Published:Updated:

`அனைவரும் இணைந்து செயல்படுவோம்!’ - கொரோனா பாதிப்புக்கு உள்ளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கொரோனா வைரஸால் இதுவரை 11,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய்க்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 24,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபலங்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ``கொரோனா பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் கடந்த 24 மணிநேரமாக மிகச்சிறிய அளவில் எனக்கு இருந்தன. இதுதொடர்பான பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், நான் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறேன். வீட்டிலிருந்தே பணிகளைத் தொடர்ந்து செய்வேன். வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வீடியோ வழியாக அதிகாரிகளை வழிநடத்துவேன். அனைவரும் இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக செயல்படுவோம். வீட்டிலேயே இருங்கள்” என்று பேசியுள்ளார்.

பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதை அடுத்து மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். பிரிட்டனில் கொரோனா வைரஸால் இதுவரை 11,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டின் பிரதமருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ் விட்டி என்பவரின் தனிப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் பிரதமருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பரிசோதனை முடிவு நேர்மறையாக வந்துள்ளது என்றும் அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

`கொரோனா அமெரிக்காவின் ஆயுதமா?..1981 நாவல்!’ - #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #FactCheck
அடுத்த கட்டுரைக்கு