Published:Updated:

`கனவு என்றுதான் நினைத்தேன்!' - நிச்சயதார்த்த மோதிரத்தை நிஜத்தில் விழுங்கிய பெண்

எனக்கு அவர்களிடம் சொல்வதற்குப் பதற்றமாக இருந்தது. நான் நடந்ததை விளக்கிய பிறகு, அவர்கள் `அப்பர் எண்டாஸ்கோப்பி’ செய்ய வேண்டும் என்றனர்.

woman swallows ring
woman swallows ring

`கனவு காணுங்கள்’ என்று பலரும் கூறுவதுண்டு. அப்படியான ஒரு கனவு, ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது. என்ன நடந்தது. இதை உங்களால் நம்ப முடிகிறதா... இல்லையென்றால் கலிஃபோர்னியாவில் இருக்கும், ஜென்னா ஈவண்ட்ஸின் ஃபேஸ்புக் பதிவைப் பாருங்கள். இதுவரை 60,000-க்கும் அதிகமானோர் அவரது பதிவை ஷேர் செய்துள்ளனர். கலிஃபோர்னியாவின் சான்டியாகோ மாகாணத்தில் வசித்துவருபவர் ஜென்னா. அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த மோதிரம்தான், ஜென்னாவின் ஃபேஸ்புக் பதிவுக்கும் வைரலுக்கும் காரணம்.

Jenna Evans
Jenna Evans

ஜென்னா தனது ஃபேஸ்புக்கில், ``நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிவிட்டேன். மோதிரத்தை விழுங்குகிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால், அது கனவு என்று நினைத்துவிட்டு, மீண்டும் தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, என் கையில் மோதிரம் இல்லாததை உணர்ந்தேன். நான் மோதிரத்தை விழுங்கிவிட்டதாகக் குடும்பத்தினரிடம் கூறினேன். அவர்கள் நான் கூறியதை நம்பவில்லை. உடனே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். அங்கு சென்று என் நிலைமையை விளக்கவே நான் சிரமப்பட்டேன். காரணம், ஒருபுறம் சிரிப்பையும் மற்றொருபுறம் அழுகையையும் தாங்கிய மனநிலையில் இருந்தேன். எக்ஸ்ரே எடுத்து, என் வயிற்றில் மோதிரம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பின்னர், என் வருங்கால கணவர் பாபியுடன், மற்றொரு புதிய மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள டாக்டர்களைச் சந்தித்தேன். எனக்கு அவர்களிடம், நடந்ததைச் சொல்ல பதற்றமாக இருந்தது. நான் விளக்கிய பிறகு, அவர்கள் `அப்பர் எண்டாஸ்கோப்பி’ செய்ய வேண்டும் என்றனர். பின்னர், ஃபார்ம் ஒன்றில் கையெழுத்துப் போடுமாறு கூறினர். நான் அழுதுவிட்டேன். காரணம், ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்ன செய்வது, இந்த பாபியைக் கரம்பிடிக்க நீண்டநாள் போராடியிருக்கிறேன். மயக்க மருந்தைக் கொடுத்து, அப்பர் எண்டாஸ்கோபி மூலம் என் வயிற்றிலிருந்த மோதிரத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர்.

ring
ring

மோதிரத்தை அவர்கள் என்னிடம் கொடுக்காமல், பாபியிடம் கொடுத்தனர். எனக்கு மனமகிழ்ச்சியாக இருந்தது. நான் பாபியிடம் மோதிரத்தைக் கொடுக்குமாறு கேட்டேன், அவர் மாட்டேன் என மறுத்துவிட்டார். இறுதியாக, இன்று காலை என் மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மீண்டும் விழுங்க மாட்டேன் என்று நான் உறுதியளித்தேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு 60,000 ஷேர் மற்றும் 36,000 கமென்ட்டுகளுடன் செம வைரலானது. ``சூப்பர்! நீங்கள் இதை ஒரு புத்தகமாகவோ, சிறுகதையாகவோ எழுதலாம்’ என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.