Published:Updated:

`ஜார்ஜ் ஃப்ளாய்டை தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு நபர்’- அமெரிக்காவில் தீவிரமாகும் போராட்டம்

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்

``புரூக்ஸ் குடும்பத்தினரின் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை."

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போராட்டங்கள் உலகின் பல நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான விவாதங்களும் பதற்றங்களும் இன்னும் தணியாத நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் மற்றொரு ஆப்பிரிக்க - அமெரிக்கர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராகவும் மக்கள் தற்போது போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் மீது தொடர்ச்சியாகக் காவல்துறையினர்கள் நடத்தி வரும் தாக்குதல் காவல்துறையினர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்

அட்லாண்டா பகுதியில் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ரேஷார்ட் புரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 27 வயதான புரூக்ஸூக்கு சிறிய வயதில் குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் காரில் இருந்தபடியே தூங்கியதாகவும் இதனால் வாடிக்கையாளர்களின் வருகைக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் உணவகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரணை செய்தபோது புரூக்ஸ் சரியாக ஒத்துழைக்காததால் அவரைக் கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால், புரூக்ஸ் மற்றும் காவலர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காவலர்களிடம் இருந்த துப்பாக்கி ஒன்றை புரூக்ஸ் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற காவலர்கள் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா

காவல்துறையினரின் நடவடிக்கைகள் ஏற்கெனவே அதிக பிரச்னைகளை கிளப்பி இருக்கும் நிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்னும் அதிகமான மக்கள் அட்லாண்டா பகுதியில் போராட்டத்தில் இறங்கினர். புரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட உணவகத்துக்கு வெளியே போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அந்த உணவகத்துக்கு தீயும் வைத்துள்ளனர். ஜார்ஜியா புலனாய்வுத்துறை அதிகாரியான விக் ரெனால்ட்ஸ், ``காவல்துறை அதிகாரிகள் இப்படியான சூழ்நிலையில் தங்களது கொடிய பலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு களத்தில் என்ன நடந்தது என்பதை அறிய உரிமை உண்டு” என்று கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். எனினும், அவரைக் கட்டுப்படுத்த வேறு ஏதேனும் வழிமுறைகளை காவலர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

அட்லாண்டா காவல்துறை துணைத் தலைவர் திமோதி பீக் பேசுகையில்,``அதிகாரிகள் சந்தேகத்துக்கு உரிய நபரை பிடிக்கும் முயற்சியில்தான் தங்களது துப்பாக்கிகளை எடுத்துள்ளனர். ஆனால், அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த வழக்கை விசாரித்து காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்வார்கள். ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடங்கிவிட்டன. இந்தச் சம்பவம் குறித்த உண்மைகள் விரைவில் கண்டறியப்படும்” என்று கூறியுள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழத்தொடங்கின. துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்களை இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

புரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பிரச்னையாகத் தற்போது உருவெடுத்துள்ள நிலையில், அட்லாண்டா காவல்துறையின் தலைமை அதிகாரியான எரிகா ஷீல்ட்ஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை அறிவித்த மேயர் கெய்ஷா லான்ஸ் பாட்டம் புரூக்ஸை சுட்டுக்கொன்ற அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், ``புரூக்ஸ் குடும்பத்தினரின் இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இன்று எடுக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளால் கொஞ்சம் ஆறுதல் அடைவீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பிரவுன் என்ற 29 வயதான இளைஞர் சமூக ஊடகங்களில் புரூக்ஸின் மரணத்தைப் பதிவு செய்த பின்னரே அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரவுன், ``உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் சோர்வை ஏற்படுத்துகின்றன. நீங்கள் என்னதான் தவறு செய்திருந்தாலும், உங்களிடம் ஆயுதமில்லை. நீங்கள் யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை. கைவிலங்கு போடப்பட்டுள்ள நிலையில் நீங்கள் தரையில் கிடக்கிறீர்கள். இருந்தாலும் உங்கள் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்துவதுடன் உங்களைச் சுடவும் அவர்கள் விரும்புகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

`நோ போலீஸ்.. நோ பீஸ்!’ -`chokeholds' தடைக்கு எதிராகக் கொந்தளித்த பிரான்ஸ் காவலர்கள்
அடுத்த கட்டுரைக்கு