Published:Updated:

`கொரோனா இருப்பதைப்போல செயல்படுங்கள்!’ -நியூசிலாந்து பிரதமரின் வைரஸ் தடுப்பு அட்வைஸ்

பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்
பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்

`உங்களின் நடவடிக்கைகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றொருவருக்கு ஆபத்தை விளைவிக்கும். நாம் அனைவரும் இணைந்து இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்'

சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த வைரஸால் இதுவரை சுமார் 4,00,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல நாடுகளும் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. அவ்வகையில் நியூசிலாந்தின் பிரதமரும் ஒரு மாதம் ஊரடங்கை அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் இதுவரை 200-க்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஊரடங்கு தொடர்பாக பேசும்போது,``வைரஸைக் கட்டுப்படுத்தவும் சங்கிலித் தொடராகப் பரவுவதை உடைக்கவும் இன்று நள்ளிரவு முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. எந்தவிதமான தவற்றையும் செய்யாதீர்கள். உங்களின் நடவடிக்கைகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றொருவருக்கு ஆபத்தை விளைவிக்கும். நாம் அனைவரும் இணைந்து இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் ஆகியோரைத் தொடுவதை நாம் தவிர்க்க வேண்டும். பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நடந்ததும் இங்கு நடப்பதும்... ஒரு நேரடி அனுபவத்துடன் 'கொரோனா' பாடங்கள்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ``நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தால், ஒரு எளிய வழியைப் பின்பற்றுங்கள். உங்களிடம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதைப்போல செயல்படுங்கள். பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருங்கள். சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ளுங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நியூசிலாந்தில் முக்கியமான சேவைகள் அனைத்தையும் ஒருமாதம் முடக்கியுள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றையும் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள், மருந்தகங்கள், வங்கிகள் ஆகியவை செயல்படும் என்றும் சாலைகளில் நடக்கும்போது ஒவ்வொருவருக்கும் இடையில் 2 மீட்டர் இடைவெளி விட்டு நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இத்தாலி முதல் இந்தியா வரை.. குறையாத கொரோனா வீரியம்..! -  `இன்று, நேற்று’ ஒப்பீடு
அடுத்த கட்டுரைக்கு