விடைபெற்றார் மின்னல் வீரர் உசேன் போல்ட்!

உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தன் இறுதிப்போட்டியான 4x100 தொடர் ஓட்டத்தில்  காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனாலும், உலகத் தடகளத்தில் போல்ட் நிகழ்த்திய சாதனை இனி யாராலும் தொட முடியாத உச்சத்தில் உள்ளது.

உசேன் போல்ட்

`மின்னல் மனிதன்’ உசேன் போல்ட் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இனித் தடகள வீரர்கள் அச்சம்கொள்ளத் தேவையிருக்காது. உசேன் போல்ட்டின் பாதம் படுமா என ஏங்கிக்கொண்டிருந்த தடகள ட்ராக்குகள் வருத்தப்படலாம். லண்டனில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி ஓட்டத்தையும் ஓடி முடித்துவிட்டார் உசேன். முகமது அலியைப்போல, மைக்கேல் ஜோர்டனைப்போல உசேனுக்கும் கடைசிப்போட்டித் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இருந்தும் இனி ஓட்டப்பந்தய வரலாறு உ.மு, உ.பி என்றே எழுதப்படும். காரணம் உலகத் தடகள அரங்கில் இந்த நெட்டைப்பையன் உண்டாக்கியிருக்கிற அதிர்வலைகள் அத்தகையவை! 

அந்த நூறுமீட்டர்களை ஓடிக்கடக்க கோடி மீட்டர்களை ஓடி ஓடி பயிற்சி பெற்றவை போல்ட்டின் கால்கள். செய்கிற எதையுமே நம்மையும் பிறரையும் மகிழ்விப்பதற்காகச் செய்ய ஆரம்பிக்கும்போது அது தன் நோக்கத்தில் முழுமையை எட்டிவிடுகிறது. ‘`நான் விளையாட்டு வீரன் அல்ல; நான் ஒரு என்டர்டெயினர். மக்களை மகிழ்விப்பவன். அதற்காகத்தான் ஓடுகிறேன்.’’ இவர்தான் உசேன்போல்ட். மக்களை பரவசத்தில் ஆழ்த்திய பாதங்கள் இனியாவது ஓய்வெடுக்கட்டும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!