Published:Updated:

கங்காரு தேசத்தின் கடிவாளம்!

ஃபேஸ்புக், கூகுள்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக், கூகுள்

இந்தச் சட்டம் அமலுக்கு வரும் முன்பே ‘இது சரிப்பட்டு வராது’ எனச் சண்டைகட்டின ஃபேஸ்புக்கும் கூகுளும்.

கங்காரு தேசத்தின் கடிவாளம்!

இந்தச் சட்டம் அமலுக்கு வரும் முன்பே ‘இது சரிப்பட்டு வராது’ எனச் சண்டைகட்டின ஃபேஸ்புக்கும் கூகுளும்.

Published:Updated:
ஃபேஸ்புக், கூகுள்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக், கூகுள்
கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா..? இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கேள்விக்குப் பதில் தேடப் பார்க்கிறது ஆஸ்திரேலிய அரசு. அப்படி என்ன கேள்வி எனக் கேட்கிறீர்களா? ‘சமூக வலை தளங்களால் செய்தி நிறுவனங்கள் அதிகம் ஆதாயம் அடைகின்றனவா, அல்லது சமூக வலைதளங்கள் செய்தி நிறுவனங்களால் அதிகம் ஆதாயம் அடைகின்றனவா’ என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த விவகாரத்தில் பல விவாதங்களுக்குப் பிறகு ஒரு முடிவையும் எட்டியிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.

இன்று சர்வம் டிஜிட்டல் மயம். அனைத்தையும் போல செய்தி ஊடகங்களும் இப்போது டிஜிட்டலில் முழுவீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டன. நன்றாக யோசித்துப் பார்த்தால் சமூக வலைதளங்கள் செய்தி ஊடகங்களுக்கு நேரடிப் போட்டியாளர்கள். இரண்டு தரப்புமே இணையத்தில்தான் இயங்குகின்றன. களத்தில் ஆயிரக்கணக்கான செய்தியாளர்களை வைத்துச் செய்தி நிறுவனங்கள் செய்தி சேகரிக்கின்றன. ஃபேஸ்புக்கும், கூகுளும் வாடிக்கையாளர்களை முதலீடாக வைத்து, அவர்களின் மூலம் கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்து சில காலமாகிவிட்டது. ஆன்லைன் விளம்பர வருமானம்தான் பல செய்தி நிறுவனங்களுக்கும் முதன்மையானதாக இருக்கின்றது. ஆனால், இப்போது ஆஸ்திரேலி யாவின் மொத்த ஆன்லைன் விளம்பர வருமானத்தில் 47 சதவிகிதத்தை கூகுளும், 21 சதவிகிதத்தை ஃபேஸ்புக்கும் அள்ளிப் போட்டு எடுத்துச்செல்கின்றன.

கங்காரு தேசத்தின் கடிவாளம்!

‘செய்தி நிறுவனங்களின் செய்திகள் இல்லாமல் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களால் இதைச் சாதித்திருக்க முடியாது’ என்பதே ஆஸ்திரேலிய அரசின் கூற்றாக இருக்கிறது. இப்படிச் செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்து வளர்ந்துள்ள இந்த டெக் நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்தும்படியான புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியிருக்கிறது ஆஸ்திரேலியா. அதன் பெயர் ‘The News Media Bargaining Code.’ 18 மாதங்கள் நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு Australian Competition & Consumer Commission இந்தச் சட்டத்தை அரசுக்குப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி கூகுளும் சரி, ஃபேஸ்புக்கும் சரி, செய்தி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட தொகையைத் தரவேண்டும். தொகை என்ன என்பதை நிர்ணயம் செய்ய ஒரு நடுவர் ஆணையம் அமைக்கப்படும் என்றது புதிய சட்டம். இதுமட்டுமல்லாமல் தேடல் மற்றும் பரிந்துரை ஆல்காரிதம்களில் ஏதேனும் மாற்றங்கள் வருவதாக இருந்தால் அதை முன்கூட்டியே செய்தி நிறுவனங்களுக்கு டெக் நிறுவனங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும் முன்பே ‘இது சரிப்பட்டு வராது’ எனச் சண்டைகட்டின ஃபேஸ்புக்கும் கூகுளும். அதிலும் ஃபேஸ்புக் சில நாள்களுக்கு முன்பு செய்தி நிறுவனங்களின் லிங்க்குகளை ஆஸ்திரேலிய மக்கள் ஷேர் செய்ய முடியாத வண்ணம் தடை செய்தது. கூகுளும் ‘இந்தச் சட்டம் முழுவதுமாக அமலுக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என அறிவித்தது.

கங்காரு தேசத்தின் கடிவாளம்!

‘எங்களது சேவைகளின் மூலம்தான் பல வாசகர்களைச் செய்தி நிறுவனங்களால் சென்றடைய முடிகிறது, வருமானம் பார்க்க முடிகிறது’ என்கின்றன இரு நிறுவனங்களுமே. இதிலும் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மூலம்தான் செய்தி நிறுவனங்கள் வழங்கும் செய்திகளைப் படிக்கின்றனர்.

பயனர்களின் தகவல்களை அலசி, அவர்களது குணநலன்களைப் புரிந்து, குறிப்பிட்ட பயனர்களுக்குக் குறிப்பிட்ட செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டிப் பெரும்பான்மை யான வருமானத்தை ஈட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், செய்தி நிறுவனங்களுக்கு வரும் விளம்பரங்கள் குறைகின்றன. ‘லாக்டௌன் நேரத்தில் பல செய்தியாளர்களும் டெக் நிறுவனங்களின் இந்தப் போக்கால் தான் வேலை இழந்தனர்’ என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

முதலில் முரண்டு பிடித்த இரு நிறுவனங் களுமே இப்போது அரசுடன் ஒரு ஒப்பந் தத்திற்கு வந்தி ருக்கின்றன. அதன்படி புதிய சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ‘செய்தி நிறுவனங்களுடன் பேசி ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால் நடுவர் ஆணையத்திற்கு வேலை இல்லை’ என்பதே அந்தத் திருத்தம். கூகுள், ஃபேஸ்புக் இரண்டுமே பயந்தது அந்த விலை நிர்ணயத்தைப் பார்த்துத்தான். அது இல்லாததால் அரை மனதுடன் புதிய சட்டத்திற்கு இயைந்து நடக்க முடிவெடுத்திருக்கின்றன.

இதனால் இப்போதே பல செய்தி நிறுவனங்களுடன் பெரும் தொகைக்கு ஒப்பந்தங் களைக் கையெழுத்திட ஆரம்பித்திருக்கிறது ஃபேஸ்புக். ‘பணம் கட்டிப் படிக்கும் ப்ரீமியம் கட்டுரைகளும் இனி ஃபேஸ்புக்கில் படிக்கமுடியும்’ என அறிவித்திருக்கிறது. டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக திடமாக நின்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆஸ்திரேலிய அரசுக்கு இணையச் செயற்பாட் டாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸிலும் இதேபோன்ற ஓர் ஏற்பாட்டை கூகுள் செய்ய உள்ளது. இந்தியச் செய்தி நிறுவனங்களுக்கும் இதனால் நம்பிக்கை வந்துள்ளது. 2018-ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய ஆன்லைன் விளம்பரங்களுள் 68 சதவிகிதத்தை ஃபேஸ்புக்கும், கூகுளும்தான் கைப்பற்றியிருந்தன. தற்போது இந்தியச் செய்தித்தாள் சங்கம், கூகுளிடம் விளம்பர வருமானத்தில் 85 சதவிகிதப் பங்கைக் கேட்கிறது. இதற்கு இந்த டெக் ஜாம்பவான்கள் என்ன பதில் சொல்லப் போகின்றன என்பது இனிதான் தெரிய வரும்.

ஆஸ்திரேலியா கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டம் மற்ற நாடுகளிலும் இதே போன்ற ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஏற்கெனவே இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இதைப் பரிசீலிக்க ஆரம்பித்து விட்டன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism