Published:Updated:

`அமெரிக்க போராட்டம் பற்றிய கேள்வி... 21 விநாடிகள் அமைதி’ - ட்ரம்ப்பின் பெயரை தவிர்த்த ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

``தற்போது கனடாவில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ ஏற்றுக்கொண்டார். கண்ணுக்குத் தெரியாத அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவைப் போலவே அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் தொடர்பான போராட்டங்களும் திணறடித்துவருகின்றன. ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போராட்டத்தால் அமெரிக்காவின் சாலைகள் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. `என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்ற ஜார்ஜின் கடைசிக் குரல், அமெரிக்க எல்லைகளைக் கடந்து உலகின் பல நாடுகளிலும் மக்களின் போராட்டக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. உலக அளவில் உள்ள பல்வேறு தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்கு தங்களது கண்டனங்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தச் சம்பவம் குறித்து ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிபர் ட்ரம்ப்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் அப்டேட் தொடர்பாக, தினசரி செய்தியாளர்களைச் சந்திக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பத்திரிகையாளர்கள், ஜார்ஜ் கொல்லப்பட்டது குறித்தும் அங்கு நடந்துவரும் போராட்டங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து அவருடைய பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு ஜஸ்டின் ட்ரூடோ பேசவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன், சுமார் 21 வினாடிகள் அமைதியாக இருந்து, பின்னர் அவர் பேசத் தொடங்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நீண்ட அமைதிக்குப் பிறகு பேசத் தொடங்கிய ஜஸ்டின் ட்ரூடோ, ``அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகளை திகில் கலந்த கலக்கத்துடன் கவனித்துவருகிறேன். பல ஆண்டுகளாக அம்மக்களுக்கான அநீதிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மக்களை ஒன்றிணைப்பதற்கும் கவனிப்பதற்குமான நேரம் இது” என்று கூறியுள்ளார்.

அப்போது, ட்ரம்ப் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலில், ட்ரம்ப்பின் பெயரை மீண்டும் குறிப்பிடவில்லை என்கின்றனர். தொடர்ந்து பேசிய அவர், ``நம்மில் பலருக்கு, உள்ளேயும் கண்ணுக்குத் தெரியாத இனப் பாகுபாடுகள் அதிகமாக உள்ளன” என்றும் குறிப்பிட்டார். ட்ரம்ப்பின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுக் கேட்கும்போது, ``கனடாவின் பிரதமராக எனக்கு இருக்கும் பணி கனடா மக்களுக்காக நிற்பதுதான்” என்று பதிலளித்துள்ளார்.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா

மேலும், ``எனக்குத் தெரியாத உண்மையாக நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி விவரிக்க அல்லது நான் உணராத ஒரு வலியைப் பற்றி பேச நான் இங்கு வரவில்லை. நம்முடைய அரசாங்கமும் நடப்பவற்றை கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார். ஜஸ்டின் ட்ரூடோ நிறவெறிக்கு எதிராக பலமுறை குரல்கொடுத்து வந்ததாகக் கூறினாலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தேர்தல் நேரத்தில் வெளியான அவருடைய புகைப்படம், அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோ முகம், கழுத்து மற்றும் கைகளில் கறுப்பு மை பூசி, வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். ட்ரூடோவின் இந்தப் புகைப்படம், நிறவெறியை வெளிப்படுத்தியதாகக் கண்டனங்கள் எழுந்தன. இதனால், தேர்தல் பிரசாரத்தில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து ஜஸ்டின் ட்ரூடா விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்தார். பின்னர், ``நான் சரியானவன் அல்ல. நான் சிறுவயதில் அதைச் செய்திருக்கக் கூடாது” என்றும் கூறினார். எனினும், தற்போது கனடாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ ஏற்றுக்கொண்டார். கண்ணுக்குத் தெரியாத அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரமடைந்த பின்னர், கனடாவின் சில பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்
AP

ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாதது தொடர்பாக ஜஸ்டின் மீது பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பாக டொராண்டோவின் அரசியல் அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் நெல்சன் வைஸ்மேன், ``ஜஸ்டின் ட்ரூடோவின் பதில்கள் மூலம் அவர் ட்ரம்ப்பை நேரடியாக விமர்சிக்கப்போவதில்லை என அர்த்தப்படுத்தியிருக்கலாம். பிரதமரின் கருத்துகள் ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக விமர்சிப்பதாகவும் கருதலாம். அவர் புத்திசாலியாக செயல்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

`கொரோனா பரவல்... தீவிரமடையும் போராட்டம்... கவலையில் ஆட்சியாளர்கள்!’ - சிக்கித் தவிக்கும் அமெரிக்கா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு