வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (21/08/2017)

கடைசி தொடர்பு:15:33 (21/08/2017)

மியான்மர் அகதிகள் விவகாரம்; சாட்டை சொடுக்கும் மனித உரிமை ஆணையம்!

மியான்மர் அகதிகள்

மியான்மர் நாட்டிலிருந்து புத்தமதவெறியர்களால் உயிர்பயத்துடன் தப்பி இந்தியா வந்த ரோகிங்யா இசுலாமியர்களை நாடுகடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது குறித்த செய்திகளை வைத்து, தேசிய மனித உரிமை ஆணையம் சுயவழக்காகப் பதிவுசெய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் 40 ஆயிரம் சட்டவிரோத ரோகிங்யா குடியேறிகளைத் திருப்பியனுப்பும் திட்டம் குறித்து செய்திகள் வெளியாகின. ரோகிங்யா இனத்தவர் அயல்நாட்டவர்தான் என்றாலும், ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன் அவர்களும் மனிதர்களே என்பதை மத்திய அரசு ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்க்கவேண்டும் என்றும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படுவோம் எனும் பயத்தில்தான், அவர்கள் இந்திய எல்லையைக் கடந்து இங்கு வந்து வசித்துவருகிறார்கள் என்றும் மனிதவுரிமை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிடுவது அவசியம் என்று ஆணையம் கருதுவதாக, அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகதிகள் தொடர்பான 1951 மாநாடு மற்றும் 1967 நெறிமுறைகளில் இந்தியா கையெழுத்திடவில்லை; ஆனால் நூற்றாண்டுகளாக இந்தியாவானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான அகதிகளுக்கு அடைக்கலம் தந்துவருகிறது; இன்றுவரை நம் நாடானது ஒரு பக்கம் மனித உரிமைகள் தொடர்பானவற்றையும் இன்னொரு பக்கம் தேசியநலன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தையும் சமமாகப் பாவித்துவருகிறது; இந்தியக் குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் வசிக்கும் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கும் அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றமானது தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது என்று மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

அகதிகள்

மியான்மரில் புத்தமத வெறியர்களால் ரோகிங்யா இனத்தவர் குறிவைத்து படுகொலை, பலாத்காரக் கொலைகள் செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மேற்கு ரகைன் பகுதியில் வசித்துவந்த பத்தாயிரக்கணக்கான ரோகிங்யா இசுலாமியர்கள், இந்தியாவுக்குள்ளும் அடைக்கலம் தேடிவந்தனர்; கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் ரோகிங்யா இனத்தவரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கிறது என்றும் இது குறித்து  மியான்மர் மற்றும் பங்களாதேஷ் அரசுகளுடன் மத்திய அரசு பேசிவருவதாகவும் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின என்று குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணையம், மத்திய உள்துறைச் செயலாளர் இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்திய-மியான்மர் எல்லையில் அவர்களைத் திருப்பியனுப்ப வேண்டும் என்றாலோ மியான்மர் அரசு இந்த அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டுக்குள் திரும்ப ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ இவர்களுக்காக புதிதாக அகதிகள் தடுப்புமையங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; செய்திகளில் வெளியாகியுள்ளபடி, மத்திய அரசின் ’அறிவுறுத்தல்’ என்னவென்றால், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் சட்டவிரோதமாக வசிக்கும் அயல்நாட்டினரைக் கண்டறியவும் அவர்களை சொந்தநாட்டுக்குத் திருப்பியனுப்பவும் வேண்டும். ரோகிங்யா இனத்தவரின் விவகாரத்தில், எல்லாவிதமான சட்ட அமலாக்க அமைப்புகளையும் உளவு அமைப்புகளையும் முடுக்கிவிடவேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாகவும் மனித உரிமை ஆணையத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரோகிங்யா

உலக அளவில் அகதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் உடன்படிக்கைகள், பொது சாசனங்களில் கையெழுத்திடாமல், இந்திய அரசு நழுவிவருகிறது; அப்படி பன்னாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டால் அகதிகளை சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு நடத்தவேண்டும்; அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பது கட்டாயம் ஆகிவிடும். இதை ஒரு பக்கம் ஏற்கத்தயங்கினாலும் சீனாவின் உள்நாட்டுப் பிரச்னையால மதரீதியாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள திபெத்தியர்களுக்கு சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளதைவிட அதிகமாகவே உரிமைகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. அதேசமயம், இலங்கையிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னர் வரத் தொடங்கிய இந்திய மரபினரான மலையகத்தமிழர், ஈழத்தமிழர்களிடம் இதற்கு நேர்மாறாகவே நடந்துகொள்கிறது என்பது தமிழர் அமைப்புகளின் பலத்த குற்றச்சாட்டாக நீடிக்கிறது. 

இந்த சூழலில் மியான்மர் ரோகிங்யா இனத்தவரின் அகதி நிலை தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தின் தலையீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்