லைக்குகளை அள்ளிக்குவித்த ஒபாமா ட்வீட்!

மெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, சனிக்கிழமை இரவு ட்விட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ஜன்னல் ஓரத்தில் பல இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் நிற்கின்றனர். அவர்களிடத்தில் ஒபாமா கொஞ்சி மகிழ்வது போன்ற புகைப்படத்தில், 'நிறத்தாலும் இனத்தாலும் மதத்தாலும் மற்றொருவரை வெறுப்பதற்காக யாரும் பிறப்பதில்லை' என அதில் கூறியிருந்தார்.

வரலாறு படைத்த ட்விட்

ஒபாமா பதிவிட்ட சில மணி நேரங்களில் அந்தப் புகைப்படம் வைரலாகியது. இந்த ட்விட்டை 39 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். 12 லட்சம் பேர் ரீட்விட் செய்திருந்தனர். ட்விட்டர் வரலாற்றில், அதிக முறை ரீட்விட் செய்யப்பட்ட 5-வது பதிவு இது. ஒபாமாவின் ட்விட்களில் அதிக முறை பகிரப்பட்டதும் இதுதான்.

இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி அரீனா கிரான்டே, மான்செஸ்டர் குண்டு வெடிப்பின்போது, ''என்னை மன்னித்து விடுங்கள்'' என பதிவிட்ட ட்விட் 28 லட்சம் லைக்குகளைப் பெற்றிருந்தது. செவ்வாய்க்கிழமையன்று அந்த ட்விட்டை பின்னுக்குத் தள்ளி ஒபாமாவின் ட்விட் முதலிடத்தைப் பிடித்தது.

சனிக்கிழமை அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள, சார்லேட்டஸ்வில்லி நகரில் வெள்ளையர்கள் நடத்திய பேரணியில் ஒருவர் காருடன் புகுந்தார். இந்த சம்பவத்தில் 32 வயது பெண் ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர். பேரணியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றும் விபத்துக்குள்ளாகி, இரு போலீஸார் இறந்தனர்.

இந்நிலையில்தான் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒபாமா மனதை உருக்கும் வகையில் அந்த ட்விட்டை பதிவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!