இந்தியாவை வம்பிழுக்கும் சீன செய்தி நிறுவனத்தின் சேட்டை! | Chinese media mock video about india

வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (17/08/2017)

கடைசி தொடர்பு:22:34 (17/08/2017)

இந்தியாவை வம்பிழுக்கும் சீன செய்தி நிறுவனத்தின் சேட்டை!

ந்திய ராணுவத்தின் அடையாளமாகக் கருதப்படுபவர்கள் சீக்கியர்கள். அவர்களைக் கேலிசெய்து சீன செய்தி நிறுவனமான `ஜின்குவா' வெளியிட்டுள்ள வீடியோ, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பூடானில் உள்ள டோக்லாம் பகுதியை, சீனா `டோங்லாங்' என்ற பெயரில் உரிமை கொண்டாடிவருகிறது. சிக்கிமில் மூன்று நாடுகள் சந்திக்கும் இந்தப் பகுதியை `டோக்லா' என இந்தியர்கள் அழைக்கின்றனர். ஜூன் மாதத்திலிருந்து டோக்லாவில் இந்திய சீனப்படைகள் முற்றுகையிட்டுள்ளன. இரு நாட்டுத் தலைவர்களும் மறைமுகமாக ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொண்டிருகின்றனர். சர்வதேச நாடுகள், போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றன. 

இந்தியாவை கேலி செய்யும் ஜின்குவா

டோக்லா விவகாரத்தை முன்வைத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அவ்வப்போது கருத்து வெளியிட்டுவருகின்றனர். இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கொடி அமர்வுக் கூட்டத்திலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. சீன மீடியாக்கள் இந்தியாவை எள்ளி நகையாடியபோதிலும், இந்திய மீடியாக்கள் எல்லை தாண்டியும் நாகரிகம் தவறியும் செய்திகள் வெளியிட்டதில்லை. அதேவேளையில், சீன அரசுக்குச் சொந்தமான ஜின்குவா செய்தி நிறுவனம், நாகரிகம் மறந்து இந்தியர்களை இனவெறியுடன் விமர்சித்துள்ளது.

‘இந்தியா செய்த ஏழு பாவங்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆங்கில சப்டைட்டிலுடன் 3.22 விநாடி இந்த வீடியோ ஓடுகிறது (www.youtube.com/watch?v=OD27woHDWbo). சீனப் பகுதியான டோக்லாவுக்குள் சர்வதேச விதிகளை மதிக்காமல் நுழைந்தது, இந்தியா செய்த முதல் பாவமாம். 1890-ம் ஆண்டு இந்தியாவை ஆட்சிசெய்த பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி இந்தியா செயல்படுவது இரண்டாவது பாவமாம். 2012-ம் ஆண்டு முதல் சீன எல்லைக்குள் இந்தியா தொடர்ந்து அத்துமீறுகிறது; பூடானை, சீனாவுக்கு எதிராக இந்தியா தூண்டுகிறது. பூடான் நாட்டை  கைக்கூலியாக இந்தியா பயன்படுத்துகிறது. எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து மீறுகிறது. இந்தியத் துருப்புகள் டோக்லாவில் ஊடுருவியது, இந்தியாவின் கிழக்குப் பகுதி எல்லைகளில் இதற்கு முன், இந்தியா அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டது  என ஏழு பாவங்களை அந்த நிறுவனம் வரிசைப்படுத்தியுள்ளது. 

ஒருகட்டத்தில், ‘சர்வதேச விதிகளை மீறக் கூடாது என்று உங்கள் மாமா உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையா?' என்று நிகழ்ச்சித் தொகுப்பாளினி  கேட்கிறார். `இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரிடம் சிக்கிம், திபெத் எல்லைப் பகுதி குறித்து ஒப்பந்தம் சீன அரசு செய்துகொண்டது. அதன்படி டோக்லா, சீன அரசுக்குச் சொந்தமானது. சர்வதேச விதிகளை மீறி செயல்படக் கூடாது என உங்கள் ‘மாமா’ உங்களுக்குச் சொல்லித்தரவில்லையா?' எனக் கேள்வி எழுப்புகிறார் அந்தத் தொகுப்பாளினி. `மாமா' என அவர் குறிப்பிடுவது நேருவையா அல்லது பிரிட்டனையா எனத் தெரியவில்லை. இந்த வீடியோ, சீனாவின் தரம் தாழ்ந்த செயல்பாட்டையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  கூறுகையில், “பூடானுக்கும் சீனாவுக்கும் தூதரக உறவு இல்லை. பூடானின் ஒவ்வொரு பகுதிக்கும் பாதுகாப்பளிக்கவேண்டியது இந்திய நாட்டின் கடமை. நட்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூடானுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. டோக்லாவில் இருந்த பூடான் ராணுவத்தினரை சீன ராணுவத்தினர் துரத்தியுள்ளனர். பின்னரே,  இந்திய ராணுவத்தினர் சீன ராணுவத்தினரின் சாலை அமைக்கும் பணியைத் தடுத்தனர். டோக்லா விவகாரத்தில் சீனா முதலில் படைகளை வாபஸ் பெறவேண்டும். அதன் பிறகே இந்தியப் படைகள் நகரும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்