Published:Updated:

`எங்கள் நலனே அவளுக்கு முக்கியம்!’ -கொரோனா பணியில் இருந்த மருத்துவரின் தற்கொலையால் கலங்கும் நிர்வாகம்

டாக்டர்.லோர்னா எம் ப்ரீன்
டாக்டர்.லோர்னா எம் ப்ரீன்

``கொரோனா தொற்று நோயாளிகள் ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்படுவதற்கு முன்பே இறந்துகொண்டிருக்கும் காட்சியை என்னிடம் மிக வருத்தத்துடன் விளக்கினார். லோர்னா உண்மையிலேயே கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போரிட்டவள்”

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 56,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தோன்றிய இடமாகக் கருதப்படும் சீனாவை விட பல மடங்கு பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, நியூயார்க் மாகாணத்தின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

COVID-19
COVID-19

நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹாட்டன் மருத்துவமனையின் மருத்துவரும், பிரிஸ்பைடிரியன் ஆலன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநருமான டாக்டர். லோர்னா எம் ப்ரீன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது எதிர்பாராத விதமாக லோர்னாவுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்து வந்த அவர் சுமார் ஒன்றரை வாரங்களிலேயே தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதை, நியூயார்க் நகரக் காவல்துறையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மருத்துவரின் தற்கொலைச் சம்பவம் குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்களிடம் அவரது தந்தை பேசுகையில், ``49 வயதான எனது மகள் லோர்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வந்தார். எதிர்பாராத விதமாக, சிகிச்சையின் போது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். அவரின் கடினமான, மன பலத்தால் சுமார் ஒன்றரை வாரங்களிலேயே கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். நியூயார்க் நகரம் இக்கட்டான சூழலில் இருப்பதை உணர்ந்த அவர், மீண்டும் மருத்துவ சேவை புரிய மருத்துவமனைக்குச் சென்றார். லோர்னாவுக்கு ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்த நாங்கள் அவரை சார்லோட்டஸ்வில்லில் உள்ள எங்களது வீட்டிற்கு அழைத்து வரும் முன், மருத்துவமனை நிர்வாகம் லோர்னாவை மீண்டும் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்” என்றார்

`அமெரிக்கக் கொரோனா யுத்தத்தின் போர்வீரர்கள்!’ -ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியர்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``மருத்துவரான எனது மகளுக்கு, தற்கொலை எண்ணத்தை தூண்டும் அளவுக்கு மனநோய் இருந்ததாக தெரியவில்லை. ஆனால், நான் லோர்னாவுடன் கடைசியாகப் பேசிய போது, அவள் மனம் தளர்ந்து இருப்பதாகவும், ஏதோ தவறாக தெரிவதாகவும் நான் உணர்ந்தேன். அப்போது என்னிடம் பேசிய லோர்னா, கொரோனா தொற்றால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகள் ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறந்துகொண்டிருக்கும் காட்சியை என்னிடம் மிக வருத்தத்துடன் விளக்கினார். லோர்னா உண்மையிலேயே கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போரிட்டவள். லோர்னா அவரின் பணியைச் செய்தாள். ஆனால், அதுவே அவளைக் கொன்றுவிட்டது. மேலும், லோர்னா ஹீரோவாகப் புகழப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர் அவ்வாறே இருந்திருக்கிறார். அவள் இறந்தது ஒரு விபத்தாகவே இருக்கட்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

லோர்னா அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றிய பிரிஸ்பைடிரியன் மருத்துவமனை நிர்வாகம் லோர்னாவின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மருத்துவர் லோர்னா மருத்துவமனையில் பணியாற்றிய போது, மிக உயர்ந்த திட்டங்களை அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும் சவாலுடன் நிறுவினார். அவரின் இறப்பு வருத்தமளிக்கிறது. இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் துணை நிற்கிறோம். உண்மையிலேயே லோர்னா எம்.ப்ரீன் ஒரு ஹீரோ’ எனக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

லோர்னாவின் இறப்பு குறித்து அவருடன் கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் சிலர் பேசிய போது, ``அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மையமாக விளங்கும் நியூயார்க் நகரத்தில், அவசரகதியில் பணிபுரிவதால் பல்வேறு மனநல சவால்கள் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. கொரோனாவால் நிகழும் அனைத்து வகையான கொடூரமான சம்பவங்களுக்கும் பதிலளிக்கத் தயாராகிவிட்டோம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என நெருக்கியவர்களுக்குக் கொரோனா சிகிச்சை அளிக்கவில்லை என்றாலும் கூட, உடன் பணிபுரியும் எங்களின் மருத்துவ சகாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இந்நிலையில், டாக்டர் லோர்னா கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் போது, தன்னைக் காட்டிலும் தன்னுடன் பணிபுரிபவர்களின் மேல் அக்கறை கொண்டவராக இருந்தார். உடன் இருப்போரிடம் அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கின்றனவா என மேற்பார்வையிடுவார்” எனத் தெரிவித்தனர்.

`10-ம் வகுப்புத் தேர்வால் கொரோனா பரவல் அதிகரிக்கும்!'- மாற்று யோசனையை முன்வைக்கும் கல்வியாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு