Published:Updated:

நியூயார்க்கில் `ட்ரம்ப் மரண கடிகாரம்’ - கொரோனா விவகாரத்தில் அதிபரை விமர்சித்த இயக்குநர்

ட்ரம்ப் மரண கடிகாரம்
ட்ரம்ப் மரண கடிகாரம்

``அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு என்ணிக்கையைவிட நியூயார்க்கில் அதிக இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.”

உலகளவில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. அந்நாட்டில் இதுவரை 13,85,834 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 80,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.

வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததுதான் இவ்வளவு அதிகமான பாதிப்புக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையிலும்கூட ட்ரம்ப் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் சீனாவின் மீது வார்த்தைப் போர் நடத்தி வருவதாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இயக்குநர் யுஜின் ஜாரேக்கி
இயக்குநர் யுஜின் ஜாரேக்கி

அமெரிக்காவில் மற்ற மாகாணங்களைவிட நியூயார்க் பகுதியானது கடுமையான பாதிப்புகளை ஆரம்பம் முதலே சந்தித்து வருகிறது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு என்ணிக்கையைவிட நியூயார்க்கில் அதிக இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில், ``அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரைவாகச் செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பை தடுத்திருக்கலாம்” என்று கூறி இறந்தவர்களின் எண்ணிக்கையையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது `ட்ரம்ப் மரண கடிகாரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

`இந்தப் பதிலை என்னிடம் ஏன் சொன்னீர்கள்?’ -பெண் செய்தியாளரின் கேள்வியால் பிரஸ்மீட்டை முடித்த ட்ரம்ப்

பிரபல திரைப்பட இயக்குநர் ஜாரேக்கி, டைம்ஸ் கட்டடத்தில் இந்தக் கடிகாரத்தை நிறுவியுள்ளார். கொரோனா வைரஸ் வெடிப்பால் இந்தப் பலகை காலியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 80,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். உலகளவில் இங்குதான் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. `ட்ரம்ப் மரண கடிகாரமானது’ 48,000-க்கும் அதிகமான எண்ணிக்கையை அதில் காட்சிப்படுத்தியது.

மேலும், ``ட்ரம்ப் நிர்வாகமானது தனிமனித இடைவெளி மற்றும் ஊரடங்கை மார்ச் 16-ம் தேதிக்குப் பதிலாக மார்ச் 9-ம் தேதி அமல்படுத்தியிருந்தால் வைரஸ் தொற்று தொடர்பான 60 சதவிகித இறப்பை தடுத்திருக்கலாம்” என்றும் அந்தக் கடிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அமெரிக்காவின் முன்னணி நோய்த்தொற்று நிபுணர் அந்தோனி ஃபாசி கூறிய கருத்துகளைக் தொடர்ந்து 60 சதவிகிதம் வல்லுநர்களும் பழைமையான கருத்துகளையே கூறி வந்ததாகவும் யுஜின் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் வைரஸ் தொடர்பான விஷயங்களில் அந்தோனி ஃபாசி நம்பகத்தன்மை உள்ள ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

ஃபாசி, ``நீங்கள் முன்பே தணிக்கை செய்யத் தொடங்கியிருந்தால், பலரது உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. ``தேவையில்லாமல் அதிக உயிர்களை இழந்த இந்த நெருக்கடியில் அதிக பொறுப்புள்ள தலைமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் யுஜின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து யுஜின் பேசும்போது, ``போரின் மதிப்பை அளவிட வீழ்ந்த வீரர்களின் பெயரை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னங்கள் பதிக்கப்படுவது போல அதிபர் ட்ரம்ப்பின் தாமதமான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் காரணமாக உயிரிழந்தவர்களைக் கணக்கிடுவது பொதுவெளியில் செயல்பாட்டிற்குப் பயன்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

`உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் பரவாயில்லை!’ - ஒபாமா விமர்சனத்துக்கு ட்ரம்ப் பதிலடி
அடுத்த கட்டுரைக்கு