flower Basket என்றும் கூறப்படும் ஒரு வகையான கடல்வாழ் உயிரினங்கள். இவை கடலின் ஆழ்பகுதிகளில் காணப்படும் ஒரு வகையான துறையுடலிகள். இவற்றை கண்ணாடி கடற்பாசிகள் எனவும் கூறுவர். இவற்றை பிலிப்பைன்ஸ் தீவுகள், ஜப்பானிய பகுதிகள், மேற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணலாம். இந்தத் துறையுடலிகள் கடினத்தன்மைக்கும், கடின வடிவியலுக்கும் பெயர்பெற்றவை. கடல் நீரில் உள்ள சிலிஸிக் ஆசிட் என்பதை சிலிக்கா வாக மாற்றி, தனது எலும்பு மண்டலத்தில் கண்ணாடி இழைகளாக பின்னுகின்றது.

இறந்த நிலையில் இது ஒரு பரிசு பொருளாக மாறுகின்றது. அது எப்படி? இந்த Euplectella தன்னுடைய உடலினுள், Shrimp எனப்படும் ஒரு வகையான இறால் மீன் வாழ இருப்பிடமாக இருந்து உதவுகிறது. ஓர் ஆண் இறால் மீன் மற்றும் ஒரு பெண் இறால் மீன் இந்த துறையுடலிகள் உள்ளே சென்று வாழ்கின்றன. பின்பு இவை இறால் குஞ்சுகளையும் உருவாக்குகின்றன. புதியதாக உயிர்த்துள்ள அந்த சிறிய இறால் மீன்கள் துறையுடலிகளின் ஓட்டைகளின் வழியாக வெளியேறி, புதிய துறையுடலிகளினுள் சென்று அவற்றின் வாழ்வை துவங்குகின்றன. துறையுடலிகளின் மிகச் சிறந்த கண்ணாடி இழைகள் வழியாக, பெருத்த உருவம் உடைய பெற்றோர் இறால் மீன்கள் வெளியே வர இயலாமல் வாழ்நாள் முழுவதும் உள்ளேயே தங்கும் நிலைக்கு ஆளாகின்றன. இந்த இறால்கள் துறையுடலிகளின் உடலில் உள்ள அசுத்தங்களை நீக்குகின்றன. இதற்கு கைமாறாக துறையுடலிகள் நீரின் வழியாக இறால் மீன்களுக்கு உணவு கிடைக்க செய்கின்றன. சில நேரங்களில் இந்த துறையுடலிகளின் உடல் ஒளியால், சிறிய கடல் உயிரினங்கள் உள்ளே மாட்டி இறால் மீனிற்கு உணவாகின்றன. இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று உதவி புரிந்து வாழும் வாழ்க்கை முறையை கமென்சல் ரிலேஷன்ஷிப் என்பர். 

வாழ்நாள் முழுவதும் ஆண் மற்றும் பெண் இறால்கள் ஒன்றாக வாழ்ந்து அவற்றின் கடமைகளை செய்து முடிகின்றன. இறந்த துறையுடலிகளை முறையாக ப்ளீச் செய்து, அவற்றின் எலும்பு மண்டலத்தை பரிசு பொருட்களாக விற்கின்றனர். விக்டோரியன் இங்கிலாந்தில் இந்த Euplectella மிகவும் விலையுயர்ந்தது. மக்கள் இந்தப் பரிசை திருமணத்துக்கு ஏற்ற அன்பளிப்பாக கருத காரணமும் இதுவே. ஆணும் பெண்ணும் இறக்கும் வரை ஒன்றாகவும், தங்கள் வாழ்க்கையின் கடமைகளை முறையே செய்யவும் ஓர் எடுத்துக்காட்டாக இந்த Euplectella அமைகிறது. 


டிரெண்டிங் @ விகடன்