Published:Updated:

`பல நாள்களாக தோண்டிய குழி; கைவசமான ரத்தினக்கல்!’ -ஒரே இரவில் கோடீஸ்வரனான அதிசயம்

``கருநீல கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும் மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும்.”

வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்புமுனையைக் கொண்டு ஒரே இரவில், ஒரே பாடலில் ஒரு நடிகர் பெரும் பணக்காரராக மாறுவதை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஏன்..? நம்மில் பலருடைய மனதிலும் `ஒரே இரவில் பணக்காரராக மாறினால் எப்படி இருக்கும்?' என்ற சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறைவது உண்டு. கனவிலும் திரைப்படத்திலும் காணும் இதுபோன்ற காட்சிகள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நிஜ வாழ்விலேயே நடந்துள்ளது. அவரும் அந்நிகழ்வின் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

விலை உயர்ந்த கல்
விலை உயர்ந்த கல்
AP

ஆப்பிரிக்க கண்டத்தில், 6.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏழ்மையான நாடு தான்சானியா. இந்த நாட்டில் இருக்கும் சுரங்கங்களில் ரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை இயல்பாகவே கிடைப்பது வழக்கம். இருப்பினும் அந்நாடு ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் இந்நாட்டில் அதிகப்படியான பொருள்கள் மறைமுகமாக பலவழிகளில் கடத்தப்பட்டு வருகின்றன. இக்கடத்தலைத் தடுப்பதற்காக சுரங்கத்தை சுற்றிப் பெரிய அளவில் சுவரையும் எழுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.

இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோண்டி தங்கம், ரத்தினம் போன்ற பொருள்களை அடையும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஏதேனும் பொருள்கள் கிடைத்தால் அதை அரசிடம் ஒப்படைத்து அதற்கான தகுந்த சன்மானம் பெறுவதும் உண்டு. இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வரும் அம்மக்களில் ஒருவர்தான் 52 வயதான, சன்னியூ லைசார்.

`சூரிய கிரகணத்தைப் பார்க்க விலையுயர்ந்த ஜெர்மன் கண்ணாடி!'- மோடி பகிர்வால் புதிய சர்ச்சை #CoolestPM

தங்கம், வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் என்ற முயற்சியில் தன் வீட்டின் பின்புறம் பல நாள்களாக குழி தோண்டிக்கொண்டிருந்த லைசாருக்கு கடந்த 24-ம் தேதி அவரின் வாழ்க்கையையே மாற்றப்போகும் விலை உயர்ந்த இரண்டு கற்கள் கிடைத்தன. அவை இந்திய ரூபாயில் 25 கோடி மதிப்புள்ள தான்சானைட் எனப்படும் ரத்தினக் கற்களாகும்.

கருநீலக் கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும். இந்த தான்சானைட் ரத்தினக்கல் அந்நாட்டில் கிடைத்த பெரிய ரத்தினக்கல் ஆகும். இதற்கு முன்பு வரை அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரிய தான்சானைட் ரத்தினக்கல் 3.3 கிலோ எடையுள்ளது.

வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படும் இந்த தான்சானைட் ரத்தினக்கல், ஆபரணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. சன்னியூ லைசாரிடமிருந்து அவ்விரண்டு ரத்தினக்கல்லையும் பெற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடி ரூபாய்க்கான பெரிய அளவிலான காசோலையையும் அன்றே வழங்கியது.

சன்னியூ  லைசார்
சன்னியூ லைசார்
AP

இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சன்னியூ லைசார், ``புதிய செல்வாக்கு வந்ததினால் என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது 4 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 2000 மாடுகளை கவனித்துக்கொள்ள தெளிவாகத் திட்டமிட்டுள்ளேன். சமூக மக்களுக்காக ஒரு வணிக வளாகத்தையும் ஒரு பள்ளியையும் திறக்க திட்டமிட்டுள்ளேன். அதை என் வீட்டின் அருகிலேயே கட்டுவதற்கு விரும்புகிறேன். காரணம், அங்கு அதிகளவிலான ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத ஏழ்மையான சூழலில் வாழ்கின்றனர்” என்றார்.

தான்சானியா நாட்டின் ஜனாதிபதியான ஜான் மகுஃபுலி, லைசாரை போன் மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. காலம் நம் வாழ்வில் துன்பங்களை மட்டுமே தருகிறது என்று யாரும் கவலைப்பட வேண்டாம். காலம் தகுந்த தருணத்தில் நம் வாழ்விலும் இதுபோன்ற ஆச்சர்யங்களையும் நிகழ்த்த நேரிடலாம். எனவே, ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமனதோடு ரசித்து சந்தோஷத்துடன் வாழுங்கள்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு