Published:Updated:

ஆப்கானிஸ்தான்: பள்ளி,கல்லூரிக்குச் செல்ல தடை;ஆண்களுடன் பேசினால் தண்டனை; உரிமைக்காகப் போராடும் மக்கள்

Afghan Education
News
Afghan Education

”ஆப்கன், பெண்கள் வாழும் நாடல்ல; பெண்களை அடைத்து வைக்கும் சிறை” - டாக்டர் ஹோமைரா காதேரி, ஆப்கன் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

ஆப்கானிஸ்தான்: பள்ளி,கல்லூரிக்குச் செல்ல தடை;ஆண்களுடன் பேசினால் தண்டனை; உரிமைக்காகப் போராடும் மக்கள்

”ஆப்கன், பெண்கள் வாழும் நாடல்ல; பெண்களை அடைத்து வைக்கும் சிறை” - டாக்டர் ஹோமைரா காதேரி, ஆப்கன் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

Published:Updated:
Afghan Education
News
Afghan Education
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 15-ம் நாளை நாம் இங்கு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், அதே ஆகஸ்ட் 15 -ம் நாள் 2021-ல் 20 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபன் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த தினத்தில் ஆப்கனின் சுதந்திரம் கேள்விக்குறியானது.

பல ஆயிரம் மக்கள், ஆப்கானிஸ்தானில் தாலிபனின் ஆட்சிக்குக் கீழ் வாழ்வதைவிட, வேறு நாட்டில் அகதிகளாக வாழலாம் என தாய் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி, பிற நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

தாலிபன் அமைப்பு, 1990களில் இருந்த கட்டுப்பாடுகளும் தடைகளும் இந்த முறை இருக்காது என்றும், பெண்களின் வளர்ச்சியைத் தடுக்கும் எந்தச் சட்டங்களையும் விதிக்கமாட்டோம் என உறுதியாகத் தெரிவித்திருந்தது. குறிப்பாக பெண்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டுக் கல்வி கற்கலாம், வேலைக்கும் போகலாம் என்றனர். 

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய நெறிமுறைகளையும் சட்டங்களையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தமாக அந்த அமைப்பினர் கூற ஆரம்பித்தனர். படிப்படியாகப் பெண்களின் முன்னேற்றத்தை எல்லாம் கட்டுப்படுத்தி, அவர்களை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அடுக்கடுக்காகத் தடைகள்:

இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஆண்கள் தாடியைத் திருத்தக் கூடாது என்பதால், ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாக மூட தாலிபன் அமைப்பு உத்தரவிட்டது. அதேபோல, பல ஆண்டுகளாக ஆப்கன் மக்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான பட்டம் விடுதலை, இளைஞர்களை திசைதிருப்புவதாகவும், இளைஞர்கள் பட்டம் விடுவதால் குரானைப் படிக்காமல், சரியாகத் தொழுகையும் செய்வதில்லை என்று கூறித் தடை செய்தனர். அதேபோல பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு, பாடல்களை ஒலிப்பதற்கும் தடை விதித்தனர். இசை, இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூற, ரேடியோவில் ஆன்மிகப் பாடல்களை மட்டுமே ஒலிக்க தொடங்கின. வெளிநாட்டுச் செய்தி சேனல்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தனர். மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் விதமாக இந்தத் தடைகள் எல்லாம் அமைந்தாலுமே, பெண்களுக்கு எதிராக தாலிபன் விதித்த தடைகள்தான் ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் மீறுவதாக அமைந்தன.

பெண்கள் தங்கள் முகங்களைத் தொலைக்காட்சியில் காட்டக்கூடாது. விளம்பரங்களில் பெண்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது. ரேடியோவிலும் பெண்களின் குரல் ஒலிக்கக்கூடாது. பெண்கள் பொழுதுபோக்குப் பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்லக்கூடாது எனப் பலதரப்பட்ட தடைகளும் கட்டுப்பாடுகளும் அடுத்தடுத்து விதிக்கப்பட்டன. 

தவிர, அரசாங்க வேலையில் இருந்த பல பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பெண்களும் ஆண்களும் சேர்ந்து வேலை செய்யக்கூடாது என்றதும், தனியார் நிறுவனங்கள் பெண்களை வேலையிலிருந்து நீக்கின. கல்வி, மருத்துவம் தவிர மற்ற துறையிலிருந்து பெண்கள் எல்லோரும் வேலையில்லாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

மருத்துவத்திலும், பெண்கள் ஆண்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாது, ஆண் மருத்துவர்களுடன் பேசக் கூடாது, சேர்ந்து வேலை செய்யக் கூடாது என்றது தாலிபன்.

வெளியில் அதிக தூரம் செல்லும்போது, தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஓர் ஆண் துணையுடன் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்ற தாலிபன், பின்னர், பெண்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டே வெளியே வரக்கூடாது என்று பொது இடங்களில் பெண்களின் தடயமே இல்லாமல் அவர்களை ஒடுக்கினர்.

ஆப்கன் பெண் செய்தி வாசிப்பாளர்
ஆப்கன் பெண் செய்தி வாசிப்பாளர்

பெண்களை மொத்தமாக சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தாலிபன் அமைப்பு, தங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை எல்லாம், கடுமையான தண்டனைகள் மூலம் மக்களின் குரலை நெருக்கியுள்ளனர்.

சாலையோரங்களில், கையில் துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் தாலிபன் காவலர்கள், வெளியில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கும் அபயா எனப்படும் உடையை அணிந்திருக்கிறார்களா, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் துணையுடன் வெளியில் வருகிறார்களா என்று குற்றவாளிகளை விசாரிப்பதுபோல தங்கள் நாட்டுப் பெண்களைக் கேள்வி கேட்கின்றனர். இந்த விதிகளைப் பின்பற்றாத பெண்கள் உடனே காவலில் எடுத்து தண்டிக்கப்படுவார்கள். முகத்தை மறைக்காத பெண்களின் கணவர்கள் தங்கள் அரசாங்க வேலையை இழப்பார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் மொத்தமும் அவமானத்தைச் சந்திக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லாத வேறொரு ஆணுடன் வெளியில் சென்றால், அது மிகப்பெரிய குற்றமாகக் கருதி, பொதுவெளியில் அனைவரது முன்பும் தண்டனை வழங்குவதை வழக்கமாக்கியுள்ளனர்.

கல்விக்குத் தடை:

தாலிபன் ஆப்கனைக் கைப்பற்றிய பின், கொரோனாப் பரவலால், பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தனர். பின், இரண்டு மாதங்கள் கழித்து வெறும் ஆண்களுக்கான பள்ளியும், ஆறாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவிகளின் பள்ளி மட்டுமே திறக்கப்பட்டன. இந்த முறை 12-19 வயதுப் பெண்களுக்குத் தனியாக வகுப்பறைகள் அமைத்து, பாடங்களையும் இஸ்லாமியச் சட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றப்போவதாகத் தெரிவித்தனர். மேலும், பல ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்வரை ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது என்றனர்.

பின், பல மாதங்கள் கழித்து பலரின் வேண்டுகோள் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், ஒரே நாளில் மீண்டும் பல இடங்களில் பள்ளிகளை மூடுவதற்கு தாலிபன் உத்தரவிட்டது. மாணவிகள் கண்ணீருடன் வகுப்பை விட்டு வெளியேறினர். அதே சமயம், பல பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை வீட்டைவிட்டு அனுப்பவே பயந்து பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர்.

”எங்கள் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்துப் படித்தாலும், அவர்கள் விரும்பும் வேலைக்குச் செல்ல முடியாது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாகவாவது இருக்கட்டும்” என வேதனையுடன் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உரிமை மீறல்:

அனைத்துத் தடைகளுக்கு மத்தியிலும், எப்படியாவது படித்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த பெண்களின் கனவுகளை எல்லாம் தகர்த்தெரியும் விதத்தில், அடுத்தகட்டமாக பெண்களை கல்லூரிக்குச் செல்லவிடாமல் மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், கல்லூரிக்கு வரும் மாணவிகள் இஸ்லாமிய ஆடை வரைமுறைகளைப் பின்பற்றாததும், ஆண்களுடன் சேர்ந்து படிப்பதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்து மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும் தாலிபன் தெரிவித்திருக்கிறது. உடைகளுக்காக பெண்களின் கல்விக்குத் தடை விதிப்பது, உரிமை மீறல் மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்த்துப் பேசினாலே உயிர் போகும் என்று தெரிந்தும்கூட, தாலிபன் அமைப்பின் மனித உரிமை மீறலை எதிர்த்துப் பல இளைஞர்களும் கல்வியாளர்களும் குரல் கொடுத்துதான் வருகிறார்கள்.

மாணவிகளுக்கு ஆதரவாக, மாணவர்களும் தங்கள் வகுப்புகளையும் தேர்வுகளையும் புறக்கணித்துக் கல்லூரியில் இருந்து வெளியேறியுள்ளனர். பல கல்வியாளர்கள் இந்தத் தடையை எதிர்த்து, ராஜினாமா செய்துள்ளனர். பெண்கள் கடந்த சனிக்கிழமை துப்பாக்கி ஏந்திய தாலிபன் அமைப்பினருக்கு மத்தியில், தைரியமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலிபன் அவர்கள்மீது தண்ணீர் பீரங்கி கொண்டு தாக்கினர்.

உலகத் தலைவர்கள் தாலிபனை வன்மையாகக் கண்டித்து, பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதை தாலிபன் அமைப்பு நிறுத்தாவிட்டால், என்றுமே அவர்களை ஆப்கானிஸ்தானின் ஆதிகாரபூர்வ அரசாங்கமாக உலக நாடுகள் அங்கீகரிக்காது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தாலிபன்களோ இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், போராட்டத்தை ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்திவருகின்றனர்.

தாலிபன் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன், மருத்துவராக வேண்டும், ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் சிறகடித்துப் பறந்தவர்கள், இப்போது வீட்டை விட்டு வெளியில்கூட வர முடியாமல் தவிக்கின்றனர். மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத எந்த அரசும் நீடித்ததில்லை என்பதே வரலாறு!