Published:Updated:

கொரோனா: `பாதிப்படைந்த தாயை ஜன்னல் வழியே பார்க்கும் மகன்!’ - மனதை உருக்கும் புகைப்படம்

பாலஸ்தீன இளைஞர்
பாலஸ்தீன இளைஞர்

``மிகவும் மோசமாகப் பாதிப்படைந்த அவரின் தாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தன் தாய் இறப்பதற்கு முன்பு ஜிகாத் அவரை பார்த்துக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்தான் இது.”

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் மனித சமூகம் பார்த்து வருகிறது. பாதிப்படைந்தவர்கள் தொடர்பான அல்லது குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி மனதை உடைத்து நீண்ட துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டுச் செல்லும். அப்படியான மற்றொரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தையும் அதன் பின்னணி கதையையும் பார்ப்போம்.

மருத்துவமனையின் ஜன்னல் ஒன்றின் வெளியே அமர்ந்து இளைஞர் ஒருவர் உள்ளே பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஜிகாத் அல் சுவைத்தி. ஜிகாத்தின் தாய் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கொரோனாவால் பாதிப்படைந்தவர்களை அவரின் உறவினர்கள் உட்பட யாரும் பார்க்க அனுமதி அளிக்கப்படாததால் ஜிகாத் தினமும் இரவு தன் தாயை மருத்துவமனையில் இருந்த ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்த்துவிட்டு செல்வார். மிகவும் மோசமாகப் பாதிப்படைந்த அவரின் தாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தன் தாய் இறப்பதற்கு முன்பு ஜிகாத் அவரை பார்த்துக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்தான் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உ.பி அதிர்ச்சி: குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள்! - உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை

மரணங்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத விஷயமாக இருந்தாலும் அன்புக்கு உரியவர்கள் இறக்கும்போது ஏற்படும் துயரங்களை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. அப்படியான மிகப்பெரிய துயரத்தை ஏந்தி நிற்கும் இந்தப் புகைப்படம் நெட்டிசன்கள் பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் வசிக்கும் பல மக்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் துயரத்துக்கான மொத்த அடையாளமாகவும் கொரோனாவின் கொடூரத்துக்கு மற்றொரு சாட்சியாகவும் இந்தப் புகைப்படம் உள்ளது எனலாம்.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வைரஸ் பரவமால் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு வைரஸ் தொற்று காரணமாக மரணப் படுக்கையில் இருக்கும் நெருங்கிய உறவினர்களைக் கூட பார்க்க முடியாத நிலை நிலவி வருகிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால், நெருங்கிய உறவினர்கள் இறக்கும்போது அவர்களின் இறுதி சடங்குக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்தான் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி தனது தாயை ஜிகாத் பார்த்து வந்துள்ளார். கடைசியாக அவர் பார்த்துவிட்டு சென்ற சிறுதி நேரத்தில் அவரின் தாய் உயிரிழந்துள்ளார்.

கார்ட்டூன்
கார்ட்டூன்

ஜிகாத் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சோகத்துடன் பார்க்கும் புகைப்படத்தை முகமது சஃபா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் சோகமான பின்னணியைக் குறிப்பிடும் விதமாக கூடவே கார்ட்டூன் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ஜிகாத்தின் தாயின் ஆன்மா அவரின் தலையை மெல்ல வருடுவது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்தும் வருகின்றனர். இதைப் பார்த்து மனமுடைந்த நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததோடு இளைஞருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர். ஜிகாத் தன் தாயின் மீது வைத்திருக்கும் அன்பை எந்த வார்த்தைகளாலும் விளக்க முடியாது. அதேபோல, எந்த வார்த்தைகளாலும் ஜிகாத்துக்கு எளிதில் ஆறுதலும் சொல்லி விட முடியாது.

பீகார்:`மருத்துவர்கள், ஆக்ஸிஜன் இல்லை; திணறும் நோயாளிகள்!’ - அதிரவைக்கும் வீடியோக்கள்
அடுத்த கட்டுரைக்கு