வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (18/08/2017)

கடைசி தொடர்பு:11:15 (18/08/2017)

பார்சிலோனா தாக்குதல்: அணைக்கப்பட்ட ஈஃபிள் டவர் மின்விளக்குகள்!

ஸ்பெயினில் இருக்கும் பார்சிலோனாவின் முக்கியப் பகுதியில், மக்கள் கூட்டத்தில் பாய்ந்த காரினால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்நிகழ்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரியாதைசெலுத்தும் வகையில், ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

ஈஃபிள் டவர்

பார்சிலோனாவின் சுற்றுலாப் பகுதியான லாஸ் ராம்பிளாஸ் பகுதியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. மக்கள் அதிகம் புழங்கும் இந்தப் பகுதியில், யாரும் எதிர்பாராத விதத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று மக்கள் நடக்கும் இடத்தில் பாய்ந்தது. 13 பேர் பலியான இந்தச் சம்பவத்தால், ஐரோப்பா அளவில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. இந்த விபத்து, தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தற்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் ஐரோப்பிய ஊடக நிறுவனங்கள் தகவல் தெரிவித்துவருகின்றன. இந்தச் சம்பவம்குறித்து பார்சிலோனா போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்து சாலையில் செல்லும் வாகனம், மக்கள் செல்லும் நடைபாதையில் பாயும் சம்பவங்கள் ஐரோப்பாவில் அதிகம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சில நாள்களுக்கு முன்னர், லண்டன் நகரத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.