Published:Updated:

`அமெரிக்காதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பொறுப்பு!’ - பதிலடி கொடுக்கும் சீனா

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

``இருநாடுகளுக்கும் இடையிலான உறவை சீரான பாதைக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் என நாங்க மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பதற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தென் சீனக்கடல், வர்த்தகம், கொரோனா, சிறுபான்மை மக்கள் தொடர்பான பிரச்னைகள், தைவானுக்கு ஆயுதம் விற்பனை செய்தது மற்றும் ஹாங்காங் புதிய சட்டம் தொடர்பான பல பிரச்னைகளும் இருநாடுகளுக்கு இடையே சென்றுகொண்டிருக்கின்றன. தொடர்ந்து அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில், சீனாவை பழிவாங்கும் வகையில் அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் செங்டு பகுதியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்ப் மற்றும் ஜின்பிங்
ட்ரம்ப் மற்றும் ஜின்பிங்

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென மூட வேண்டுமென அமெரிக்கா ஆத்திரமூட்டும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பித்தது. சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீனா - அமெரிக்கா இடையேயான தூதரக விதிமுறைகள் ஆகியவற்றை அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீறும் விதமாக உள்ளன. சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான நடவடிக்கைகளை கடுமையாக இவை பாதிக்கின்றன. அமெரிக்காவின் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு முறையான மற்றும் தேவையான பதிலை சீனா கொடுத்துள்ளது. சர்வதேச சட்டங்கள், வெளியுறவுகளின் அடிப்படை விதிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் இவை ஒத்துப்போகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

தொடர்ந்து அந்த அறிக்கையில், ``சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் தற்போதைய நிலைமையை சீனா கவனிக்க விரும்பவில்லை. தற்போது நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்காதான் பொறுப்பு. அமெரிக்காவின் தவறான முடிவுகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை சீரான பாதைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் எனவும் நாங்க மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்று வருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற நாடுகளுக்கும் பிரச்னை ஏற்படலாம் என விவாதங்கள் எழுந்து வருகின்றன.

`விண்வெளியிலும் விடாத சண்டை!’ - ஒரேநேரத்தில் விண்கலத்தை அனுப்பும் அமெரிக்கா - சீனா
அடுத்த கட்டுரைக்கு