கைவிட்ட வடகொரியா: பாராட்டிய ட்ரம்ப்..! | Trump appreciates North Korea's decision

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (18/08/2017)

கடைசி தொடர்பு:08:31 (18/08/2017)

கைவிட்ட வடகொரியா: பாராட்டிய ட்ரம்ப்..!

அமெரிக்காவின் மீது நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தை வடகொரியா கைவிட்டதைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

அமெரிக்காவுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக, வடகொரியா சமீப காலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்துவருகிறது வடகொரியா.

இந்நிலையில், அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணைமூலம் தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அறிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’வடகொரியா அமெரிக்காவைத் தாக்க நினைத்தால், உடனடியாக அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவோம்’ என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தாக்குதல் திட்டத்தை சமீபத்தில் ஆய்வுசெய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாகக் கவனிக்கும்பொருட்டு தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் முடிவுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘வடகொரியா எடுத்துள்ள முடிவு மிகச் சரியானது. இந்தப் புதிய மாற்றத்தை நான் வரவேற்கிறேன். பேரழிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவே கருதுகிறேன்’ என்று கருத்துப் பதிவு செய்துள்ளார்.