Published:Updated:

சீனா: `கொடுங்கோன்மை ஆட்சி’ என விமர்சனம் - பேராசிரியர் கைது; கொதிக்கும் நண்பர்கள்

``சீனாவின் தலைமை அமைப்பு நாட்டிலுள்ள நிர்வாக கட்டமைப்பை அழித்து வருகிறது. வைரஸ் பரவிய மையமாகக் கருதப்படும் ஹூபே மாகாணத்தில் நிலவிய குழப்பங்கள் சீன மாகாணங்களில் உள்ள அமைப்பு ரீதியிலான பிரச்னைகளைப் பிரதிபலிக்கிறது.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக சீனா மீது உலக நாடுகள் பலவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. சீனாவுக்கு உள்ளேயும் சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் அதிபர் ஜி ஜின்பிங் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியை விமர்சித்து கட்டுரைகளை எழுதியதாகவும் இதனால், அவரை சீன அதிகாரிகள் சிறை பிடித்து வைத்துள்ளதாகவும் அவரின் நண்பர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா
சீனா

சீன அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த வந்த சட்ட பேராசிரியர், ஜூ சாங்ருன். அந்நாட்டின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான சிங்குவா பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா பரவும் காலத்தில் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தணிக்கை விவகாரங்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் ஜூ கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில், ``சீனாவின் தலைமை, நாட்டிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பை அழித்து வருகிறது. வைரஸ் பரவிய மையமாகக் கருதப்படும் ஹூபே மாகாணத்தில் நிலவிய குழப்பங்கள் சீன மாகாணங்களில் உள்ள அமைப்பு ரீதியிலான பிரச்னைகளை பிரதிபலிக்கிறது. சீனா ஒரேஒரு மனிதரால் வழிநடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மனிதர் கொடுங்கோன்மையான ஆட்சி செய்கிறார். அதிகாரத்துடன் அவர் விளைடாடுவதில் திறமையானவர். இதனால், முழு நாடும் பாதிப்படைந்து வருகிறது” என்று எழுதியுள்ளார்.

கொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்!’ - WHO

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் பொருளாதார மந்தநிலை அரசியல், கல்வி மற்றும் சமூக சீர்குலைவுடன் நாட்டின் மீதுள்ள நம்பிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் பதவியை ஜி ஜின்பிங் நீட்டித்ததுக்கு எதிராகவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், தற்போது பெய்ஜிங் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஜூ 20-க்கும் மேற்பட்ட சீன அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டதாக அவரின் நண்பர் கூறியுள்ளார். தென்மேற்கு நகரமான செங்டூவில் ஜூ விபசாரம் ஒன்றில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஜூ சில சீன அறிஞர்களுடன் செங்டூவுக்கு கடந்த குளிர்காலத்தில் பயணம் மேற்கொண்டதாகவும் இதனுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

 ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

ஜூவின் நண்பர்கள் இந்த குற்றச்சாட்டை அபத்தமானது என்றும் வெட்கமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஜூ கடந்த வாரம் முழுவதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சிங்குவா பல்கலைக்கழகமானது பாடம் நடத்தவும் ஆராய்ச்சிகளைத் தொடரவும் ஜூவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தடை விதித்தது. இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்களும் கல்வியாளர்களும் அவரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்து ஆன்லைன் மனு ஒன்றில் கையெழுத்திட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவில் கருத்து சுதந்திரம் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதன் அடிப்படையில் பலரும் இந்தச் சம்பவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஆளும் கட்சியின் அதிபரை விமர்சிக்கும் விதமாக சீனாவின் அரசியல் விமர்சகரான ரென் சிகியாங் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். அரசங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது.

`அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு