அமெரிக்கா முதல் ஆழ்வார்பேட்டை வரை அரசியலை தீர்மானிக்கும் 140 எழுத்துக்கள்! | Tweets from Donald trump to actor Kamal haasan

வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (19/08/2017)

கடைசி தொடர்பு:11:14 (19/08/2017)

அமெரிக்கா முதல் ஆழ்வார்பேட்டை வரை அரசியலை தீர்மானிக்கும் 140 எழுத்துக்கள்!

ட்ரம்ப்

ட்விட் செய்வது, இன்றைய தலைவர்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்டது எனலாம். இந்தவாரத்தில் அரசியல் சூழலில் அமெரிக்கா முதல் ஆழ்வார்பேட்டை வரை ட்விட்டர் பதிவுகள், மக்களை பெரிதும் கவனம் ஈர்க்க வைத்துள்ளன. இதில் முக்கியமான ட்விட்டுகளை மட்டும் இப்போது பார்ப்போம்...

டொனால்ட் ட்ரம்ப்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு ட்விட்டால் அமேசான் நிறுவனம் 500 கோடி அமெரிக்க டாலரை இழந்துள்ளது.

அமேசான் நிறுவனம் முறையாக வரி செலுத்தாததால், சில்லரை வணிகத்துறையில்  ஏராளமான வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படுகிறது என ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அதனை தனது ட்விட்டரில் தெரிவித்த ட்ரம்ப், ''வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு அமேசான் நிறுவனம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நகரங்கள், மாநகரங்கள் மற்றும் மாகாணங்கள் என அமெரிக்கா முழுவதுமுள்ள சிறுவணிகர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறைய வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட் வெளியான நிமிடத்திலிருந்து பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனம் சரிவைச் சந்திக்க நேர்ந்தது. அமேசான் நிறுவனப் பங்குகள் 0.5 சதவிகிதம் அளவுக்கு இழப்பை எதிர்கொண்டு, 500 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்தது. இந்திய ரூபாயில் இதன்மதிப்பு தோராயமாக ரூ.32 ஆயிரம் கோடியாகும். 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா

பராக் ஒபாமா:

'நிறத்தாலும், இனத்தாலும் மதத்தாலும் மற்றொருவரை வெறுப்பதற்காக யாரும் பிறப்பதில்லை' எனும் இந்த வரிகள் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உரையில் இருந்து எடுக்கப்பட்டவை. இதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ட்விட் செய்திருந்தார். இதற்குக் காரணம், விர்ஜினியா மாகாணத்தில் உள்ள, சார்லேட்டஸ்வில்லி நகரில் நடந்த நிறவெறி தொடர்பான பிரச்னைதான். இதற்காக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு ஒபாமா வெளியிட்ட பதிவுதான், ட்விட்டர் வரலாற்றில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்விட்டாக மாறி இருக்கிறது. இதற்குமுன் பாப் பாடகி அரீனா கிரான்டே, மான்செஸ்டர் குண்டுவெடிப்பின்போது செய்த ட்விட்தான் அதிகம் லைக் செய்யப்பட்டிருந்தது.

கமல்ஹாசன்:

அண்மைக்காலமாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவு மூலம் தமிழக அரசியல் சூழலை விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வாரம் "அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்? எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாதவரை இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், வெல்வோம்" என்று நேரடியாகவே தமிழக கட்சிகளை விமர்சித்திருந்தார்.

அதேநேரத்தில், இந்தியாவில் கருத்து தெரிவிக்க வேண்டிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள் செய்த ட்விட்டுகள் வேடிக்கையானவை. 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலிவாங்கிய கோரக்பூர் மருத்துவமனை கொடுர சம்பவத்துக்கு சம்பிரதாயமான பதிலைக் கூறிவிட்டு, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை ரீ-ட்விட் செய்வதில் மும்முரமாய் இருந்தார் உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடியோ தனக்கு சுதந்திர தின வாழ்த்துச் சொன்ன, நல்உள்ளங்களுக்கு ட்விட்டரில் நன்றி கூறிக் கொண்டிருக்கிறார். 

சுப்ரமணிய சுவாமி ட்விட்

ட்ரம்ப்பை ஆதரித்து பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ட்விட் செய்திருந்தார். இந்த ட்விட் கருத்துகளை டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரமற்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அதனை ரீ-ட்விட் செய்திருந்தார் சுப்ரமணிய சுவாமி. 

தமிழக அரசியல் தொடங்கி, அமெரிக்கா உள்பட உலக அரசியலை ட்விட்டரில் 140 எழுத்துகளுக்குள் பதிவிடத் தொடங்கி இருக்கிறார்கள் தலைவர்கள். கட்சியோ, அரசியல் விமர்சகரோ, தற்போது அவர்களிடம் இருந்து அறிக்கைகள் வருகின்றதோ இல்லையோ ட்விட் பதிவுகள் வந்துவிடுகின்றன. அரசியல்வாதிகள் பிரச்னைகளைப்  பேசாமல், தங்களைப் பற்றி ப்ரமோஷன் செய்துகொள்ளும் வகையிலான ட்விட்களை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவாக இருந்தாலும் சரி, ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் ஆனாலும் சரி.

'நல்ல விஷயங்களைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தாங்கள் பதிவிடும் கருத்துகளை செயல்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்; அதுதான் சிறப்பு' என்கின்றனர் நெட்டிசன்கள். 140 எழுத்துக்கள் மூலமே இனி அரசியல் சூழல்கள் மாறும் என எதிர்பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close