Published:Updated:

`காரில் உடல், உடையில் ரத்தம், மெயில் பிரின்ட் அவுட்!' -துபாய் காவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொலை

கொலை
கொலை ( மாதிரி படம் )

காரில் அவரது உடலுடன் சுமார் 45 நிமிடங்கள் நகரத்தைச் சுற்றி வந்துள்ளார். இறுதியாகக் காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்து, புர்ஜூமான் சென்டரிலிருந்து சுமார் 4.5 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார்.

துபாயில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தன்னுடைய காரில் வைத்து சுமார் 45 நிமிடங்கள் சுற்றியுள்ளார். பின்னர், காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். இந்த வழக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

டெய்ரா எனும் பகுதியில் உள்ள அல் முரகாபாத் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசுகையில், ``காவல் நிலையத்திற்குள் அவர் நுழைந்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருடைய உடை முழுவதும் ரத்தமாக இருந்தது. மிகவும் பயத்துடன் இருந்தார். எங்களிடம் தனது காதலியைக் கொலை செய்துவிட்டதாக் கூறினார்" என்று தெரிவித்தனர். காரில் அவருடைய காதலியின் உடல் இருப்பதை அறிந்த காவலர்கள் வெளியில் சென்று பார்த்துள்ளனர்.

கொலை
கொலை

மேலும், ``இறந்தவரின் உடல் காரின் முன் இருக்கையில் இருந்தது. அவருடைய தொண்டைப் பகுதியில் வெட்டப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. காரின் பின் சீட்டில் ரத்தத்துடன் இருந்த பெரிய கத்தியையும் கைப்பற்றினோம்" என்றும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையில், இருவரும் சுமார் ஐந்து வருடங்களாகக் காதலித்தது தெரியவந்துள்ளது. ஆனால், அவரை கொலை செய்வதற்கு சில நாள்களுக்கு முன்பு அந்த இளைஞரையும் ஏமாற்றியதாகவும் வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார். தன்னை ஏமாற்றி வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில், புர்ஜூமான் என்ற ஷாப்பிங் சென்டருக்கு அருகில் தனது காதலியைச் சந்தித்துள்ளார். ``என்னை உங்களுடைய மகள் ஏமாற்றிவிட்டாள். இந்த விஷயத்தில் எனக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவளைக் கொன்று விடுவேன்" என இறந்தவரின் குடும்பத்துக்கு மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

`இளைஞர் கொலை; ரயிலில் எஸ்கேப்!' - காதலியுடன் ஆட்டோ டிரைவரை வளைத்த சிவகங்கை போலீஸ்

``அவர் அனுப்பிய மெயில்களின் நகல்களை இரத்தக்கறைகளுடன் என்னிடம் அவர் கொடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்" என்று குறிப்பிட்ட காவலர், ``காரில் இருவருக்கும் இரண்டு மணிநேரம் கடுமையான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தனது குடும்பத்தினர் இந்த இளைஞரை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், வாக்குவாதங்கள் தீவிரமடைந்த நிலையில் அவரைக் கொலை செய்துள்ளார்" எனக் காவலர்கள் கூறியுள்ளனர். முதலில் அவரது மார்பில் கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தொண்டைப் பகுதியில் வெட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்று உணவு மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் ஆகியவற்றையும் வாங்கியுள்ளார்.

கொலை
கொலை

காரில் அவரது உடலுடன் சுமார் 45 நிமிடங்கள் நகரத்தைச் சுற்றி வந்துள்ளார். இறுதியாக காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்து, புர்ஜூமான் சென்டரிலிருந்து சுமார் 4.5 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார். விசாரணையில், பெண்ணைக் கொலை செய்த குற்றத்தை அவரே ஒப்புக்கொண்டார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றமானது விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. குற்றவாளியான இளைஞர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Credits : Gulf News

இறந்த பின் தூக்க மாத்திரைகளை திணித்த தாய்.. 3 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த கொலை!
அடுத்த கட்டுரைக்கு