சீன ராணுவத்துக்குத் தலைவலியான ஸ்மார்ட்போன் கேம்! | Chinese Army's New Enemy Is An Addictive Mobile Phone Battle Game

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (14/08/2017)

கடைசி தொடர்பு:15:45 (14/08/2017)

சீன ராணுவத்துக்குத் தலைவலியான ஸ்மார்ட்போன் கேம்!

உலகமே ஸ்மார்ட்போன் மயமாகிவரும் சூழலில், சீன ராணுவத்துக்கு அதனால் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. 


உலக அளவில் பிரபலமான  கிங் ஆஃப் க்ளோரி (King of Glory) எனும் ஆன்லைன் விளையாட்டுக்கு சீனாவிலும் ரசிகர்கள் ஏராளம். சீனாவின் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த இந்த விளையாட்டு சீனக் குழந்தைகளின் உறக்கத்தைக் கெடுத்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, குழந்தைகளின் நலன் கருதி கிங் ஆஃப் க்ளோரி விளையாட்டை உருவாக்கிய டென்சென்ட் தினசரி விளையாடும் நேரத்தை குறைத்தது. இந்த விளையாட்டு சீன ராணுவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. போரை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டுக்கு சீன ராணுவத்தில் பணிபுரியும் இளம் ராணுவ வீரர்கள் அடிமையாகிக் கிடப்பதாக ராணுவ பத்திரிகை எச்சரித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு ராணுவ வீரர்களின் போர்த்திறனைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இளம் வீரர்களுக்கு ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக அறிவியல்பூர்வமான மற்றும் உளவியல்ரீதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வடக்கு மாகாணமான குவாங்டாங் பகுதியில் தொடர்ச்சியாக கிங் ஆஃப் க்ளோரி கேமை 40 மணி நேரம் விளையாடிய 17 வயது இளைஞர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சீனாவில் மட்டும் தினசரி 8 கோடிக்கும் அதிகமானோர் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாடுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சீனா-  இந்தியா-பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.