`கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்!'- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் பதிவு

``கொரோனா வைரஸ் தங்களைப் பாதிக்காது என்று சில மக்கள் நினைப்பதை நான் அறிவேன். ஆனால், ஆரம்பகாலத்தில் பரிசோதனை செய்யாமல் விட்டதுதான் நகரத்தில் பலருக்கும் கொரோனா பரவ காரணமாக அமைந்தது என நம்புகிறேன்."
வாஷிங்டனில், சியாட்டில் என்ற மிகப்பெரிய நகரம் உள்ளது. அமெரிக்காவின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கையும் இப்பகுதியில்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் எலிசபெத் ஷ்னெய்டர் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் பயோ இன்ஜினீயரிங் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நோயுற்றிருந்தபோது ஏற்பட்ட தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் விருந்து ஒன்றுக்குச் சென்று திரும்பியுள்ளார். அங்குதான் இந்தக் கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார். ஆனால், விருந்தில் யாருக்கும் தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விருந்தில் கலந்துகொண்ட 40 சதவிகிதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பின் நாள்களில் அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனைத்து மனிதர்களையும் தவிர்ப்பதைத் தவிர இந்தக் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்பது அவருடைய கருத்து.
தன் உடலில் ஆரம்பகட்ட அறிகுறிகள் குறித்து அவர் பேசும்போது, ``ஒருநாள் காலையில் நான் கண் விழித்தபோது சோர்வாக உணர்ந்தேன். வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது இந்த மாதிரியான சோர்வு ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்று நம்பினேன். இருப்பினும், மதிய வேளையில் காய்ச்சல், உடல் மற்றும் தலை வலியை அதிகமாக உணர்ந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றேன். அன்றைய இரவு எனக்கு 103 டிகிரி உடல் வெப்பநிலை இருந்தது. கடுமையான குளிர் எனக்கு இருந்தது. காய்ச்சல் மருந்துகளை எடுத்துக்கொண்டேன். ஒருவேளை உடல்நிலை தீவிரமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நண்பர் ஒருவரையும் அழைத்திருந்தேன். ஆனால், உடல் வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது" என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைத் தொடர்ந்து எலிசபெத் கவனித்து வந்துள்ளார். இருமல், தும்மல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகள் அவருக்கு இல்லாததால், தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என நினைத்துள்ளார். ஆனால், தனக்கு ஏற்பட்ட காய்ச்சல் வழக்கமானது இல்லை என்றும் அவருக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இருக்கும் அறிகுறிகளுடன் பலருக்கும் இதேபோன்ற காய்ச்சல் இருப்பதை சமூகவலைதளங்கள் மூலம் அறிந்துள்ளார். இதனால், வைரஸ் குறித்த சந்தேகம் அவருக்கு எழத் தொடங்கியுள்ளது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்த அவரது நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். இருமல் மற்றும் சுவாசக் கோளாறு போன்றவை இல்லாததால் அவர்களுக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படவில்லை. எனவே, சியாட்டில் உள்ள மருத்துவப் பரிசோதனை நிலையத்தில் தனது பரிசோதனை மாதிரிகளை அனுப்பி வைரஸ் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளார். மருத்துவர்களும் இவருக்கு மருத்துவ கிட் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், சில நாள்களில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

`எனக்கு ஆச்சர்யமாக இருந்தது' என்று கூறும் எலிசபெத், ``நான் இதைச் சாதாரணமாக நினைத்தேன். முடிவை ஏற்றுக்கொண்டு சிரித்தேன். ஆனால், என்னுடைய தாயிடம் இதைக் கூறியபோது அவர் அழுதார். கடுமையாக நான் பாதிக்கப்பட்டிருந்தால் சாதாரணமாக உணர்ந்திருக்க மாட்டேன். அறிவியல்பூர்வமாக இது மிகவும் சுவாரஸ்யமானது. இறுதியாக நானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டேன் என்பதை சோதனைகள் உறுதிப்படுத்தியது" என்று தெரிவித்தார்.
தொடக்கம் முதலே முறையான பாதுகாப்புடன் அவர் இருந்து வந்ததால், அறிகுறிகள் ஏற்கெனவே அவரிடம் குறையத் தொடங்கியுள்ளன. எனினும், சுமார் ஒரு வாரம் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவரும் தன்னைத் தனிமைப்படுத்தி வசித்து வந்துள்ளார். பின்னர், முற்றிலுமாக அறிகுறிகள் நீங்கியுள்ளது. ஆனால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார். பெரிய கூட்டங்களையும் வெளியில் செல்வதையும் தவிர்த்து வருகிறார். அவரிடம் இருந்தது போன்ற அறிகுறிகளுடன் பயத்தில் இருப்பவர்களுக்குத் தனது அனுபவம் ஆறுதல் அளிக்கக்கூடும் என நம்பிக்கையுடன் முகநூலில் தனது அனுபவத்தை நண்பர்கள் கூறியதற்கு ஏற்ப பகிர்ந்துள்ளார்.
``என்னுடைய செய்தி நீங்கள் பீதி அடைய வேண்டாம் என்பது தான். உங்களிடம் வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வகையில் பாதிப்பு இல்லை என்றால், வீட்டில் உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். சுவாசக்கோளாறு இருந்தால் மருத்துவர்களை உடனடியாகச் சந்தித்து சிகிச்சை பெறுங்கள். அதிகமாக ஓய்வையும் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துவது குறித்து கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

மேலும், ``கொரோனா வைரஸ் தங்களைப் பாதிக்காது என்று சில மக்கள் நினைப்பதை நான் அறிவேன். ஆனால், ஆரம்பகாலத்தில் பரிசோதனை செய்யாமல் விட்டதுதான் நகரத்தில் பலருக்கும் கொரோனா பரவ காரணமாக அமைந்தது என நம்புகிறேன். இளம் வயதினர் யாரும் இறக்க மாட்டீர்கள். ஆனால், குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 60 வயதுக்கு மேலானவர்களுக்கு இந்த நோயைப் பரப்ப நாம் விரும்புகிறோமா? எல்லாரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
எலிசபெத், முகநூலில் அனுபவத்தைப் பகிர்ந்த பின்னர் அந்தப் பதிவு நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இதுவரை ஆயிரக்கணக்கான ஷேர்களையும் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது இந்தப்பதிவு. ``எங்களுடைய பயத்திலிருந்து விடுபட்டதுபோல உணர்கிறோம். உங்களுடைய பதிவுக்கு நன்றி" போன்ற கமென்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.