Published:Updated:

``பஹ்ரைனில் கொரோனா கட்டுக்குள் இருக்க என்ன காரணம்?" களநிலவரம் பகிரும் தமிழர்

பஹ்ரைன்
பஹ்ரைன்

``இது மன்னராட்சி நாடு என்பதால் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது. எனவே, ஒருவர் கைது செய்யப்பட்டால் விடுதலை ஆவது மிகவும் சிரமம். எனவே, காவல்துறை மீது இங்குள்ள மக்களுக்கு எப்போதும் அச்சம் உண்டு."

கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்திவரும் நிலையில், இரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இவற்றின் அண்டை நாடான பஹ்ரைனில் அந்த நாட்டு அரசு மேற்கொண்டுவரும் கடுமையான நடவடிக்கைகளால் கொரோனாவின் பாதிப்பு மிகவும் கட்டுக்குள் இருக்கிறது. மக்கள் கூடுவதற்குத் தடை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் வழக்கம்போல் இயங்குகின்றன. ஊழியர்களும் வேலைக்குச் சென்றுவருகின்றனர். அந்த நாட்டில் தமிழர்கள் அதிகம் வசித்துவரும் நிலையில், அங்கு பணியாற்றிவரும் தமிழகத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரான சிபு சந்திரனிடம் பஹ்ரைனின் நிலவரம் குறித்துக் கேட்டோம்.

பஹ்ரைன்
பஹ்ரைன்

``கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த நான், பஹ்ரைனில் பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன். சவுதி அரேபியாவுக்கு மிக அருகேயுள்ள சிறிய நாடான பஹ்ரைன், 14 லட்சம் மக்கள் வாழும் குட்டித்தீவு. கப்பல் அல்லது விமானம் வழியாக வரலாம். சாலை மார்க்கமாக வந்தால் சவுதி அரேபியா வழியாக மட்டுமே வர முடியும். இரானைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் அதிகம் வசிக்கிறார்கள். கடந்த மார்ச் முதல் வாரத்தில் இரானுக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு இந்த நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அப்போதே உடனடியாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. மேலும், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட தடைவிதித்து, பார்சல் வாங்குவது மற்றும் ஆன்லைன் டெலிவரிக்கு மட்டுமே அரசு அனுமதிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஷாப்பிங் செல்லும்போதும், காய்கறி வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்லும்போதும் கண்டிப்பாக மாஸ்க் மற்றும் கையுறை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.

பஹ்ரைன்
பஹ்ரைன்

பஹ்ரைனில் ஐ.டி நிறுவனங்கள் அதிகம் கிடையாது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள்தாம் அதிகமுள்ளன. எனவே, இந்தியா, அமெரிக்கா நாடுகளைப்போல பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது இங்கு சாத்தியமில்லை. அதனால், இந்த நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்குவதால், ஊழியர்களான நாங்களும் தொடர்ந்து வேலைக்குச் சென்றுவருகிறோம். தினமும் டார்கெட் முடித்துவிட்டால், உடனடியாக அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுவிடலாம். குறைவான ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். அதேநேரம் தினமும் பலமுறை சானிடைஸர் பயன்படுத்தவும், மாஸ்க் அணிந்து பணியாற்றவும், ஓரிடத்தில் பலரும் கூடாமல் இருப்பதும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டின் சுகாதாரத் துறையினர் அடிக்கடி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்குள் நுழைந்து அனைத்துச் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுவதை சோதனை செய்கிறார்கள். தவிர, ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் மசூதியில் இருக்கக் கூடாது. மசூதியில் ஒருவர் 10 நிமிடம் மட்டுமே தொழுகை செய்ய வலியுறுத்தப்படுகிறார். நோய் பரவுவதைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்காமல் இருக்க, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்தவும், கடனுதவி பெற்று லோன் கட்டிவருபவர்களுக்கும் பணத்தைச் செலுத்த மூன்று மாதகால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.

சிபு சந்திரன்
சிபு சந்திரன்

தற்போதுவரை பஹ்ரைனில் கொரோனா அறிகுறியுடன் 25,169 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில், தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள 211 பேரில் 208 பேர் இயல்பான நிலையிலும், 3 பேர் மட்டுமே ஆபத்தான நிலையிலும் இருக்கின்றனர். இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பஹ்ரைனில் மேற்கொள்ளப்பட்டுவரும் காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசுபவர், ``பேருந்துகள் மட்டும் குறைவாக இயங்கினாலும், அதிலும் எல்லாப் பயணிகளும் முறையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன்தான் பயணம் செய்ய முடிகிறது. பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை தரப்படுகிறது.

பஹ்ரைன்
பஹ்ரைன்

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பல்வேறு வீடுகளுக்கும் சென்று, மக்களின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்துவருகின்றனர். சாதாரண காய்ச்சல் இருந்தாலும் மக்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக் கூடாது. மீறிக் கூடினால் உடனே காவல்துறை அங்கு சென்று கூட்டத்தினர் கலைந்து செல்ல உத்தரவிடுகிறார்கள். மீறி நின்றாலோ அல்லது வாக்குவாதம் செய்தாலோ மூன்று மாத சிறைத் தண்டனை உறுதி. அதனால் கடந்த இரண்டு வாரத்தில் பொதுமக்கள் எங்குமே கும்பலாகக் கூடுவதில்லை.

தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள 211 பேரில் 208 பேர் இயல்பான நிலையிலும், 3 பேர் மட்டுமே ஆபத்தான நிலையிலும் இருக்கின்றனர். இருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
பஹ்ரைன் சுகாதார அமைச்சகம்

வதந்தி பரப்பினால் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. வதந்தி பரப்பியவர் யார் என்பதை விரைவாகக் கண்டறிந்து அவரைக் காவல்துறை கைது செய்துவிடும். இது மன்னராட்சி நாடு என்பதால் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது. எனவே, ஒருவர் கைது செய்யப்பட்டால் விடுதலை ஆவது மிகவும் சிரமம். எனவே, காவல்துறை மீது இங்குள்ள மக்களுக்கு எப்போதும் அச்சம் உண்டு. தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சூழலும், அரசு மற்றும் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மக்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்கிறார்கள்.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருக்கும். அண்டை நாடான சவுதி அரேபியாவில் கேளிக்கை விடுதிகளுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதால், அந்த நாட்டினர் பலரும் பஹ்ரைனிலுள்ள கேளிக்கை விடுதிகளுக்கு வியாழக்கிழமை இரவு வந்து வெள்ளிக்கிழமை இரவு திரும்புவார்கள். ஆனால், இதற்கும் தற்போது அனுமதியில்லை. சவுதி மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கடல் வழி பாலம் இரண்டு நாட்டின் சாலைப் போக்குவரத்திலும் மிகவும் முக்கியமானது. அது தற்போது மூடப்பட்டிருந்தாலும், அந்தப் பாலத்தின் வழியாகக் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுவருவதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது.

பஹ்ரைன்
பஹ்ரைன்

விமான சேவை அளித்திருக்கும் சில நாடுகளுக்கு மட்டும் பஹ்ரைனில் இருந்து விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. வெளிநாடுகளிலிருந்து பஹ்ரைனுக்குள் நுழையும் பயணிகளும் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கொரோனா பரவலைத் தடுக்க அரசு நிர்வாகம் துரிதமாக வேலை செய்கிறது. இதனால், கொரோனாவின் பாதிப்பு பஹ்ரைனில் கட்டுக்குள் இருக்கிறது” என்றார் சிபு சந்திரன்.

கொரோனா பாதிப்பால்  காற்று மாசுபடுதலில் நடந்த மாற்றம்! உப விளைவுகளைத் தக்கவைக்குமா உலக நாடுகள்!?
அடுத்த கட்டுரைக்கு