Published:Updated:

Corona: `50,000 பேர் பலி; 1 மில்லியன் பாதிப்புகள்!’ - அலட்சியத்தால் திணறும் பிரேசில்

பிரேசில்
பிரேசில்

``பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அன்று பிரேசிலில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தொடர்ந்து அதிகரித்து வந்த பாதிப்புகள் மற்றும் அரசின் அலட்சிய நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை 1 மில்லியன் பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகின.”

கொரோனா வைரஸால் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றன. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற முக்கியமான நாடுகள் பலவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளவில் சுமார் 1,83,020 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 1,16,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் புதிய ஒருநாள் உச்சம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாகக் கடந்த ஜூன் 18-ம் தேதி 1,81,232 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தனர். வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையும் விடுத்துவருகிறது.

பிரேசில்
பிரேசில்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்படைந்த இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் 10,85,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இந்தநிலையில், தற்போது அங்கு வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50,000-த்தைக் கடந்துள்ளது என பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முறையான மற்றும் தொடர்ச்சியான பரிசோதனைகள் அங்கு இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் ஒவ்வொருநாளும் சராசரியாக 1,000 பேர் இந்த வைரஸுக்கு பலியாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வார இறுதிநாள்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அன்று பிரேசிலில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தொடர்ந்து அதிகரித்து வந்த பாதிப்புகள் மற்றும் அரசின் அலட்சிய நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை 1 மில்லியன் பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகின.

`WHO-வுக்கு எச்சரிக்கை; மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிரேசில்!’ - ட்ரம்ப்பை பின்பற்றும் பொல்சனாரோ?

பொருளாதாரம் மற்றும் அதிபரின் சுய அரசியல் கொள்கைகள் காரணமாக அந்த நாடு இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். வைரஸ் பாதிப்பு தொடர்பான அலட்சிய நடவடிக்கைகளால் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு ஆதரவு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிபர் பொல்சனாரோவின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஒத்து இருப்பதால் `ட்ரோபிகல் ட்ரம்ப்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பொல்சனாரோவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மோதலின் காரணமாக பிரேசில் நிரந்தர சுகாதாரத்துறை அமைச்சர்கூட இல்லாமல் திணறி வருகிறது. மலேரியா மருந்து மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறார். ஆனால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இது வைரஸைவிட மிகவும் ஆபத்தான செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்

கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் மற்றும் ப்ளாக் லிவ்ஸ் மேட்டர் உள்ளிட்ட போராட்டங்கள் பிரேசில் முழுவதும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசுகையில், ``எங்களுடைய நோக்கமும் ஆயுதப்படைகளின் நோக்கமும் நாட்டை பாதுகாப்பதுதான். இது ஜனநாயகத்தை பாதுகாப்பதாகும். நாங்கள் பிரேசிலிய மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

பிரேசிலின் உச்ச நீதிமன்றத்துக்கும் பொல்சனாரோவுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுவதாகவும் இதனால், நாட்டில் பதற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு எதிரான விமர்சனங்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்புகள் பிரேசிலில் அதன் உச்சநிலையை அடைந்து வருவது மக்களிடையே அச்சத்தையும் சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

`உலகளவில் 2-ம் இடம்; இணையத்திலிருந்து எண்ணிக்கையை நீக்கிய அரசு!’ - அச்சத்தில் பிரேசில் மக்கள்
அடுத்த கட்டுரைக்கு